யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் அதிபர் சதா நிமலனனின் விளக்கமறியல் வரும் 15ஆம் திகதிவரை நீடித்து கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் மாணவர் அனுமதிக்கு கையூட்டுப் பெற்று ஊழலில் ஈடுபட்டார் என்று அந்தக் கல்லூரியின் அதிபர் சதா நிர்மலன் கடந்த 20ஆம் திகதி நண்பகல் இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சாட்டுதல்களை புலன் விசாரணைகளை முன்னெடுக்கும் ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்டார்.
அவர் அன்றைய தினம் மாலை பருத்தித்துறை நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார். அவரை நேற்று 3ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றம், தொடர் விசாரணைகளை கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் முன்னெடுக்க அனுமதியளித்தது. இந்த நிலையில் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் அதிபர் சதா நிமலன் நேற்று வியாழக்கிழமை முற்படுத்தப்பட்டார்.
குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு எதிராக பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என்று மன்றுரைத்த இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சாட்டுதல்களை புலனாய்வு செய்யும் ஆணைக்குழு, விசாரணைகளைத் தொடர்வதற்கு அவரது விளக்கமறியலை நீடிப்பதற்கு விண்ணப்பம் செய்தது. வழக்கை விசாரித்த நீதிவான், அதிபர் சதா நிமலனின் விளக்கமறியலை வரும் ஒக்ரோபர் 15ஆம் திகதிவரை நீடித்து உத்தரவிட்டார்.–