முல்லைத்தீவு நீராவியடிப் பிள்ளையார் ஆலய தீர்த்தக் கேணிக்கு அருகில் கொலம்பே மேதாலங்காதேரருடைய சடலம் பலாத்காரமாக எரியூட்டப்பட்டதன் மூலம் நீதித்துறையின் முகத்தில் கரிபூசப்பட்டிருக்கின்றது.
நீதிமன்றத்தின் உத்தரவைப் புறக்கணித்து, அதற்கு முரணான வகையில் ஓர் இந்து ஆலய தீர்த்தக்கரையில் பௌத்த பிக்கு ஒருவருடைய சடலம் இவ்வாறு எரியூட்டப்பட்டுள்ளது. பேரின மத அகங்காரத்துடன் மேற்கொள்ளப்பட்ட அப்பட்டமான பௌத்த மதத் திணிப்பையே இது வெளிப்படுத்தி உள்ளது. சிங்கள பௌத்த தேசியத்தை முழு மூச்சாகக் கொண்டுள்ள பௌத்த மதச் சண்டித்தனம் இந்தச் சம்பவத்தில் மிகக் கோரமாக தலை நிமிர்த்தி இருக்கின்றது.
சிங்கள பௌத்த தேசியத்தின் கடும் போக்குடைய தீவிரவாதியாகத் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டுள்ள பொதுபலசேனா அமைப்பின் முக்கியஸ்தராகிய கலகொட அத்தே ஞானசாரதேரரின் தலைமையிலான பௌத்த பிக்குகளும், அவர்களின் பின்னால் முல்லைத்தீவுக்குச் சென்று குழுமிய பெரும்பான்மை இனக் குழுவினருமே இந்த அடாவடித்தனத்தைச் செய்துள்ளனர்.
உயிரிழந்தவர் ஒரு பௌத்த பிக்கு. அவருடைய சடலம் எரியூட்டப்பட்ட இடம் இந்து ஆலயத்தின் தீர்த்தக்கரை. அதுவும் பௌத்த மதத்தைச் சேர்ந்த பொதுமக்கள் இல்லாத ஓரிடத்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்து மக்களே முழுமையாக வாழ்கின்ற ஓரிடத்தில் இந்த சண்டித்தனத்தை அவர்கள் காட்டியுள்ளார்கள்.
உயிரிழந்த பௌத்த பிக்குவான கொலம்பே மேதாலங்காதேர உயிரிழப்பதற்கு முன்னர் பிரச்சினைக்குரிய ஒருவராகச் செயற்பட்டிருந்தார். இவர் முல்லைத்தீவு அலம்பில் நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளவுக்குள் அத்துமீறி பிரவேசித்து அதன் ஒரு பகுதியை ஆக்கிரமித்து மதப் பண்புகளுக்கு மாறான வகையில் பௌத்த விகாரையொன்றை அமைத்தவர். அதன் மூலம் மிக மோசமான பௌத்த மதத் தீவிரவாதியாகவும் ஒரு பௌத்த மதச் சண்டியராகவும் அவர் தன்னை வெளிப்படுத்தி இருந்தார் என ஊர்வாசிகள் அவரைப் பற்றி குறிப்பிடுகின்றார்கள்.
பிள்ளையார் ஆலய தீர்த்தக்கரையில் தகனக்கிரியைகள்
அந்தப் பகுதியில் தேசிய பாதுகாப்புக்காக நிலைநிறுத்தப்பட்டுள்ள இராணுவத்தினரதும் பொலிசாரினதும் பாதுகாப்புத் துணையுடன் அந்த இந்து ஆலயப் பகுதிக்குள் இந்த பௌத்த
விகாரையை அவர் கட்டி முடித்திருந்தார்.
