முல்லைத்தீவு நீதிமன்றில் கட்டளையை நடைமுறைப்படுத்தத் தவறிய முல்லைத்தீவு தலைமையகப் காவற்துறை நிலைய பொறுப்பதிகாரி, உதவிக் காவற்துறை அத்தியட்சகர் உள்ளிட்ட காவற்துறை உத்தியோகத்தர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று தேசிய காவற்துறை ஆணைக்குழுவிடம் வடக்கு மாகாண சட்டத்தரணிகள் வலியுறுத்தியுள்ளனர்.
முல்லைத்தீவு- பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தை ஆக்கிரமித்து விகாரை அமைத்த, பௌத்த பிக்குவின் சடலம், நீதிமன்ற உத்தரவுகளை மீறி, ஆலய வளாகப் பகுதியில் தகனம் செய்யப்பட்டுள்ளது.
நீதிமன்றக் கட்டளையை அவமதித்தவர்களைக் கண்டித்தும் அவர்களுக்கு துணைநின்ற காவற்துறையினரின் செயலைக் கண்டித்தும் வடக்கு மாகாண சட்டத்தரணிகள் இன்று செவ்வாய்கிழமை வடக்கு மாகாணம் முழுவதும் நீதிமன்ற நடவடிக்கைகளைப் புறக்கணித்தனர். முல்லைத்தீவு நீதிமன்ற வளாகத்தில் திரண்ட சட்டத்தரணிகள், வாயில் கறுப்புத் துணி கட்டி தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
அதனைத் தொடர்ந்து முல்லைத்தீவு நீதிமன்ற வளாகத்தில் வடக்கு மாகாண சட்டத்தரணிகள் கூடி அடுத்து முன்னெடுக்கவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்ந்தனர்.