158
அவுஸ்ரேலியாவில் முக்கிய பத்திரிக்கை நிறுவனங்கள் தங்களது முதல் பக்கங்களை கறுப்பு மை பூசி இருட்டடிப்பு செய்து வெளியிட்டுள்ளன. போர்க்குற்றங்கள், அவுஸ்ரேலிய குடிமக்களை உளவு பார்த்த அரசு நிறுவனம் என இரு கட்டுரைகள் அவுஸ்ரேலிய பத்திரிக்கைகளில் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி சர்ச்சைகளை ஏற்படுத்தின.
இதையடுத்து, அவுஸ்ரேலியாவின் முக்கிய பத்திரிக்கை நிறுவனமான அவுஸ்ரேலிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (ஏபிசி) மற்றும் நியூஸ் கார்ப் அவுஸ்ரேலியா நிறுவனத்தின் பத்திரிக்கையாளர் வீடு ஆகிய இடங்களில் கடந்த ஜூன் மாதம் காவற்துறையினர் சோதனை நடத்தினர்.
இந்நிலையில், அவுஸ்ரேலியாவில் பத்திரிக்கை சுதந்திரம் ஒடுக்கப்படுவதாகவும், ‘இரகசிய கலாச்சாரம்’ உருவாகி வருவதாகவும் ஊடகவியலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதன் விளைவாக அவுஸ்ரேலியாவில் இன்று முக்கிய பத்திரிக்கைகள் அனைத்தும் தங்களது முதல் பக்கத்தில் உள்ள செய்தியை கறுப்பு மை பூசி மறைத்து வெளியிட்டுள்ளன. இதற்கு பல்வேறு வானொலி மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்களும் ஆதரவு அளித்துள்ளன.
நியூஸ் கார்ப் அவுஸ்ரேலியா பத்திரிக்கை நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் மைக்கேல் மில்லர், அவரது பத்திரிக்கை, தி அவுஸ்ரேலியாவின் மற்றும் தி டெய்லி டெலிகிராப் உள்ளிட்ட பத்திரிக்கைகளில் அச்சிடப்பட்ட கறுப்பு நிற முதல் பக்கத்தின் படத்தை (போட்டோவை) ட்விட்டரில் பதிவு செய்தார். மேலும், ‘என்னிடமிருந்து எதை மறைக்க முயற்சிக்கிறார்கள்?’ என அரசாங்கத்திடம் கேள்வி கேட்குமாறு அவர் பொதுமக்களை கேட்டுக்கொண்டார்.
ஏபிசி நிர்வாக இயக்குனர் டேவிட் ஆண்டர்சன் கூறுகையில், ‘அவுஸ்ரேலியா உலகின் மிக ரகசியமான ஜனநாயகமாக மாறும் அபாயம் உள்ளது’ என தெரிவித்தார்.
இந்த சம்பவத்தை குறித்து அவுஸ்ரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் கூறுகையில், “ஊடக அமைப்புகளுக்கு என்ன வேண்டும்? கடந்த இரண்டு தசாப்தங்களாக இயற்றப்பட்ட கடுமையான பாதுகாப்புச் சட்டங்கள் புலனாய்வு பத்திரிகை துறைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளன. இது பொதுமக்களின் தகவல் அறியும் உரிமையை மெது மெதுவாக இல்லாது செய்கிறது என்கின்றனர். பத்திரிகை சுதந்திர விசாரணையின் முடிவுகள் அடுத்த ஆண்டு பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். பத்திரிகை சுதந்திரம் அவுஸ்ரேலியாவின் ஜனநாயகத்திற்கு முக்கியமானது, ஆனால் சட்டத்திற்கு உட்பட்டது. அதில் நான், பத்திரிகையாளர், வேறு யாராக இருந்தாலும் சட்டத்திற்கு கட்டுப்பட்டுதான் ஆக வேண்டும்,” எனத் தெரிவித்துள்ளார்.
Spread the love