நீராவியடி பிள்ளையார் ஆலய வளவில் பௌத்த பிக்கு ஒருவருடைய சடலம் எரிக்கப்பட்ட விவகாரத்தில் நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த பொதுபலசேனா அமைப்பைச் சேர்ந்த ஞானசார தேரர் மற்றும் சம்பவத்தில் தொடர்புபட்ட பௌத்த பிக்குகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறப்பினருமாகிய இரா.சம்பந்தன் நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் சிறப்புக் கூற்றொன்றை முன்வைத்து உரையாற்றிய அவர் இந்த விடயத்தில் பொலிசாரும் நீதிமன்றத் தீர்ப்பை உதாசினம் செய்துள்ளார்கள் என சுட்டிக்காட்டி, சம்பந்தப்பட்ட பொலிசார் மீதும் சட்ட நடவடிக்கை எடு;க்கப்பட வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.
அதேவேளை, நீராவியடி பிள்ளையார்; ஆலய வளவில் சடலம் எரிக்கப்பட்ட சம்பவத்தில் தமிழ் மக்களே குழப்பம் விளைவித்துள்ளார்கள். அவ்வாறு குழப்பம் விளைவித்து, ஒட்டுமொத்த சிங்கள மக்களையும் வேதனைப்படுத்தி உள்ளார்கள் என்று பொது எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனந்த அளுத்கமகே தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்குப் பதிலளிக்கும் வகையில் உரையாற்றியபோது நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்கள் மீது மத ரீதியான வன்முறையைப் பிரயோகித்து வருகின்ற பௌத்த பிக்குகளின் அடாவடித்தனத்தைச் சுட்டிக்காட்டி, அதற்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்றே நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினார். அப்போது சிங்கள பௌத்த தேசிய தீவிரவாதத்தின் கோர முகத்தை வெளிப்படுத்தும் வகையிலேயே பொது எதிரணி தரப்பில் மூக்கை நுழைத்து சம்பந்தனுக்குப் பதிலளிக்கும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனந்த அளுத்கமகே உரையாற்றி இருந்தார்.
நீராவியடி பிள்ளையார் ஆலய வளவுக்குள் பௌத்த பிக்குவின் சடலத்தைக் கொண்டு சென்றவர்கள், இந்;து மத சம்பிரதாயங்கள் நியதிகளுக்கு மாறாக நடந்து கொண்டார்கள். இதன் மூலம் இந்து மதத்தின் புனிதத்தையும் மாசுபடுத்தியிருந்தார்கள். அது மட்டுமல்லாமல் நீதிமன்றத்தை அவமதித்து சட்டமீறல்களிலும் ஈடுபட்டிருந்தார்கள்.
மத நியதிகளை மீறி ‘காரியம்’ செய்தனர்
இந்து ஆலய வளவுக்குள் அதுவும் அந்த ஆலயத்தின் தீர்த்தக்கேணி கரையோரத்தில் வேற்று மதமாகிய பௌத்த மதப் பிக்கு ஒருவருடைய உடலுக்கு இறுதிக்கிரியையாக எரியூட்டி இருந்தார்கள். இந்த நடவடிக்கைக்கான ஆயத்தங்கள் செய்யப்பட்டபோதே, இது இந்து மத சம்பிரதாயங்கள், நியதிகள், ஒழுக்கங்களுக்கு எதிரான நடவடிக்கை என்று அந்த ஆலயக் குருக்களும் ஆலய பரிபாலன சபையினரும் எடுத்துக்கூறி நீதிமன்றத்தில் எதிர்ப்பு வெளியிட்டிருந்தனர்.
இதனையடுத்து, பிக்குவின் உடல் நீராவியடி பிள்ளையார் ஆலய வளவுக்குள் எரியூட்டப்படக் கூடாது என்று உத்தரவிட்ட நீதிமன்றம், அருகில் உள்ள நாயாறு கடற்படை முகாமின் கடற்கரையோரத்தில் எரியூட்டுமாறு உத்தரவிட்டிருந்தது.
