Home இலங்கை திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..

திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..

by admin

பல்வேறு கடினமான நிலைமைகளைக் கடந்து நாட்டின் எட்டாவது ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. நவம்பர் மாதம் 16 ஆம் திகதி நடைபெறவுள்ள இந்தத் தேரதல் பல்வேறு வழிகளிலும் முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது. இந்தத் தேர்தல் முடிவுகள் நாட்டின் அடுத்த கட்ட நிலைமைளைத் தீர்மானிப்பவையாக அமையும் என்ற எதிர்பார்க்கப்படுகின்றது.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறைமையில், ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டுள்ள போதிலும், அந்தப் பதவிக்காக 35 பேர் போட்டியிடுகின்ற ஒரு தேர்தல் அனுபவத்தை இந்தத் தேர்தலின் மூலம் நாடு சந்திக்கின்றது. இ;வ்வாறு பெரும் எண்ணிக்கையில் வேட்பாளர்கள் களத்தில் இறங்கியிருப்பது ஜனாதிபதித் தேர்தலில் இதுவே முதற் தடவை.

ஆணைப் பெண்ணாகவும், பெண்ணை ஆணாகவும் மாற்ற முடியாது. இறந்தவர்களை உயிர்ப்பிக்க முடியாது. இவை தவிர்ந்த ஏனைய அனைத்தையும் சாதிக்க வல்ல அதிகார பலம் கொண்டது என வர்ணிக்கப்படத் தக்க வகையில் இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறைமை வடிவமைக்கப்பட்டது,

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை நாட்டு மக்கள் நேரடி வாக்களிப்பின் மூலம் தெரிவு செய்கின்றார்கள். ஆனாலும் நிகரில்லாத அதிகார பலத்தைக் கொண்ட இந்த ஜனாதிபதி பதவியை நாடளாவிய ரீதியில் நன்மையளிக்கத்தக்க வகையில் எந்தவொரு ஜனாதிபதியும் இதுவரையில் கொண்டு நடத்தவில்லை.

பல்லினத்தன்மை கொண்ட அரசியல் செல்நெறி உருவாக்கப்படவில்லை

இந்த ஆட்சி முறையை நடைமுறைக்குக் கொண்டு வந்த ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன, அதன் மூலம் இந்த நாட்டின் இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வைக் காணவில்லை. பல ஆண்டுகளாகப் புரையோடிப் போயுள்ள இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு நிறைவேற்று அதிகார பலத்தை, அந்த அரசியல் பிரயோக அதிகாரத்தை அவர் பயன்படுத்தி இருக்க வேண்டும். ஆனால் அவர் அதைச் செய்யவில்லை.

ஒற்றை ஆட்சியை அடிநாதமாகக் கொண்ட இந்த ஆட்சி முறைமையை, பேரின மக்களாகிய சிங்கள மக்களின் சமூக, பொருளாதார, அரசியல் நலன்களுக்காகப் பயன்படுத்தினாரே தவிர, பல்லினத்தவர்களும் நன்மை அடையத் தக்க வகையில் பன்முகத்தன்மையை நிலைநாட்டுவதற்கும் நாட்டு மக்கள் அனைவருக்குமான நல்லாட்சியை நிலைநாட்டவும் அவர் பயன்படுத்தவில்லை.

பல மொழிகளைப் பேசுகின்ற பல்வேறு மதங்களைக் கடைப்பிடிக்கின்ற நாட்டின் அனைத்து இன மக்களையும் இலங்கையர்கள் என்ற ரீதியில் தனித்துவமான உரிமைகளைக் கொண்டவர்களாக ஐக்கியப்படுத்துவதற்கு தனது நிறைவேற்று அதிகார பலத்தைப் பிரயோகிக்க அவர் தவறிவிட்டார்.

