வெடுக்குநாரி மலை ஆதி லிங்கேஸ்வர ஆலயத்தின் நிர்வாகம், மற்றும் பூசகருக்கு எதிராக தொல் பொருட்திணைக்களம் வவுனியா நீதி மன்றில் வழக்கு ஒன்றினை தாக்கல் செய்துள்ளது.
இது தொடர்பாக ஆலயத்தின் நிர்வாகம், மற்றும் பூசகருக்கு அடுத்த மாதம் 29 ஆம் திகதி வழக்கு விசாரணைகளுக்காக வவுனியா நீதிமன்றில் முன்னிலையாகுமாறு வவுனியா நீதவான் நீதிமன்றால் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது
வவுனியா நெடுங்கேணியில் அமைந்துள்ள வெடுக்குநாரி மலை மற்றும் அதனை அண்டிய பகுதிகள் தொல்பொருள் திணைக்களத்திற்குச் சொந்தமானது எனத் தெரிவித்து ஆலயத்தில் பொதுமக்கள் வழிபடுவதற்குத் தடை ஏற்படுத்தப்பட்டிருந்த நிலையில் பொதுமக்களின் முயற்சியால் குறித்த ஆலயத்தில் வழிபடுவதற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டதுடன் ஆலய வளாகத்தில் கட்டுமானங்களை ஏற்படுத்துவதற்குத் தொல்பொருள் திணைக்களம் மற்றும் காவல்துறையினரால் தடைவிதிக்கப்பட்டது.
அத்துடன் வெடுக்குநாரி மலையில் பக்தர்கள் ஏறுவதற்கு வசதியாக இரும்பினால் அமைக்கப்பட்ட ஏணிப்படி ஒன்று அப்பகுதி மக்களால் அண்மையில் பொருத்தப்பட்ட நிலையில் குறித்த ஏணிப்படி அமைக்கப்பட்டமைக்கு எதிராகத் தொல்பொருள் திணைக்களத்தால் ஆலய நிர்வாகத்திற்கு எதிராக நெடுங்கேணி காவல் நிலையத்தில் இம்மாத ஆரம்பத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப் பட்டிருந்தது.
குறித்த முறைப்பாட்டினைத் தொடர்ந்து ஆலய நிர்வாகத்தினரை நெடுங்கேணி காவல் நிலையத்திற்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டு விசாரணைகள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.