இந்த பிள்ளையார் ஆலய வளவுக்குள் ஏற்கனவே இராணுவ பொலிஸ் பாதுகாப்புடன் அடாத்தாக பௌத்த விகாரையை நிர்மாணித்து, அதன் விகாரதிபதியாக விளங்கிய கொலம்பே மேதானந்த தேரருடைய சடலத்தை அந்த விகாரைப் பகுதியில் – அதாவது நீராவியடி பிள்ளையார் ஆலய வளவுக்குள் எரிக்க வேண்டும் என்று வாதிடுவதற்காக நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்த சட்டத்தரணிகளின் முன்னிலையிலேயே இந்த உத்தரவை நீதிமன்றம் வழங்கியிருந்தது.
இந்த உத்தரவு வழங்கப்படப் போகின்றது என்பதை அறிந்து, இந்த வழக்கு தொடர்பான நீதிமன்ற நடவடிக்கைகளை அவதானிப்பதற்காக நீதிமன்றத்தில் சமூகமளித்திருந்த பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளரும் நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டில் தண்டிப்பட்டவருமாகிய ஞானசார தேரர் நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்படுவதற்கு முன்னரே அங்கிருந்து வெளியேறினார்.
அவ்வாறு வெளியேறிய அவர் நீதிமன்ற உத்தரவைப் புறக்கணித்து, நீராவியடி பிள்ளையார் ஆலய வளவில், அந்த ஆலயத்தின் தீர்த்தக்கரையில் பௌத்த பிக்குவின் உடலை எரிப்பதற்கான ஏற்பாடுகளில் மூழ்கி இருந்தார். நீராவியடி ஆலய வளவுக்குள் சடலம் எரிக்கப்படக் கூடாது என்ற நீதிமன்ற உத்தரவுஇறுதிக்கிரியைகளுக்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு அறிவிக்கப்பட்ட போதிலும், ஞானசார தேரர் தலைமையிலான பௌத்த பிக்குகளும் அவர்களுடன் அங்கு குழுமியிருந்த சிங்கள பௌத்தவர்களும் நீதிமன்ற உத்தரவை மீறி பௌத்த பிக்குவின் சடலத்தை எரிக்கும் ‘காரியம்’ அங்கு நிறைவேற்றப்பட்டது.
பாரதூரமான விடயங்கள்
இந்த நடவடிக்கையின் மூலம் பௌத்த பிக்குகளும், சிங்கள பௌத்தவர்களும், பௌத்த மதத்தைச் சேர்ந்தவர்கள் எவருமே வசிக்காத பகுதியில் இந்துக்களுடைய ஆலயமாகிய நீராவியடி பிள்ளையார் ஆலய வளவுக்குள் அந்த மதத்தின் புனிதத்தைக் கெடுக்கும் வகையில் அடாவடித்தனம் புரியப்பட்டுள்ளது.
இரண்டு மதங்கள் சார்ந்த ஓர் ஆலய விவகாரத்தில் ஒரு மனித சடலத்திற்கான இறுதிக்கிரியைகளை வலிந்து புகுத்தி பிரச்சினை கிளப்பிவிடப்பட்டுள்ளது.
மத சம்பிரதாயங்கள், அதன் புனிதத் தன்மையுடன் சம்பந்தப்பட்ட உணர்வுபூர்வமான ஒரு விடயத்தில் நீதிமன்றத்தின் உத்தரவு புறக்கணிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவு புறக்கணிக்கப்பட்டதன் மூலம் நீதிமன்றம் அவமதிக்கப்பட்டுள்ளது.
இரு சமூகம் சார்ந்த உணர்வுபூர்வமான மதவிவகாரம் சம்பந்தப்பட்ட ஒரு விடயத்தில் நீதிமன்றம் வழங்கிய உத்தரவை நிறைவேற்ற வேண்டிய கடப்பாட்டையும் பொறுப்பையும் கொண்டுள்ள பொலிஸ் தனது கடமையைச் செய்யத் தவறிவிட்டது.