இந்த அடாவடித்தனத்தை பிள்ளையார் ஆலய சபையினரும் ஊர் மக்களும் எதிர்த்துக் குரல் எழுப்பினார்கள். ஆனாலும் அவர் தனது ஆக்கிரமிப்பு நடவடிக்கையை நிறுத்தவில்லை. இந்த பௌத்த விகாரை அமைக்கப்பட்ட இடம் வரலாற்றுக்கு முந்திய காலத்தைச் சேர்ந்த பௌத்த மதத் தலம் எனக் கூறிய தொல்லியல் திணைக்களத்தினர் அவருக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து உறுதுணை புரிந்தார்கள். அவர்களுடன் பாதுகாப்புப் படையினரும் பொலிசாரும் இந்த பௌத்த பிக்குவுக்குக் கவசமாக இருந்து பாதுகாப்பளித்தனர்.
இந்தப் பிரச்சினைக்கு சமாதான பேச்சுக்களின் மூலம் தீர்வு காண முடியாத நிலையில் பிள்ளையார் ஆலய சபையினர் நீதிமன்றத்தை நாடி இந்த முறையற்ற செயலுக்கு நீதி கேட்டதுடன், பௌத்த விகாரை நிர்மாணிப்பதைத் தடுப்பதற்கு முயற்சித்தனர்.
ஆனாலும் அவர்களுடைய முயற்சி வெற்றி பெறவில்லை. எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் நீதிமன்றத்தில் இந்தப் பிரச்சினை கொண்டு செல்லப்பட்ட நிலையிலும் அடாவடித்தனமாக பௌத்த விகாரை நிர்மாணிக்கப்பட்டது. தென்னிலங்கையில் இருந்தும் தூர இடங்களில் இருந்தும் பௌத்தர்களையும் பௌத்த பிக்குகளையும் வரவழைத்து, அந்த விகாரையை கோலாகலமாகத் திறந்து வைப்பதில் கொலம்பே மேதாலங்காதேரர் வெற்றி கண்டிருநதார்.
முல்லைத்தீவு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்திலான பௌத்த மத ஆக்கிரமிப்பை நியாயமான நடவடிக்கை என எடுத்துக்கூறி, அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முற்பட்ட முல்லைத்தீவு நீதிமன்றத்தின் செயற்பாட்டுக்குத் தடையுத்தரவு கோரி வவுனியா மேல் நீதிமன்றத்தில் பௌத்த பிக்குகள் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டு அந்த விடயமும் நிலுவையில் உள்ளது.
இத்தகைய ஒரு பின்னணியில்தான் கொலம்பே மேதாலங்காதேரர் புற்று நோய்வாய்ப்பட்டு, கொழும்பு மகரகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காத நிலையில் உயிரிழந்தார். பத்து வருடங்களாக அவர் வசித்து வந்ததாகத் தெரிவிக்கப்படுகின்ற நீராவியடி பிள்ளையார் ஆலயச் சூழலில் அந்த ஆலயத்திற்கான தீர்த்தக்கரையில் அவருடைய இறுதிக்கிரியைகளைச் செய்து சடலத்திற்கு எரியூட்டியுள்ளார்கள்.
கபளீகரத்திற்கான மறைமுக நிகழ்ச்சி நிரல்
இந்து ஆலயங்களுக்கு இறந்தவர்களுடைய சடலங்கள் கொண்டு செல்லப்படுவதில்லை. அதேபோன்று ஆலய வளவிலும், அதன் சுற்றாடலிலும்கூட இறந்தவர்களின் சடலங்களை அஞ்சலிக்காக வைப்பதுமில்லை. இறுதிக்கிரியைகள் செய்வதும் மதக் கலாசாரத்திற்கு முரணானது. ஆனால் இந்து சமயத்தின் இந்த சமயக் கலாசார விழுமியங்களுக்குக் கறையேற்படுத்தும் வகையில் கொலம்பே மேதாலங்காதேரருடைய தகனக்கிரியைகளை ஞானசார தேரர் தலைமையிலான பௌத்த பிக்குகளும் அவர்களுடைய ஆதரவாளர்களான பௌத்த மக்கள் குழுவினரும் செய்துள்ளனர்.
