மயூரப்பிரியன்
இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் தமிழர் தரப்பில் தமிழ்த் தேசியக் கட்சிகளிடையே பொது இணக்கப்பாடொன்றை ஏற்படுத்தும் நோக்கில் யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழகங்களின் மாணவர் ஒன்றியங்களின் முயற்சியின் பயனாக மிக நீண்டகாலத்தின் பின் தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் உட்பட கட்சிப்பிரமுகர்கள் பலர் ஒரே மேசையில் சந்தித்துக் கொண்ட கூட்டம் இணக்கமேதும் எட்டப்படாமலே முடிவடைந்துள்ளது.
பொது உடன்படிக்கையில் கட்சிகள் எவையும் ஒப்பமிடாத நிலையில் பின்னிரவு 10 மணியளவில் சந்திப்பை முடித்துக்கொண்டவர்கள் நாளை பிற்பகல் 1.30 வரை அதனை ஒத்திவைத்தனர்.
குறித்த சந்திப்பானது இன்று யாழ் . பல்கலைக் கழகத்துக்கு அண்மையிலுள்ள தனியார் விடுதியில் இடம்பெற்றது. இந்தச் சந்திப்பில் யாழ்ப்பாணம்மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகளுடன், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சார்பில்அதன் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை.சோ.சேனாதிராஜா, நாடாளுமன்ற உறுப்பினரும், ஊடகப் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரும்,
புளொட் சார்பில் அதன் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான த. சித்தார்ந்தன், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் பா. கஜதீபன் ஆகியோரும்,
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பில் அதன் தலைவர் பொ. கஜேந்திரகுமார் , செயலாளர் செ.கஜேந்திரன் , சட்டத்தரணி சுகாஸ் கனகரட்ணம் ஆகியோரும்,
ரெலோ சார்பில் அதன் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம்அடைக்கலநாதன் , ஈ.பீ.ஆர்.எல்.எவ் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், அதன்தலைவர் சுரேஸ் பிறேமச்சந்திரன் ஆகியோரும், தமிழ் மக்கள் கூட்டணி சார்பில் க. அருந்தவபாலன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
நீண்ட நேரம் இந்தச் சந்திப்பு இடம்பெற்ற போதிலும், இணக்கப்பாடுகளெவையும் எட்டப்படவில்லை.
எனினும் ஜனாதிபதித்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிடமும், சர்வதேச சமூகத்திடமும் தமிழர்கள் சார்பில் முன்வைக்கப்பட வேண்டிய சரத்துக்கள் அடங்கிய பொது உடன்படிக்கையில் கட்சிகள் முன் வைத்த திருத்தங்களுடன் நாளை பிற்பகல 1.30 மணிக்கு ஒப்பமிடுவதற்கு கலந்துகொண்ட கட்சிப் பிரமுகர்களிடையே இணக்கம் ஏற்பட்டிருப்பதாக அறியமுடிகிறது. #ஜனாதிபதித்தேர்தல் #தமிழர்தரப்பு #பொது இணக்கப்பாடு