இந்த விவகாரத்தில் இன முரண்பாட்டைத் தவிர்ப்பதற்காகவே நீதிமன்ற உத்தரவை கவனத்திற் கொள்ளவில்லை என்று மனித உரிமைகள் ஆணையக விசாரணை ஒன்றில் நாட்டின் நீதிப் பொறிமுறை சார்ந்த கடமைப் பொறுப்பை எடுத்தெறிந்த வகையில் பொலிஸ் தரப்பில் பதிலளிக்கப்பட்டுள்ளது.
யுத்தத்தின் பின்னரான நிலைமையில் அரசாங்கம் முன்னெடுத்துள்ள இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை உருவாக்குகின்ற கடப்பாட்டை அலட்சியப்படுத்தி, இனங்களுக்கிடையில் குரோதத்தையும் பகைமையையும் வளர்ப்பதற்கான தவறை பொலிஸ் தரப்பு இழைத்துள்ளது.
ஐநாவின் கொள்கை வழியில் நிறைவேற்றப்பட்டுள்ள சிவில், மதம் மற்றும் அரசியல் உரிமைகள் சட்டத்தை மீறிய பௌத்த பிக்குகளினால் பொது அமைதிக்குப் பங்கம் வளைவிக்கப்பட்டுள்ளது.
நீராவியடி பிள்ளையார் ஆலய தீர்த்தக்கரையில் பௌத்த பிக்குவின் சடலம் எரிக்கப்பட்டதன் மூலம், பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ள போதிலும் ஏனைய மதங்களுக்குள்ள உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என்ற அரசியலமைப்பின் நியதி மீறப்பட்டிருக்கின்றது. இதனால் நாட்டின் அதி உயர் சட்டமாகிய அரசியலமைப்புச் சட்டம் அவமதிக்கப்பட்டுள்ளது.
இவ்வளவு நடந்த பின்பும் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பொது எதிரணி உறுப்பினர் ஆனந்த அளுத்கமகே நீராவியடி பிள்ளையார் ஆலய வளவுக்குள் பௌத்த பிக்குகளும் அவர்களுடன் இணைந்திருந்தவர்களும் செயற்பட்ட முறைமையை நியாயப்படுத்தி உள்ளார். இந்த விடயத்தில் பாதிக்கப்பட்ட தரப்பினராகிய தமிழ் மக்களே தவறு இழைத்துள்ளார்கள் என்று அவர் குற்றம் சுமத்தி உள்ளார்.
மேலாண்மை நிலைநாட்டப்பட்டது
நீராவியடி பிள்ளையார் ஆலயப் பகுதி யுத்த மோதல்கள் நிலைமையில் இராணுவத்தின் முகாம் பகுதிக்குள் உள்ளடங்கியிருந்தது. யுத்தம் முடிவடைந்த பின்னரும், அந்த ஆலயப் பகுதிக்குள் செல்வதற்குப் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. ஆனால், இராணுவத்தின் வசமிருந்த அந்த ஆலயத்தில் படையினர் வழிபாடு நடத்தி வந்ததுடன், பௌத்த பிக்கு ஒருவரை அங்கு வரவழைத்து, ஆலய வளவுக்குள் புத்தர் சிலையொன்று முதலில் நிறுவப்பட்டது. பின்னர் அங்கு பௌத்த விகாரையொன்று அங்கு நிலைகொண்டு வசித்து வந்த கொலம்பே மேதானந்ததேரரினால் நிர்மாணி;க்கப்பட்டது.
