காஷ்மீர் மக்களுக்கு ஆதரவாகவும் அங்கு ஊரடங்கு உத்தரவு மற்றும் தொலைத்தொடர்பு சாதனங்கள் தடையை விலக்க வலியுறுத்தியும் பாகிஸ்தானில் இன்று கறுப்பு தினம் அனுசரிக்கப்பட்டது.
இந்தியா வசமுள்ள காஷ்மீரில் நடைபெறும் அடக்குமுறைகள் தொடர்பாக உலகின் கவனத்தை ஈர்ப்பதற்காக இன்று நாடு முழுவதும் கறுப்பு தினம் அனுசரிக்கப்படும் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அறிவித்திருந்தார்.
இதனைத்தொடர்ந்து, பாகிஸ்தானில் இன்று கறுப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது. நாட்டின் பல பகுதிகளில் காஷ்மீர் மக்களை ஆதரித்தும் இந்தியாவுக்கு எதிராகவும் பிரசார கூட்டங்கள் மற்றும் பேரணிகள் நடத்தப்பட்டன. இந்த செய்திகள் அரசு வானொலியில் அதிக முக்கியத்துவத்துடன் ஒலிபரப்பப்பட்டன.
கடந்த காலங்களைப்போல் இல்லாமல் மிக வலிமையான முறையில் தார்மீகரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் ராஜதந்திர முறையிலும் காஷ்மீர் மக்களுக்கு தாம் ஆதரவாக இருப்போம் என இம்ரான் கான் குறிப்பிட்டுள்ளார். உலகம் முழுவதிலும் உள்ள பாகிஸ்தான் தூதரகங்களும் கறுப்பு தினத்தை அனுசரிக்க வேண்டும் என அரசின் சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.