இந்த ஜனாதிபதி ஆட்சி முறைமையின் கீழ் நாட்டின் அனைத்து இன மக்களையும், அனைத்து மத சமூகங்களையும் அந்நியோன்னியம் மிக்க புரிந்துணர்வுடைய மக்களாக உருவாக்குவதற்கும் அவர் தவறிவிட்டார். இந்தத் தவறு அவருடன் முடிந்துவிடவில்லை. அடுத்தடுத்து, ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டு, ஆட்சிபீடம் ஏறிய அத்தனை பேரும் இந்தத் தவறையே செய்துள்ளனர்.

இதுகால வரையிலும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிகளாக இருந்தவர்கள் பல்லினத்தன்மை கொண்டதோர் அரசியல் செல்நெறியை உருவாக்கி அதன் ஊடாக இந்த நாட்டை முன்னேற்றுவதற்கு முயற்சிக்கவில்லை.

தான் சார்ந்த அரசியல் கட்சியின் தலைவராகவும், ஜனாதிபதி என்ற வகையில் அதிகார பலமுள்ளதோர் அரசியல்வாதியாகவுமே கடந்த கால ஜனாதிபதிகள் ஒவ்வொருவரும் திகழ்ந்தனர்.

இந்த அதிகார பலத்தைப் பயன்படுத்தி நாட்டு மக்கள் அனைவரையும் தனித்துவமான உரிமைகளைக் கொண்டவர்களாகவும், இலங்கையர்கள் என்ற தேசிய அடையாளம் கொண்ட குடிமக்களாக்கவும் அவர்கள் தவறிவிட்டார்கள்.

பேச்சளவில் மட்டுமே நிலைத்த ஆட்சி மாற்றக் கொள்கைகள்

ஜனாதிபதியாகப் பதவியேற்றிருந்த ஒவ்வொருவரும் தத்தமது கட்சி அரசியல் நலன்களிலும் தனி நபர் என்ற வகையில் சுய அரசியல் நலன்களிலுமே குறியாக இருந்து செயற்பட்டிருந்தனர். முப்பது வருடங்களாகத் தொடர்ந்த ஒரு யுத்தத்தை ஜனாதிபதியாகப் பதவியேற்றிருந்த மகிந்த ராஜபக்ச முடிவுக்குக் கொண்டு வந்திருந்தார். அவர் வகித்த நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியே அதற்கான செயல் வல்லமையை அவருக்கு வழங்கி இருந்தது.

ஆனால் யுத்தத்தில் வெற்றி பெற்றதன் பின்னர் வெற்றிவாதத்தில் அவர் மூழ்கிப் போனார். யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்த சூட்டோடு சூடாக நாட்டின் அனைத்து இன மக்களையும், அனைத்து மதங்களைச் சேர்ந்தவர்களையும் உரிமைகளுடன் கூடிய இலங்கையர்கள் என்ற அடையாளத்தின் கீழ் ஐக்கியப்படுத்துவதற்கு அவர் முயற்சிக்கவில்லை.

நிறைவேற்று அதிகாரத்திற்கு மேலும் வலுவூட்டி, குடும்ப ஆட்சியை நிலைநிறுத்துவதற்காக ஜனநாயக வழிமுறைகளின் அனுகூலங்களைப் பயன்படுத்துவதிலேயே அவர் கவனம் செலுத்தி இருந்தார்.

பௌத்தத்தை முதன்மைப்படுத்தி பேரின மக்களை இந்த நாட்டின் ஏகபோக உரிமை வாய்ந்த குடிமக்களாக்குவதிலும் அவர் தீவிர ஈடுபாடு கொண்டிருந்தார். அவருடைய இந்த அரசியல் நோக்கங்களுக்கு யுத்த வெற்றிவாதமும், அதனுடன் இணைந்த இராணுவமயமாக்கல் கொள்கைச்செயற்பாடுகளும் உறுதுணையாகின. இதனால் அவருடைய ஆட்சி எதேச்சதிகாரப் போக்கில் பயணிக்கத் தொடங்கியது. ஊழல்களும், ஜனநாயக விரோதச் செயற்பாடுகள், மனித உரிமை மீறல்களும் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கின.