அவருடைய நடவடிக்கைகளுக்கு இராணுவத்தினரும் பொலிசாரும் உறுதுணையாக இருந்ததுடன், அந்த பௌத்த பிக்குவுக்குப் பாதுகாப்பு வழங்கி இருந்தார்கள். இதனால் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும், நீதிமன்ற நடவடிக்கைகள் இடம்பெற்ற போதிலும் தயக்கமின்றியும் மிகத் துணிவோடும் செயற்பட்ட கொலம்பே மேதானந்ததேரர் தமிழ் மண்ணில் அதுவும் இந்துமத மக்களுடைய பிரதேசத்தில் பௌத்த மதத் திணிப்பை வெற்றிகரமாக மேற்கொண்டிருந்தார்.
அந்த மண்ணில் அடாத்தாக நீதியற்ற நியாயமற்ற முறையிலும் மனிதாபிமானமற்ற வகையிலும் இடம்பெற்ற பௌத்த மதத் திணிப்பையும், அடிப்படை மத உரிமை மீறலையும் நீதிமன்ற நடவடிக்கைகளினாலோ அல்லது மக்கள் எழுச்சியினாலோ தடுத்த நிறுத்த முடியவில்லை. அடாத்தான அத்துமீறல் நடவடிக்கைகள் இடம்பெற்றிருந்த சூழலிலேயே அந்த விகாராதிபதி கொலம்பே மேதானந்ததேரர் புற்றுநோய்க்கு ஆளாகி மகரகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் மரணமடைந்தார்.
உயிரிழந்த அவருக்கு அஞ்சலி செலுத்துவதற்காகவே அவர் நிர்மாணித்த பௌத்த விகாரை பகுதியில் இந்து மத மக்களுடைய மனங்களைப் புண்படுத்தி வேதனை அடையச் செய்யும் வகையில் அடாத்தாக அவருடைய சடலத்தை எரிப்பதற்கான நடவடிக்கைகளை ஞானசாரதேரர் தலைமையிலான பிக்குகள் சிலரும், அவர்களுக்கு ஆதரவான சிங்கள பௌத்த தீவிர மதப்பற்றாளர்களும் முன்னெடுத்திருந்தனர்.
இந்து ஆலயப்பகுதியில் பௌத்த பிக்கு ஒருவருடைய சடலத்திற்கு எரியு}ட்டி இறுதிக்கிரியைகள் செய்வதென்பதை சாதாரணமாக எவரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஆனாலும், பௌத்த மதமே இந்த நாட்டின் முதன்மை பெற்ற மதம் என்ற பேரினவாத மேலாண்மை நிலையை நிலைநாட்டுவதற்காகவே அந்த பிக்குவின் சடலத்திற்கு நீராவியடி பிள்ளையார் ஆலயத்தின் தீர்த்தக்கரையில் எரியூட்டப்பட்டது.
அச்சுறுத்தல்
இது முழுக்க முழுக்க சிங்கள பௌத்த தேசிய தீவிரவாத அரசியல் ஆக்கிரமிப்பின் வெளிப்பாடாகவே நடந்து முடிந்தது. சிங்கள பௌத்த தேசிய தீவிரவாதத்தின் முன்னால் நீதி நியாய நெறிமுறைகளோ நீதிமன்ற உத்தரவுகளோ அல்லது நீதிமன்ற தீர்ப்புக்களோ செயலற்றவை என்பதை நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் இடம்பெற்ற பிக்குவின் சடலம் எரிக்கப்பட்ட சம்பவம் நிதர்சனமாகக் காட்டியுள்ளது.
இந்தச் சம்பவம் இடம்பெற்று இரண்டு வாரங்களுக்கு மேலாகிவிட்டபோதிலும், சட்டத்தையும் ஒழுங்கையும் கடைப்பிடித்து, நீதியை நிலைநாட்டவேண்டிய அரச பொறிமுறைகள் எந்தவித ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.
