180
புங்குடுதீவு மாணவி படுகொலை வழக்கின் முக்கிய சூத்திரதாரியான சுவிஸ்குமாரை விடுவித்து உதவிய குற்றச்சாட்டு வழக்கில் இரண்டாவது சந்தேகநபரான முன்னாள் உதவி காவல்துறை பரிசோதகர் சிறிகஜன் தலைமறைவாகியுள்ள நிலையில் அவர் இல்லாமலேயே வழக்கை விளக்கத்துக்கு எடுப்பதற்கான ஆரம்ப விசாரணையை நடத்த சட்ட மா அதிபர் திணைக்களத்துக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் கட்டளையிட்டார்.
“இரண்டாவது எதிரிக்கான அழைப்புக் கட்டளையை காவல்துறையினரால் சேர்ப்பிக்க முடியவில்லை. அவரது தாயார் மற்றும் கிராம அலுவலகரிடம் வாக்குமூலம் பெறப்பட்டது. அவர்களுக்கு இரண்டாவது எதிரி இருக்கும் இடம் தெரியவில்லை.
காவல்துறை திணைக்களத்திலும் அவர் தற்போது சேவையில் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. தனக்கு எதிராக வழக்கு நடவடிக்கை வருகிறது அறிந்தவுடன் இரண்டாவது எதிரி தலைமறைவாகியுள்ளார். அதனால் இரண்டாவது எதிரி மன்றில் முன்னிலையாகமலே இந்த வழக்கின் விளக்கத்தை நடத்த மன்று அனுமதியளிக்கவேண்டும்” என்று அரச சட்டவாதி மாதினி விக்னேஸ்வரன் சமர்ப்பணம் செய்தார்.
வழக்குத் தொடுனரின் சமர்ப்பணத்தை ஏற்றுக்கொண்ட யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம், எதிரியின்றி விளக்கத்தை நடத்துவதற்கு குற்றவியல் நடைமுறைச் சட்டக்கோவை 241இன் கீழ் எதிரி தொடர்பான ஆரம்ப விசாரணையை நடத்த அனுமதியளித்தது.
அத்துடன் வழக்கின் குற்றப்பத்திரிகையை வரும் 29ஆம் திகதி முதலாவது எதிரியான முன்னாள் மூத்த பிரதிப் பொலிஸ் மா லலித் ஏ ஜெயசிங்கவுக்கு மன்றில் வாசித்துக் காண்பித்து விளக்கத்துக்கான திகதியை நிர்ணயிப்பதாக மன்று அறிவித்தது. அதனால் அன்றைய தினம் வரை வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
மேலும் இரண்டாவது எதிரியின் வழக்கை விளக்கத்துக்கு எடுப்பதற்கான நடைமுறை விசாரணையை வரும் 29ஆம் திகதிக்கு முன்னர் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அரச சட்டவாதிக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் அறிவுறுத்தல் வழங்கினார்.
புங்குடுதீவு மாணவி வித்தியா சிவலோகநாதன் படுகொலை வழக்கின் முக்கிய சூத்திரதாரியாக கூறப்படும் சுவிஸ்குமார் என அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமார் என்பவரை விடுவித்து உதவினார்கள் என்ற குற்றச்சாட்டில் வடக்கு மாகாண முன்னாள் மூத்த பிரதி காவல்துறை மா அதிபர் லலித் ஏ ஜெயசிங்க மற்றும் உப காவல்துறை பரிசோதகர் சிறிகஜன் ஆகியோருக்கு எதிராக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் சட்ட மா அதிபரால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
சுவிஸ்குமார் என்பவரை சட்டமுறையற்ற வகையில் காவல்துறை காவலில் இருந்து விடுவிக்க உதவியதன் மூலம் தண்டனைச் சட்டக் கோவை 209ஆம் பிரிவின் கீழ் தண்டிக்கப்படக் கூடிய குற்றமொன்றைப் புரிந்தமை மற்றும் அதற்கு ஒத்துழைத்தன் மூலம் 109ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படவேண்டிய 209ஆம் பிரிவின் கீழான குற்றமொன்றைப் புரிந்தமை ஆகிய இரண்டு குற்றச்சாட்டுக்களின் கீழ் இருவருக்கும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
குற்றப்பத்திரிகையில் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சோ சேனாதிராசா உள்ளிட்ட 30 பேர் வரை சாட்சிகளாக இணைக்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. முதலாவது சந்தேகநபர் வடக்கு மாகாண முன்னாள் மூத்த பிரதி காவல்துறையி மா அதிபர் லலித் ஏ ஜெயசிங்க முன்னிலையானார். இரண்டாவது சந்தேகநபர் தொடர்ந்து தலைமறைவாகியுள்ளதால் அவர் மன்றில் முன்னிலையாகவில்லை.