இந்த பின்னணியிலேயே ஜனநாயகத்துக்கு உயிரூட்டி நல்லாட்சியை நிறுவுவதற்கான ஆட்சி மாற்றம் 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் தொடங்கி பொதுத் தேர்தலில் நடந்தேறியது. புதிய ஜனாதிபதியாகப் பதவியேற்ற மைத்திரிபால சிறிசேன, அந்த ஆட்சி மாற்றக் கொள்கை நிலைப்பாடுகளைப் பேச்சளவில் கொண்டு சென்றாரேயொழிய நடைமுறையில் எதனையும் அவரால் செயற்படுத்த முடியவில்லை.

அதிகாரப் போட்டி வலைக்குள் சிக்கிய அரச தலைவர்கள்

சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் ஐக்கிய தேசிய கட்சியும் இணைந்து அமைத்த நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதமராகிய ரணில் விக்கிரமசிங்கவும் இந்த ஆட்சி மாற்றத்தின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்குரிய உறுதியான நடைமுறைச் செயற்பாடுகளை மேற்கொள்ளவில்லை. ஆனால் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகார வல்லமையைக் குறைத்து பிரதமரின் அதிகாரக் கரங்களைப் பலப்படுத்தி மக்கள் பிரதிநிதிகள் அவையாகிய நாடாளுமன்றத்தின் செல்வாக்கை அதிகரிப்பதற்கான மாற்றத்தை இருவரும் இணைந்து ஏற்படுத்தி உள்ளார்கள். இதற்கு அவர்கள் கொண்டு நிறைவேற்றிய 19 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் வழிவகுத்துள்ளது.

ஜனாதிபதி ஆட்சி முறைமையை இல்லாமல் செய்யப்போவதாக உறுதியளித்து ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட மைத்திரிபால சிறிசேன அதனை நிறைவேற்றவில்லை. ஆனால் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கொண்டு வந்த 18 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் மூலம் ஒருவர் எத்தனை தடவைகளும் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்படலாம் என்ற நிலைமையை மாற்றி இரு தடவைகளுக்கு மேல் அந்தப் பதவியை ஒருவர் வகிக்க முடியாது என்ற முந்திய அரசியலமைப்பின் நிலைப்பாட்டை 19 வது திருத்தச் சட்டத்தின் மூலம் நிலைப்படுத்தி உள்ளார்.

உலகில் நிறைவேற்று அதிகாரத்தைக் கொண்டுள்ள ஒரு ஜனாதிபதியின் அதிகாரத்தைப் பதவியில் இருக்கும் போது குறைத்த ஒரேயொரு அரசியல்வாதி தானே என்று அவர் அப்போது பெருமையாகக் கூறியிருந்தார். ஆனாலும் இரண்டாவது தடவையாக ஜனாதிபதியாகப் பதவி வகிக்க வேண்டும் என்ற ஆவல், பேராசை அவரை ஆட்டிப்படைத்திருந்தது. இதனால் பெரும் அரசியல் குழறுபடிகள் நடந்தேறியதையும் மறக்க முடியாது.

நல்லாட்சி அரசாங்க உருவாக்கத்தின் நோக்கங்கள் மறைந்து, ஜனாதிபதியும் பிரதமரும் சுய அரசியல் இலாபம் கருதிய அதிகாரப் போட்டி என்ற வலைக்குள் சிக்கிக் கொண்டார்கள். நல்லாட்சி அரசாங்கத்தில் நன்மையான மாற்றங்கள் பலவற்றை எதிர்பார்த்திருந்த நாட்டு மக்கள் அவைகள் இடம்பெறாத காரணத்தினால், அதிருப்தியடைந்தார்கள். ஏமாற்றத்திற்கு உள்ளாகினார்கள்.