புனிதமான பௌத்த மதத்தை அதன் பெருமைகளை உணர்ந்த மக்கள் மத்தியில் பரப்பி அவர்களுடைய வாழ்க்கை மேம்பாட்டுக்காகச் செயற்பட்ட பிக்கு ஒருவருக்கு நன்றியறிதலாக அவர் வாழ்ந்த இடத்தில் அவருடைய இறுதிக்கிரியைகளைச் செய்த செயலாக இதனைக் கருத முடியாது. ஏனெனில் பௌத்த மதத்தின் மீது பற்று கொண்டவர்கள் எவரும் இல்லாத ஓரிடத்தில் சர்யாகச் சொல்வதானால், பௌத்த மதத்தை ஓர் ஆக்கிரமிப்பு மதமாகக் கருதுகின்ற மக்கள் வாழ்கின்ற பகுதியில் பலாத்காரமாக பௌத்த மதத்தை நிலைநிறுத்த முயன்ற ஒருவருக்கு அடாவடித்தனமாக கௌரவம் அளிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட ஒரு செயலாகவே கருத வேண்டி உள்ளது.
சிறுபான்மை தேசிய இன மக்கள் மீது பௌத்தத்தைத் திணித்து, இந்த நாட்டை ஒரே மதம், ஒரே இனம் என்று மாற்றியமைப்பதற்கானதோர் அரசியல் நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ஒரு செயலேயன்றி, நியாயமான பௌத்த மதத்தின் மீது கொண்ட ஆன்மீகப் பற்றுடைய செயலாக இதனைக் கொள்ள முடியாது.
சிறுபான்மை தேசிய இனமாகிய தமிழ் மக்களின் தனித்துவமான உரிமைகளையும் அரசியல் ரீதியான அதிகார உரிமைகளையும் இல்லாமல் செய்து அந்த இனத்தையே கபளீகரம் செய்வதற்காகவே மறைமுகமான நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை பேரினவாதிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
அதன் நீட்சியாகவே சிறுபான்மை இன மக்கள் மீதும், சிறுபான்மை மதங்கள் மீதும் தொடர்ச்சியாக பௌத்த மதத் தீவிரவாதிகள் பல்வேறு ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் தேசிய பாதுகாப்பை முன்னிறுத்தி பாரம்பரிய தமிழ்ப்பிரதேசங்களில் பாதுகாப்புக்கான கேந்திர முக்கியத்துவம் மிக்க பகுதிகள் என அடையாளம் காட்டி பொதுமக்களின் காணிகளையும் ஊர்மனைகளையும் ஏற்கனவே அரச படைகள் ஆக்கிரமித்திருக்கின்றன. பெயரளவில் அந்த இடங்களை உரியவர்களிடம் பெருந்தன்மையுடன் கையளிப்பதாகக் கூறி பிய்த்துப் பிடுங்கியது போன்று கொஞ்ச கொஞ்ச காணிகளை விடுவிக்கின்ற தந்திரோபாயச் செயற்பாடுகளை படையினரும் ஆட்சியாளர்களும் மேற்கொண்டு வருகின்றனர்.
பல்லினத் தன்மைக்கான அரசியல் பண்புமில்லை சகவாழ்வுக்கான சகிப்புத் தன்மையுமில்லை
அதேவேளை, தமிழ்ப்பிரதேசங்களில் நிலைகொண்டுள்ள பௌத்தர்களான படையினருடைய ஆன்மீகத் தேவையைப் பூர்த்தி செய்கின்றோம் என நியாயப்படுத்திக் கொண்டு இராணுவ முகாம்களுக்கு அருகிலும் பொலிசாரின் தளங்களுக்குப் பக்கத்திலும் புத்தர் சிலைகளை நிறுவுவது, பௌத்த விகாரைகளை அமைப்பது போன்ற மத ரீதியான ஆக்கிரமிப்புச் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளன.
இந்த வரிசையில் முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் பௌத்த விகாரையொன்றை கொலம்பே மேதாலங்காதேரர் அசாத்திய துணிச்சலுட் நிர்மாணித்திருந்தார். படைத்தரப்பைச் சேர்ந்த பௌத்தர்களின் ஆன்மீகத் தேவைக்காகவே இந்த விகாரை அமைக்கப்பட்டது என்று நியாயப்படுத்திய போதிலும், இதன் பின்னணியில்; இன அழிப்பை அடிநாதமாகக் கொண்ட அரசியல் நோக்கம் மறைந்திருக்கின்றது என்பதை எவரும் மறுக்க முடியாது.