வழக்குத் தொடுனர் தரப்பில் அரச சட்டவாதி மாதினி விக்னேஸ்வரன் முன்னிலையானார். இதன்போதே மேற்கண்டவாறு உத்தரவை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் வழங்கியது.
பின்னணி.
புங்குடுதீவு மாணவி வித்தியா சிவலோகநாதன், 2015ஆம் ஆண்டு மே 13ஆம் திகதி படுகொலை செய்யப்பட்டார். மறுநாள் அவரது சடலம் பற்றைக் காணிக்குள் எடுக்கப்பட்டது.
இந்த நிலையில் வழக்கின் சந்தேகநபர்களை காவல்துறையினரும் பொதுமக்களும் பிடித்தனர். சுவிஸ் குமார் என்று அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமார் என்பவரையும் ஊர் மக்கள் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
அவரை யாழ்ப்பாணம் அழைத்து வந்த உப காவல்துறை பரிசோதகர் சிறிகஜன், அன்றைய தினம் இரவு காவல்துறை காவலிலிருந்து அவரை விடுவித்தார்.
புங்குடுதீவு மாணவி வித்தியா சிவலோகநாதன் படுகொலை வழக்கின் முக்கிய சூத்திரதாரியாக கூறப்படும் சுவிஸ்குமார் என அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமார் என்பவரை விடுவித்து உதவினார்கள் என்ற குற்றச்சாட்டில் வடக்கு மாகாண முன்னாள் மூத்த பிரதி காவல்துறை மா அதிபர் லலித் ஏ ஜெயசிங்க மற்றும் உப காவல்துறை பரிசோதகர் சிறிகஜன் ஆகியோருக்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
அதுதொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் ஊர்காவற்றுறை நீதிவான் மன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.இதில் மூத்த பிரதி காவல்துறை மா அதிபர் லலித் ஏ ஜெயசிங்க கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் இருந்து பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார். உப காவல்துறை பரிசோதகர் சிறிகஜன் தலைமறைவாகி உள்ளார். அவருக்கு எதிராக நீதிமன்றால் பகிரங்கப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் நடைபெற்று சட்ட மா அதிபரின் நடவடிக்கைகக்காக விடப்பட்டது.
இதேவேளை, மாணவி படுகொலை வழக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற தீர்ப்பாயம் (Trial at bar) முன்னிலையில் இடம்பெற்றது. மேல் நீதிமன்ற நீதிபதிகள் பாலேந்திரன் சசிமகேந்திரன், அன்னலிங்கம் பிரேமசங்கர், மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகியோர் முன்னிலையில் இந்த வழக்கு இடம்பெற்று சுவிஸ் குமார் உள்ளிட்ட 7 பேருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.
அதனையடுத்தே சுவிஸ் குமாரை தப்பிக்கவைத்த குற்றச்சாட்டில் வடக்கு மாகாண முன்னாள் மூத்த பிரதி காவல்துறை மா அதிபர் லலித் ஏ ஜெயசிங்க மற்றும் உப காவல்துறை பரிசோதகர் சிறிகஜன் ஆகியோருக்கு எதிராக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டுக்களின் கீழ் தூக்குத் தண்டனை விதிக்கக் கூடிய குற்றஞ்சாட்டப்பட்டவரை தடுப்பில் இருந்து விடுவிக்க உதவி குற்றம் நிரூபிக்கப்பட்டால் முன்னாள் காவல்துறை உத்தியோகத்தர்கள் இருவருக்கும் தலா 5 ஆண்டுகளுக்கு விஞ்சாத சிறைத் தண்டனை விதிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது . #புங்குடுதீவுமாணவி #படுகொலை #சிறிகஜன்
Spread the love