ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர், காவற்துறையினரிடமிருந்து தப்பிச் சென்றுள்ளார்.தடுப்புக்காவல் சந்தேகநபர் தப்பித்ததையடுத்து ரிசேவ் காவற்துறை உத்தியோகத்தர்கள் இருவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டதுடன், யாழ்ப்பாணம் தலைமையகப் காவற்துறை நிலையத்தின் பாதுகாப்பும் இன்று புதன்கிழமை அதிகரிக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் தலைமையக காவற்துறை நிலைய போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் நேற்றுமுன்தினம் (30) திங்கட்கிழமை முன்னெடுத்த சுற்றுக்காவல் நடவடிக்கையின் போது ஓட்டுமடம் – பொம்மைவெளிப் பகுதியைச் சேர்ந்த ஒருவர் 25 மில்லிக்கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டார். சந்தேகநபர் விசாரணைகளின் பின்னர் நேற்று யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் முற்படுத்தப்பட்டார்.
யாழ்ப்பாணம் நீதிமன்றில் முற்படுத்துவதற்காக சந்தேகநபர் காவல் நிலைய சிறைக் கூடத்தில் தடுத்துவைக்கப்பட்டார். எனினும் அவர் சில மணிநேரங்களில் காணமற்போனார்.
அதனையடுத்து காவல் நிலைய சிசிரிவி கமராக்களின் பதிவுகளைச் சோதனையிட்ட போது, சிறைக்கூடத்தின் பூட்டு சரிவரப் பூட்டுப்படாமல் இருந்தமையும் அதனை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திய சந்தேகநபர், சிறைக் கூடத்தைத் திறந்து சாதாரணமாக முன் வாயில் ஊடாக வெளியேறிச் செல்வதும் தெரியவந்தது.
அதனையடுத்து சந்தேகநபரைத் தேடும் பணியில் காவற்துறையினர் ஈடுபட்டனர். எனினும் அவர் தலைமறைவாகியதால் காவற்துறையினரின் முயற்சி தோல்வியடைந்தது. இந்த நிலையில் ரிசேவ் காவற்துறைக் கடமையிலிருந்த உத்தியோகத்தர்கள் இருவரும் இன்று பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
அத்துடன், யாழ்ப்பாணம் தலைமையக காவல் நிலைய பிரதான வாயில் படலை மூடப்பட்டு காவற்துறை உத்தியோகத்தர் ஒருவர் விழிப்பு நிலையில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார். மேலும் காவல் நிலையத்துக்குள் பொதுமக்கள் எழுந்து நடமாடுவதற்கு தடை விதிக்கப்பட்டு பாதுகாப்பு இறுக்கப்பட்டுள்ளது.-