அஹிம்சையையும் கருணையையும் காருண்யத்தையும் போதிக்கின்ற பௌத்த மதத்தின் மீது உண்மையான பற்று கொண்டிருப்பவர்கள் ஒருபோதும் பிற மதங்களைப் பின்பற்றுபவர்களுடைய மனங்களைப் புண்படுத்தும் வகையில் நடந்து கொள்ளமாட்டார்கள். உண்மையான பௌத்தர்கள் விட்டுக் கொடுப்பவர்களாக பிற மதங்களின் இருப்பையும் அவற்றின் கலாசாரப் பண்புகளை மதித்துப் போற்றி நடந்து கொள்வார்கள். மத ரீதியான அந்த சகிப்புத் தன்மையும் சக மதங்களின் இருப்பைப் பேணுபவர்களாகவும் அவர்கள் திகழ்வார்கள்.
ஆனால் பௌத்தத்தின் பேரில் மேற்கொள்ளப்படுகின்ற அடாவடித்தனத்தையும், ஆக்கிரமிப்பையும் வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிடுகின்ற மதவெறி பிடித்த அரசியல் ரீதியான செயற்பாடுகளையுமே இங்கு காண முடிகின்றது.
பல்லின அரசியல் பண்பும், பிற இனத்தவரையும் பிற மதத்தவரையும் மதித்துச் செயற்படுகின்ற மனிதாபிமானமும், சக வாழ்வுக்கான சகிப்புத் தன்மையும், அனைத்து மக்களும் இலங்கையர்கள் என்ற உயர்ந்த தேசிய பண்பும் அற்றவர்களாகவே பேரின அரசியல்வாதிகளும், பௌத்த தீவிரவாதிகளும் திகழ்கின்றார்கள். அவர்கள் சிங்கள பௌத்த தேசியத்தின்பால் கொண்டுள்ள வெறித்தனமான பற்றுணர்வே இதற்குக் காரணமாகும்.
தனிச்சிங்களச் சட்டம் கொண்டு வந்தது முதல், சிறுபான்மை தேசிய இனத்தவராகிய தமிழ் மக்களின் நியாயமான அரசியல் உரிமைக்கான ஆயுதப் போராட்டத்தை அதீத இராணுவ பலத்தைக் கொண்டு முறியடித்த பின்னரும், ஒற்றையாட்சியில் பிடிவாதம் கொண்டிருப்பது வரையிலுமான பல்வேறு நடவடிக்கைகளிலும் பேரின அரசியல்வாதிகளின் சிங்கள பௌத்த தேசியத்தின் மீதான அரசியல் வெறியுணர்வு இழையோடி இருப்பதையே காண முடிகின்றது.
சிங்களவர்களைப் போலவே ஏனைய இனங்களைச் சேர்ந்தவர்களும் இந்த நாட்டின் உரித்துடைய குடிமக்கள் என்ற பரந்த அரசியல் பண்பு பேரினவாதிகளிடம் அருகிச் செல்கின்ற ஆபத்தான போக்கே நிலவுகின்றது.
அப்பட்டமான சாட்சியம்
நீராவியடி பிள்ளையார் ஆலயச் சூழலில் இந்துக்களையும் இந்து மதத்தையும் அவமதித்து, அசிங்கப்படுத்தும் வகையில் பௌத்த பிக்கு ஒருவருடைய சடலத்தை அந்த ஆலயத்தின் தீர்த்தக்கரையில் தகனம் செய்து தமது பௌத்த மதக் கடமைகளை நிறைவேற்றியது மட்டுமல்ல. திருகோணமலையில் கன்னியா வெந்நீருற்றுப் பகுதியின் பு}ர்வீக இந்து மத வணக்கத்தலத்தை ஆக்கிரமித்து, அங்கு சென்ற இந்து மதத் தலைவரின் முகத்தில் எச்சில் தேநீரை வீசி எறிந்து அவரை அசிங்கப்படுத்தி, இந்து மதத்தை அவமதித்ததும்கூட சிங்கள பௌத்த மத வெறியுணர்வின் வெளிப்பாடே ஆகும்.