நீதிமன்ற உத்தரவு உதாசீனம் செய்யப்பட்டது மட்டுமல்லாமல், நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றுவதற்காக அந்தப் பகுதிக்குச் சென்றிருந்த நீராவியடி பிள்ளையார் ஆலயம் சார்ந்த குருக்களும் சட்டத்தரணி ஒருவரும் அவர்களுடன் இருந்தவர்களும் பௌத்த பிக்குகள் உள்ளிட்டவர்களினால் தாக்கப்பட்டார்கள். அவர்களில் இந்து மதகுரு காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற வேண்டியதாயிற்று.
நீதிமன்ற உத்தரவு கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்திய சட்டத்தரணி சுகாஷ் பௌத்த பிக்கு ஒருவரினால் பகிரங்கமாக அச்றுத்தப்பட்டார். நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றுவதற்காகச் சென்றிருந்த அவருக்கு இந்த நாட்டில் ஹாமதுருவுக்வே முதலிடம் கொடுக்க வேண்டும் என்ற சட்டம் தெரியாதா என்று தமிழில் உரத்து ஆணித்தரமாகவும் அச்சுறுத்தும் வகையிலும் அந்த பிக்கு வினவியிருந்தார்.
ஹாமதுருவுசு;கே முதலிடம் கொடுக்க வேண்டும் என்ற சட்டம் தெரியாதா என்று அந்த சட்டத்தரணி சுகாஷை நோக்கி வினவியிருந்தாலும், உண்மையில் அந்தக் கேள்வி நீதிமன்றத்தை நோக்கியே எழுப்பப்பட்டிருந்தது என்றே கொள்ள வேண்டும். நீதிமன்ற உத்தரவிலும் பார்க்க பௌத்த பிக்குகளின் விருப்பமும், அவர்களின் நடவடிக்கைகளுமே மேலோங்கியவை என்பதை அந்த பிக்கு எழுப்பிய கேள்வி மட்டுமல்லாமல், தொடர்ந்து அங்கு இடம்பெற்ற பௌத்த பிக்குவின் சடலம் எரிப்பும்கூட சந்தேகத்திற்கு இடமின்றி நிலைநாட்டியுள்ளன.
எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?
இந்தச் சம்பவத்தின் பின்னர் கருத்து வெளியிட்ட ஞானசார தேரர் நீராவியடி பிள்ளையார் ஆலய வளவுக்குள் பௌத்த பிக்குவின் சடலம் எரிக்கப்பட்ட சம்பவத்தை அப்படியே விட்டுவிடுமாறு கூறியிருந்தார். அது ஒரு சாதாரண சம்பவம். பௌத்த பிக்கு ஒருவர் மரணமானார். அவர் வசித்து வந்த பகுதியில் அவருடைய இறுதிக்கிரியைகள் நடத்தப்பட்டன. அவ்வளவுதான். இதில் மத சம்பிரதாயங்களுக்கோ அல்லது மதம் சார்ந்த உணர்வுகளுக்கோ, உரிமை சார்ந்த விடயங்களுக்கோ இடமில்லை. ஆகவே நடந்து முடிந்ததை நடந்து முடிந்ததாகக் கருதி இயல்பான காரியங்களைக் கவனியுங்கள் என்ற ரீதியில் அவருடைய கருத்து வெளிப்பட்டிருந்தது.
ஆனாலும் பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடு ஒன்றின் அடிப்படையில் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையைத் தொடர்ந்து நீதிமன்ற உத்தரவை மீறியவர்களைக் காணொளி காட்சிகளின் மூலமாக அடையாளம் காண்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவை மீறியவர்களும், குழப்பம் விளைவித்தவர்களும், ஆலய குருக்கள் மற்றும் சட்டத்தரணி உள்ளிட்டவர்களைத் தாக்கியவர்களைக் கண்டுபிடிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படடுள்ளதாகக் கூறப்பட்ட போதிலும், நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தத் தவறிய பொலிசார் மீது நடவடிக்கை எடுப்பதற்கான நகர்வுகள் எதுவும் இடம்பெற்றிருப்பதாகத் தெரியவில்லை.