எஞ்சியிருக்கும் அரசியல் தீர்வுக்கான ஏக்கம்

நல்லாட்சி அரசாங்கம் அரசியல் உறுதிப்பாட்டை இழந்து தள்ளாடி தடுமாறி எந்தவேளையிலும் கவிழ்ந்து நாடு ஓர் இக்கட்டான நிலைமைக்குள் தள்ளப்படலாம் என்ற நிலைமைக்குள் இழுத்துச் செல்லப்படுவதற்கே இந்த அரச தலைவர்களின் செயற்பாடுகள் வழிவகுத்திருந்தன. ஆயினும் ஆட்சிக் காலத்தை ஒருவாறு கடந்து வந்துள்ள நிலையில் உரிய காலத்தில் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வேட்பு மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுவிட்டன.

இந்தத் தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது? யாருக்கு வாக்களிக்காமல் விடுவது? – என்ற கேள்விகள் நாட்டு மக்கள் மனங்களில் உரமாக எழுந்து நிற்கின்றன. வேட்பாளர்களாகக் களமிறங்கியுள்ளவர்களில் கோத்தாபாய ராஜபக்ச, சஜித் பிரேமதாசா மற்றும் அனுர குமார திசாநாஙக்க ஆகியோரே முன்னணி வேட்பாளர்களாக, பெரும்பாhலான மக்கள் தெரிவுக்கு உரியவர்களாகக் கருதப்படுகின்றார்கள். அத்துடன் இவர்களில் கோத்தாபாய மற்றும் சஜித் பிரேமதாசா ஆகிய இருவருக்கும் இடையிலேயே கடும் போட்டி நிலவும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. அநேகமாக இவர்களில் ஒருவரே ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்படுவார் என்ற கருத்துக் கணிப்பும் உள்ளது.

அதேநேரம் இந்தத் தேர்தலுக்கான முடிவுகளில் இவர்களில் ஒருவர் முதல் படியாகக் கருதப்படுகின்ற அறுதிப் பெரும்பான்மைக்கான 51 வீத வாக்குகளைப் பெற முடியுமா என்ற சந்தேகமும் நிலவுகின்றது. அத்தகைய ஒரு நிலைமை உருவாகுமானால், இந்த இருவருக்கும் வெற்றிவாய்ப்பு கைநழுவி மூன்றாவதாகக் கருதப்படுகின்ற அனுர குமார திசாநாயக்க வெற்றி பெறுகின்ற ஒரு நிலைமையும் உருவாகக் கூடும் என்று தேர்தல் தொடர்பிலான அனுபவம் கொண்ட ஆய்வாளர்கள் கருதுகின்றார்கள்.

இது பொதுவான நிலைப்பாடு. இனப்பிரச்சினையினால் பாதிக்கப்பட்டு அரசியல் ரீதியான ஒரு விடிவுக்காகக் காலம் காலமாக ஏங்கிக்கொண்டிருக்கின்ற சிறுபான்மை தேசிய இன மக்களாகிய தமிழ் மக்கள் தங்களுக்கு இந்தத் தேர்தலினால் எந்தவிதப் பயனும் கிட்டப் போவதில்லை என்ற மன நிலையிலேயே காணப்படுகின்றார்கள். அதற்குக் காரணம் இல்லாமல் இல்லை.

நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் நெருக்கடிகளை அதிகரித்த நடவடிக்கைகள்

இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்படும் என்று உறுதியளித்து தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமையில் தமிழ் மக்களின் ஆதரவுடன் ஆட்சிபீடம் ஏறிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது தேர்தல் கால வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. அத்துடன் ஆட்சிப் பொறுப்பை ஏற்றதன் பின்னர் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள். இராணுவத்தின் வசமுள்ள வலிகாமம் வடக்குப் பிரதேச பொதுமக்களின் காணிகள் விடுவிக்கப்படும் என்று கால நிர்ணயம் செய்து அளித்த உறுதிமொழிகளையும் அவர் காற்றில் பறக்கவிட்டுவிட்டார்.