கன்னியா சம்பவத்தில் ஒரு சிங்களப் பொதுமகன் பண்பாடற்ற முறையில் நடந்து கொண்டிருந்தார். ஆனால் முல்லைத்தீவு செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வளவுக்குள் பௌத்த பிக்குகளும் அவர்களின் தீவிர ஆதரவாளர்களுமாகிய பௌத்த மதத்தைச் சேர்ந்தவர்களும் தரக்குறைவான வகையில் நடந்து கொண்டுள்ளார்கள்.
முஸ்லிம்கள் மீதும் தமிழர்கள் மீதும் வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிட்டு, இன, மத ரீதியாக அவர்களை ஆக்கிரமித்து தனிச்சிங்கள நாடாக இலங்கையை மாற்றுகின்ற இலக்கை நோக்கிய பேரினவாதிகளின் செயற்பாடுகள் முன்னரே குறிப்பிட்டது போன்று பல்வேறு வடிவங்களில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இன, மத, சமூக, அரசியல், பொருளாதார ரீதியாக இந்த ஒடுக்குமுறை நடவடிக்கைகள் ஆட்சி அதிகார பலத்தையும், இராணுவ படை பலத்தையும் கொண்டு மேற்கொள்ளப்படுகின்றன. இவற்றை அரசியல் ரீதியாக நியாயப்படுத்தவதற்கு, இனவிகிதாசாரம், பௌத்தத்திற்கு அளிக்கப்பட்டுள்ள மேலாண்மை நிலைமை என்பன ஊன்றுகோல்களாகத் திகழ்கின்றன.
நீராவியடி பிள்ளையார் ஆலயச் சூழலில் மேதாலங்காதேரருடைய இறுதிக்கிரியைகளை மேற்கௌர்வதற்கான வன்முறைச் செயற்பாட்டின்போது பௌத்த பிக்கு ஒருவர் சட்டத்தரணி சுகாசை நோக்கி இந்த நாட்டில் பௌத்த பிக்குவுக்கு முதலிடம் கொடுக்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியாதா என்று வினவி இருந்தார். முரட்டுத்தனம் முறுக்கேறிய நிலையில் இது பௌத்த பூமி என்று இறுமாப்புடன் அவர் நினைவூட்டினார். சிறுபான்மை இனத்தவர்கள் மீதான பேரினவாதிகளின் அடக்குமுறை நடவடிக்கைகளை அப்பட்டமாக வெளிப்படுத்துகின்ற சாட்சியமாக இது நிகழ்ந்திருக்கின்றது.
ஜனநாயகம் தழைத்தோங்குகின்ற நாடு என்ற பெருமையைத் தாங்கியுள்ள இந்த நாட்டிலேயே ஜனநாயகத்தின் நான்கு தூண்களில் ஒன்றாகிய நீதித்துறையை பௌத்த பிக்குகள் அவமதித்து, நீதிமன்றத்தின் உத்தரவை நீராவியடி பிள்ளையார் கோவில் வளாகத்தில் மீறிச் செயற்பட்டுள்ளார்கள்.
தமிழர் தாயாகக் கோட்பாடு மீதான குறி
நீதிமன்றத்தின் உத்தரவு பௌத்த பிக்குகளாகிய தங்களைக் கட்டுப்படுத்த முடியாது. தாங்கள் நீதித்துறைக்குக் கட்டுப்படப் போவதில்லை. அரசியலமைப்பில் பௌத்த மதத்திற்கு அளிக்கப்பட்டுள்ள முதன்மைத் தன்மை என்பது அந்த மதத்திற்கு அளிக்கப்பட்டுள்ள மேலாண்மை நிலையே – என்பதை நீராவியடி பிள்ளையார் ஆலய தீர்த்தக்கரையில் அகங்காரத்துடன் நடத்தப்பட்ட மேதாலங்காதேரரின் தகனக்கிரியைகளின் மூலம் ஞானசார தேரர் தலைமையிலான பௌத்த பிக்குகளும், அவர்களுக்குப் பின்னால் அணி திரண்டிருந்த பௌத்தர்களான சிவிலியன்களும் வெளிப்படுத்தி உள்ளனர்.
முல்லைத்தீவு செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பௌத்த மத ஆக்கிரமிப்பானது வெறுமனே மத ரீதியான ஆக்கிரமிப்பல்ல. பௌத்த மதத்தின் மேலாண்மையை நிலைநிறுத்துவதற்கான சாதாரண ஒரு செயற்பாடுமல்ல. இதற்குப் பின்னால் வலிமையானதோர் அரசியல் பின்னணியும் அரசியல் ரீதியான இலக்கும் இருக்கின்றன.
வடக்கும் கிழக்கும் தமிழர் தாயகம் என்பது தமிழ் மக்களின் அரசியல் ரீதியான கோட்பாடு. இதுவே தமிழ்த்தேசியத்தின் உயிர்நாடி. பேச்சுவார்த்தைகளும் சாத்வீகப் போராட்டங்களும் தோல்வியில் முடிவடைந்ததையடுத்து வட்டுக்கோட்டையில் தனிநாட்டுக்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்தத் தீர்மானத்திற்கு 1977 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் தமிழ் மக்கள் தமது ஒன்றிணைந்து ஏகோபித்த நிலையில் அங்கீகாரம் அளித்து தமிழர் விடுதலைக் கூட்டணியை அமோகமாக வெற்றியடையச் செய்திருந்தனர்.
இந்தத் தனிநாட்டுக் கோரிக்கையின் பின்புலத்திலேயே தமிழ் இளைஞர்கள் ஈழக் கோரிக்கையைi முன்வைத்து ஆயுதமேந்திப் போராடத் துணிந்திருந்தார்கள். ஆயுதப் போராட்டத்தை மிகவும் வலிமையோடு முன்னெடுத்து வடக்கில் நிழல் அரசாங்கத்தைக் கொண்டு நடத்திய விடுதலைப்புலிகள் தமிழ் மக்களின் தாயகக்கோட்பாட்டில் தமது தாயகத்தின் இதயப் பகுதியாக முல்லைத்தீவைக் கருதியிருந்தார்கள்.
துமிழ் மக்களின் தாயகக் கோட்பாட்டைத் தகர்த்து, தாயகப் பிரதேசத்திற்குள் ஊடுருவி சிங்களக் குடியேற்றங்களின் மூலம் இனப் பரம்பலைத் தலைகீழாக்கி இந்த நாடு சிங்களவர்களுக்கே சொந்தம் என்பதை நிலைநாட்டுவதற்காகப் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மனக்காயம் ஆறுமா….?
அதேவேளை பௌத்த மதத்தையும், தமிழ் மக்களின் தாயகப் பிரதேசத்திற்குள் திணித்து மத ரீதியான தனித்துவத்தையும் தகர்த்தெறிய வேண்டும் என்ற நோக்கத்திலேயே புத்தர் சிலைகள் நிறுவப்படுகின்றன. இந்து ஆலயங்கள் அமைந்துள்ள இடங்களிலும் மடுமாதாவின் திருத்தலமாகிய மடு போன்ற இடங்களிலும் பௌத்த விகாரைகளும் நிர்மாணிக்கப்படுகின்றன.
தமிழர் தாயகத்தின் இருதயத்தைப் பிளப்பது என்ற நோக்கத்திலேயே முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் ஆலயப் பகுதியில் பௌத்த விகாரையை அமைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. துரதிஸ்டவசமாக அந்த முயற்சியில் நடுநாயகமாக இருந்து செயற்பட்ட கொலம்பே மேதாலங்காதேரர் நோய்வாய்ப்பட்டு இயற்கை எய்தினார்.
அவர் பௌத்த விகாரை நிறுவிய இடச் சூழலில் அவருடைய இறுதிக்கிரியைகளை நடத்தி, அங்கு ஒரு நினைவுச் சின்னத்தை அமைப்பதன் ஊடாக முல்லைத்தீவு மண்ணில் அழுத்தமான பௌத்த அடையாளத்தை உருவாக்க முடியும் என்ற சிந்தனையின் அடிப்படையிலேயே அடாவடித்தனமாக மேதாலங்காதேரரின் இறுதிக்கிரியைகள் நடத்தப்பட்டிருக்கின்றன என்று கருத இடமுண்டு.
யுத்தத்தின் பின்னரான நல்லிணக்க முயற்சிகள் மீது விழுந்த மரண அடியாகவே இந்தத் தகனக்கிரியைச் செயற்பாடு அமைந்துள்ளது. பௌத்தர்கள் மீதான சந்தேகத்தையும் வெறுப்பையும் அதிகரித்துள்ளது மட்டுமல்லாமல் வரப்போகின்ற ஜனாதிபதி தேர்தலில் எத்தகைய நம்பிக்கையை வைத்து தாங்கள் வாக்களிக்க முடியும் என்ற கடினமான கேள்வயையும் தமிழ் மக்கள் மனங்களில் இந்த நிகழ்வு எழுப்பி உள்ளது.
போரக்குற்றச் செயற்பாடுகளுக்கு பொறுப்பு கூறுதல், காணாமல் போனோருக்குப் பொறுப்பு கூறுதல், அரசியல் கைதிகளின் விடுதலை, அரசியல் தீர்வு போன்ற பிரச்சினைகளுக்கு ஜனாதிபதித் தேர்தலின் ஊடாகவும் தொடர்ந்து வருகின்ற பொதுத்தேர்தலின் ஊடாகவும் தீர்வு காண முடியுமா என்ற பலமான ஐயப்பாட்டையும் நீராவியடி பிள்ளையார் ஆலயச் சம்பவம் தமிழ் மக்கள் மனங்களில் ஏற்படுத்தி உள்ளது.
இந்துக்கள் என்ற ரீதியில் மட்டுமல்ல தமிழர்கள் என்ற ரீதியில் மிக ஆழமான மனக்காயத்தை இந்தச் சம்பவம் ஏற்படுத்தி உள்ளது. நீராவியடி பிள்ளையார் கோவிலின் தீர்த்தக்கரையில் பௌத்த பிக்குவின் தகனக்கிரியைகளைச் செய்து நீதிமன்றக் கட்டளையைப் புறக்கணித்துள்ளதன் மூலம் தமிழ் மக்கள் நீதித்துறையின் மீது மேலும் நம்பிக்கை இழப்பதற்கே வழியேற்பட்டுள்ளது.
அந்தச் சம்பவத்தின் போது சட்டத்தரணி ஒருவரின் மீதும் பொதுமக்கள் மீதும் கருணையையும் காருண்யத்தையும் கொண்டிருக்க வேண்டிய பௌத்தர்கள் தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு நீதிகோரி முல்லைத்தீவில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்து கொண்டிருந்த மக்கள் இந்த மன உணர்வுகளை வெளிப்படுத்தி உள்ளார்கள்.
இந்த நீதிமன்ற உத்தரவுப் புறக்கணிப்புக்கு அரசாங்கமும், அரசியல்வாதிகளும் எந்த வகையில் நீதி வழங்கப் போகின்றார்கள் என்பதும், அதன் ஊடாக மக்கள் எவ்வாறு நீராவியடி பிள்ளையார் ஆலய தீர்த்தக்கரையில் மேற்கொள்ளப்பட்ட இந்துமத விரோத மற்றும் மனிதாபிமான விரோத நடவடிக்கையின் மூலம் அடைந்த மன வேதனைக்கு ஆறுதல் பெறப் போகின்றார்கள் என்பதும் தெரியவில்லை. #முல்லைத்தீவு #நீராவியடிப்பிள்ளையார் #நீதித்துறை #பொதுபலசேனா