அதேநேரம் இந்த விடயம் தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டமா அதிபர் தொலைபேசி வழியாக உறுதியளித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியிருந்தது. ஆனால் சட்டமா அதிபர் திணைக்களம் எத்தகைய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது என்பது பற்றிய தகவல்கள் எதுவும் வெளியாகியதாகத் தெரியவில்லை. சட்டமா அதிபர் திணைக்களம் இந்த விவகாரம் குறித்து தீவிர கவனம் செலுத்தி இருக்கின்றதா என்பதும் இதுவரையில் அதிகாரபூர்வமாக வெளிப்பட்டதாகவும் தெரியவில்லை.
இயல்பாக எழும் கேள்விகள்
இன முரண்பாட்டைத் தடுப்பதற்காகவே நீதிமன்றத் தீர்ப்பைக் கவனத்தில் கொள்ளவில்லை என்று மனித உரிமைகள் ஆணையக விசாரணையொன்றில் பதிலளித்துள்ள பொலிசார், இந்த விடயம் குறித்து நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பித்திருப்பதாகத் தெரியவில்லை.
இரண்டு இனங்களுக்கிடையில் உணர்ச்சிகரமான மத விடயங்கள் சம்பந்தப்பட்ட ஒரு நடவடிக்கையில் நீதிமன்றம் ஓர் உத்தரவைப் பிறப்பித்து, நடைமுறைப்படுத்துமாறு பொலிசாருக்கு ஆணையிட்டது. சூழ்நிலை காரணமாக அந்த உத்தரவைக் கவனத்தில் கொள்ளவில்லை என்பது தொடர்பில் பாதிக்கப்பட்ட தரப்பினால் நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டதா என்பதும் தெரியவில்லை. அல்லது இந்த விடயம் குறித்து நீதிமன்றத்தில் கவனம் செலுத்தப்பட்;டதாகவும் தெரியவில்லை.
இந்த நிலையில், நீதிமன்ற உத்தரவு உதாசீனப்படுத்தியதையும், சட்டத்தரணி உள்ளிட்டவர்களைத் தாக்கியதையும் கண்டித்து நீதிமன்ற பணிகளைப் புறக்கணித்து போராட்டம் நடத்திய சட்டத்தரணிகள் நீதி நிலைநாட்டப்பட வேண்டும் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததுடன் அமைதியடைந்துவிட்டார்கள் என்றே தெரிகின்றது.
நீதிமன்ற உத்தரவு புறக்கணிக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் நீதிமன்றம் அவமதிக்கப்பட்டுள்ளது என்பதே சாதாரண குடிமகனுடைய நிலைப்பாடு. இந்த நிலையில் நீதிமன்ற நடவடிக்கைகளில் மக்கள் நம்பிக்கை வைத்து நீதியும் நியாயமும் நிலைநாட்டப்படும் என்று எந்த வகையில் எதிர்பார்க்க முடியும் என்று தெரியவில்லை.
நீதிமன்ற உத்தரவுகள் புறக்கணிக்கப்பட்டு, நீதி நியாயத்திற்காகப் பணியாற்றுகின்ற சட்டத்தரணிகள் அஹிம்சையையும் காருண்யத்தையும் இரு கண்களாகப் போற்றி கடைப்பிடித்து ஒழுக வேண்டிய பௌத்த பிக்குகளின் தலைமையில் தாக்கப்படுவார்கள் என்றால், நாட்டின் நீதிப்பொறிமுறை எந்த அளவுக்கு சுதந்திரமாகச் செயற்பட முடியும் என்ற கேள்வி இயல்பாகவே எழுகின்றது.
நாட்டின் நீதிப்பொறிமுறை எந்த அளவுக்கு அதிகார பலம் கொண்டிருக்கின்றது, எந்த அளவுக்கு பயன்தரத்தக்க வல்லமையைக் கொண்டிருக்கின்றது என்ற கேள்வியும் மனதில் இயல்பாக எழுகின்றது.