வடக்கு மாகாண சட்டத்தரணிகளின் சேவைப் புறக்கணிப்பு வரும் 27ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு நீதிமன்றின் கட்டளையை அவமதித்து ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த நீராவியடிப் பிள்ளையார் ஆலய சூழலில் பௌத்த பிக்குவின் உடலை தகனம் செய்த ஞானசார தேரர் அவர் சார்ந்த தரப்புகளுக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தாக்கல் செய்யப்படும் என சட்ட மா அதிபர் எழுத்துமூல உறுதி வழங்கவேண்டும் என்று சட்டத்தரணிகள் கோரியுள்ளனர்.
வரும் வெள்ளிக்கிழமைக்கு அல்லது அதற்கு முன்னர் சட்ட மா அதிபர் எழுத்துமூல உறுதிமொழியை வழங்காவிடின் சேவைப் புறக்கணிப்பை தொடர்வது குறித்து மீள்பரிசீலனை செய்யப்படும் என்றும் வடக்கு மாகாண சட்டத்தரணிகள் அறிவித்துள்ளனர்.
வடக்கு மாகாண சட்டத்தரணிகளால் முல்லைத்தீவு நீதிமன்றுக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்ட கண்டன ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது.