209
வலி.வடக்கு பிரதேச சபை சபா மண்டபத்திற்குள் நுழைந்த காவல்துறை உத்தியோகஸ்தர் உறுப்பினர்களுக்கு தனது கைத்துப்பாக்கியை காட்டி மிரட்டியதாக உறுப்பினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
வலி.வடக்கு பிரதேச சபையின் 19ஆவது கூட்டம் இன்றைய தினம் வியாழக்கிழமை காலை சபா மண்டபத்தில் நடைபெற்றது.
அதன் போது சென்ற கூட்ட அறிக்கை வாசிக்கப்பட்ட போது உறுப்பினர்கள் சிலர் கடந்த காலத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் நிலமைகள் தொடர்பில் சபையில் தவிசாளர் தெரிவிக்க வேண்டும் என கோரினார்கள்.
அதில் குறிப்பாக 5G கோபுரத்திற்கு தவிசாளர் தன்னிச்சையாக கொடுத்த அனுமதியை இடைநிறுத்தி , கோபுரம் அகற்றப்பட வேண்டும். அகற்றப்படாவிடின் 14 நாட்களின் பின் சட்ட நடவடிக்கை மூலம் அகற்ற வேண்டும் எனும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இரண்டு மாதங்கள் கடந்த நிலையில் அந்த தீர்மானத்தின் தற்போதைய நிலமை தொடர்பிலும்,
கீரிமலை பகுதியில் கழிவுகளை கொட்டி நிலம் நிரவப்படும் திட்டத்திற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். அது தொடர்பில் அம்மக்களுடன் கலந்துரையாடி அவர்களின் கருத்தின் பிரகாரமே அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்தும் சபையில் உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினார்கள்.
அதனால் சபையில் அமளி ஏற்பட்டது. அதனையடுத்து தவிசாளர் தெல்லிப்பழை காவல்துறையினரை சபா மண்டபத்திற்கு அழைத்திருந்தார்.
தவிசாளரின் அழைப்பின் பேரில் சபா மண்டபத்திற்கு வந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் தனது கைத்துப்பாக்கியை எடுத்து உறுப்பினர்களுக்கு நீட்டி “ சுட்டுத்தள்ளிவிடுவேன்” என மிரட்டியதாக பாதிக்கப்பட்ட உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
சபையில் 38 உறுப்பினர்களில் இருபது உறுப்பினர்கள் தவிசாளருக்கு எதிரான நிலைப்பாட்டில் உள்ளதாகவும் , இன்றைய தினம் இரு உறுப்பினர்கள் சபைக்கு சமூகம் தரவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.
அதேவேளை சபையின் ஈ.பி.டி.பி உறுப்பினர் ஒருவர் தவிசாளர் தனக்கு தாக்கி , தனது கைத்தொலைபேசியை பறித்தார் என காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. #வலி.வடக்கு #கைத்துப்பாக்கி #தவிசாளர்
Spread the love