உறுதிமொழிகளை நிறைவேற்றத் தவறியதுடன், மேலும் மேலும் நெருக்கடிகளை உருவாக்கத்தக்க அரச நடவடிக்கைகளுக்கு ஆட்சியாளர்கள் இடமளித்திருந்தனர். இதனால் பிரச்சினைகள் தீர்க்கப்படும் நன்மைகள் விளையும் என்று எதிர்பார்த்திருந்தவர்களுக்கு துன்பத்துக்கு மேல் துன்பம் ஏற்படுகின்ற நிலைமையே ஏற்பட்டது.

இராணுவத்தின் பிடியில் உள்ள காணிகளை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கை அரசாங்கத்தினால் உரிய முறையில் கவனத்திற் கொள்ளப்படவில்லை. அந்தக் காணிகளை விடுவிப்பதற்கான கோரிக்கைகளை தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பல தடவைகள் அரசிடம் நேரடியாகவும் மாற்றுவழிகளின் ஊடாகவும் முன்வைத்தது. அதேவேளை, பாதிக்கப்பட்ட மக்கள் அரசியல் தலைமைகளைப் புறந்தள்ளி தன்னெழுச்சி பெற்ற போராட்டங்களின் மூலம் அரசுக்குப் பல தடவைகள் கோரிக்கை விடுத்தனர். அந்தக் கோரிக்கைகள் அரசாங்கத்தின் செவிகளில் விழுந்ததாகத் தெரியவில்லை.

ஆனால் விடுவிக்கப்பட வேண்டிய காணிகளை விடுவிப்பதற்குப் பதிலாக தொல்பொருள் திணைக்களம், வனபரிபாலன திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் போன்ற திணைக்களங்களுடைய நடவடிக்கைகளின் மூலமாகவும், மகாவலி அபிவிருத்தி அதிகார சபையின் எல்லையற்ற அதிகாரச் செயற்பாடுகளின் ஊடாகவும் இடம்பெயர்ந்துள்ள மக்களின் காணிகள் அடாவடித்தனமாக ஆளுகைக்கு உட்படுத்தப்பட்டன. இடம்பெயர்ந்த எண்ணற்ற குடும்பங்கள் இதனால் தமது சொந்த இடங்களில் மீள குடியமர முடியாத நிலைமை ஏற்பட்டது.

வலிந்து சென்று மீள்குடியேறியவர்களும் சட்டத்தின் துணைகொண்டு இந்தத் திணைக்களங்களினால் அச்சுறுத்தப்பட்டன. இதனை ஆட்சியாளர்கள் கண்டுகொள்ளவே இல்லை மாறாக நல்லிணக்கம் பற்றியும் மீள்குடியேற்றம், புனர்வாழ்வு பற்றிய அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து பெரிய அளவில் பிரசாரம் செய்வதில் அரசாங்கம் கவனம் செலுத்தியது.

நம்பிக்கைக்குப் பாத்திரமாக ஐக்கிய தேசிய கட்சியும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து உருவாக்கிய நல்லாட்சி அரசாங்க ஆட்சியாளர்களினாலேயே பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியவில்லை. இந்த நிலையில் கோத்தாபாய மற்றும் சஜித் பிரேமதாசா மற்றும் அனுர குமார திசாநாயக்க போன்ற தேர்தலில் முன்னணி நிலையில் காணப்படுகின்ற வேட்பாளர்கள் தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து தேர்தல் காலத்தில் அரசியல் நோக்கத்திற்காகக்கூட சாதகமான முறையில் உத்தரவாதம் எதனையும் அளிக்கவில்லை.

அதேவேளை, யுத்த காலத்தில் தமிழ் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டமைக்கு அப்போது, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் என்ற வகையில் கோத்தாபாய ராஜபக்ச கொண்டிருந்த கடும் போக்கும் கடுமையான இராணுவ செற்பாடுகளுமே காரணம் என தமிழ் மக்கள் உணர்கின்றார்கள். இதனால் அவர் மீது அவர்கள் அரசியல் ரீதியான அச்சத்தைக் கொண்டுள்ளார்கள்.

இக்கட்டான நிலைமை

முன்னரிலும் பார்க்க அரசாங்கத்தின் மறைமுக நிகழ்ச்சி நிரலைக் கொண்ட செயற்பாடுகளினால் பெரும் நெருக்கடிகளுக்கு உள்ளாகியுள்ள நிலையில் கோத்தாபாய ராஜபக்ச மீண்டும் அதிகாரத்திற்கு வந்தால் நிலைமைகள் மேலும் மோசமாகும் என்ற அரசியல் ரீதியான அச்சத்தையே தமிழ் மக்கள் கொண்டிருக்கின்றார்கள்.

வேட்பாளராகக் களம் இறங்கியுள்ள கோத்தாபாய தமிழ் மக்களின் இந்த அச்சத்தைப் போக்குவதற்கு உரிய உறுதிமொழிகளையோ உத்தரவாதத்தையோ இன்னும் அளிக்கவில்லை. தன்னைக் கண்டு தமிழ் மக்கள் அச்சமடைய வேண்டிய அவசியமில்லை என அவர் கூறியிருந்தாலும், அவருடைய கூற்று அந்த அச்சத்தைப் போக்கக்கூடிய நம்பிக்கைக்குரியதாகக் காணப்படவில்லை.

அதேநேரம் முன்னாள் ஜனாதிபதியாகவும், ஐக்கிய தேசிய கட்சியின் முக்கிய தலைவராகவும் விளங்கிய ரணிசிங்க பிரேமதாசாவின் புதல்வர் என்ற அரசியல் பின்னணியைக் கொண்டுள்ள போதிலும், ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளராகிய சஜித் பிரேமதாசாவை, நம்பிக்கைக்குரிய தமிழ் மக்களினால் நோக்க முடியவில்லை. ஏனெனில் அவருடைய அரசியல் செயற்பாடுகளில் அவர் வெளிப்படையாகத் தமிழ் மக்கள் பற்றியும் அவர்களுடைய பிரச்சினைகள் பற்றியும் அக்கறை கொண்டு செயற்பட்டிருக்கவில்லை.

தேசிய மட்டத்தில் எரியும் பிரச்சினையாகத் தொடர்கின்ற இனப்பிரச்சினை தொடர்பில் அவர் எப்போதுமே அக்கறை கொண்டிருந்ததாகத் தமிழ் மக்கள் அறிந்திருக்கவில்லை. அத்துடன் இன முரண்பாட்டுப் பிரச்சினையில் அதிக ஈடுபாடும், ஆழ்ந்த விடயதானம் உடையவராகவும் அவர் தமிழ் மக்களுடைய அகப்புறக்கண்களுக்குத் தெரியவில்லை.

இந்த நிலையில் சஜித் பிரேமதாசா மீது நம்பிக்கை வைத்துத் தேர்தலை எதிர்கொள்ள முடியாதவர்களாகவே தமிழ் மக்கள் உள்ளனர். ஆனாலும் அவர் சார்ந்துள்ள ஐக்கிய தேசியக் கட்சி தமிழ் மக்கள் மீது கொண்டுள்ள மென்மையான போக்கு சிறிது ஆறுதல் அளிக்க வல்லதாகக் கருதப்படுகின்றது. ஆனாலும் அந்தக் கட்சியின் வேட்பாளரை ஆதரித்து வாக்களிப்பதற்கு அது போதிய அரசியல் ரீதியான வலுவைக் கொண்டிருக்கவில்லை.

இதனால் இந்தத் தேர்தலில் என்ன செய்வது, யாரை ஆதரிப்பது, யாரை ஆதரிக்காமல் விடுவது என்பது குறித்து முழுமனதோடு தீர்மானம் மேற்கொள்ள முடியாத இக்கட்டான நிலைமைக்கே தமிழ் மக்கள் தள்ளப்பட்டிருக்கின்றார்கள்.

ஆக்கபூர்வமான முடிவுக்கு வழிவகுக்குமா….?

அளிக்கப்படுகின்ற வாக்குகளில் 51 வீதமான வாக்குகளைப் பெறுபவரே தேர்தலில் வெற்றி பெற முடியும் என்பது தேர்தல் விதி. அதற்கமைய வாக்குகளைப் பெற்று எவரும் தேர்தலில் வெற்றிபெற முடியாது என்பதே பொதுவான கணிப்பாகும். ஏனெனில் பெரும்பான்மை பலத்தைக் கொண்டுள்ள சிங்கள மக்களின் வாக்குகளிலேயே இந்த வெற்றி வாய்ப்பு அடிப்படையில் தங்கி இருக்கின்றது. ஆனால் ஐக்கிய தேசிய கட்சி, பொதுஜன பெரமுன என்ற பிரதான கட்சிகளிலும் மூன்றாவது அரசியல் சக்தியாகத் திகழும் ஜேவிபி ஜனதா விமுக்தி பெரமுனவிலும் சிங்கள மக்களின் வாக்குகள் பிரிந்து கிடக்கின்றன. ஆகவே சிறுபான்மை இன மக்களாகிய தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் வாக்குகளே வெற்றியாளரைத் தீர்மானிக்கின்ற சக்தியாகத் திகழ்கின்றன.

இத்தகைய அரசியல் யதார்த்தத்தில் முக்கியத்துவம் மிக்க வாக்குகளைக் கொண்டுள்ள தமிழ் மக்கள் எந்த அடிப்படையில் தங்களுக்குப் பயனுள்ள வகையில் தமது வாக்குரிமையைப் பயன்படுத்துவது என்று தீர்மானிக்க முடியாத அரசியல் சூழலில் சிக்கி இருக்கின்றார்கள்.

தீர்மானிக்கும் சக்தியைக் கொண்ட தமது வாக்குகளின் மூலம் வெற்றியடைகின்ற வேட்பாளர் தங்களுக்கு சாதகமாகச் செயற்படுவார் என்பதற்கான உத்தரவாத அரசியல் நிலைமையை அவர்களால் காண முடியவில்லை. அதேவேளை, தேர்தலைப் புறக்கணித்தால் அல்லது தமிழ் வேட்பாளராகக் களம் இறங்கியுள்ள சிவாஜிலிங்கத்திற்கு வாக்களித்து பேரின அரசியல் கட்சிகள் மீது தமக்கு நம்பிக்கை இல்லை என்ற நிலைப்பாட்டை வெளிப்படுத்தவதன் ஊடாக அவர்கள் ஏதேனும் நன்மை அடைய முடியுமா என்பதிலும் தெளிவற்ற நிலைமையே காணப்படுகின்றது.

இந்தத் திரிசங்கு நிலைமையில் ஆக்கபூர்வமான முடிவெடுப்பதில் தமிழ் அரசியல் கட்சிகளும் தடுமாறிய நிலையிலேயே காணப்படுகின்றன. இந்த நிலையில் தமிழ்த்தேசியம் சார்ந்த அரசியல் கட்சிகளை ஒன்றிணைத்து ஒரு தீர்மானத்தை எட்டுவதற்கு யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்டுள்ள முயற்சியின் மூலம் இந்த நிலைமை குறித்து விவாதிப்பதற்கான ஒரு பொது வெளியும் சந்தர்ப்பமும் கிட்டியிருக்கின்றன. இந்த விவாதத்தின் முடிவு என்ன என்பதைப் பொறுத்திருந்துதன் பார்க்க வேண்டும்.

Spread the love
 
 
      

Related News

1 comment

Siva October 10, 2019 - 7:36 pm

யாழ் பல்கலைக்கழகமாணவர்களின் முயற்சியில், ‘ஜனாதிபதித்
தேர்தலில் சிறுபான்மைத் தமிழ் மக்களின் பங்களிப்பு
எப்படி அமைய வேண்டும்’, என்பது தெளிவுபடுத்தப்படும்
என நம்புவோம்.

தமிழ் மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் அத்தனைஅரசியல்
கட்சிகளும் ஒரு இணக்கப்பாட்டுக்குவரவேண்டுமென்பது
காலத்தின் கட்டாயமாகும். சிந்திப்பார்களா?

Reply

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More