ஜனாதிபதியானதும் சிறைகளில் உள்ள அரசியல் கைதிகளுக்கு புனர்வாழ்வு அளித்து அவர்களை தான் விடுவிக்க உள்ளதாக என பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜாபக்ச தெரிவித்துள்ளார்.
யாழ்.றக்கா வீதியில் அமைந்துள்ள இளங்கதிர் விளையாட்டு கழக மைதானத்தில் இன்றைய தினம் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், “அனைவரும் சந்தோசமாக வாழும் நாட்டை கட்டிஎழுப்புவேன். அதனால் என்னை நம்பி நீங்கள் வாக்களியுங்கள். நான் ஜனாதிபதியானதும் நான் சொல்வதனை 100 வீதம் நிறைவேற்றுவேன்” எனக் குறிப்பிட்டள்ளார்.
“கடந்த 2009ஆம் ஆண்டுக்கு முன்னர் வடக்கில் பல இராணுவ முகாம்கள் அமைந்திருந்தன. பல இராணுவத்தினர் குவிக்கப்பட்டு இருந்தனர். அவற்றை நாம் சிறிது சிறிதாக அகற்றினோம். முப்படைகளின் வசம் இருந்த தனியார் காணிகளை காணி உரிமையாளர்களிடம் மீள கையளித்தோம் அவ்வாறு 90 வீதமான தனியார் காணிகளை மீள அவர்களிடம் கையளித்தோம்.
இன்றும் எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழ் மக்களுக்கு எதுவும் இல்லை என்று பொய் கூறுகிறார்கள். நாம் நாட்டின் அபிவிருத்தி தொடர்பில் குறிப்பிட்டுள்ளோம், விவசாயிகளுக்கு உரம் , மானியம், வழங்குவது தொடர்பில் குறிப்பிட்டுள்ளோம்.
கல்வி தொடர்பில் குறிப்பிட்டுள்ளோம். சாதாரண தரம் சித்தியடையாத மாணவர்களுக்கு தொழிற்கல்வி வழங்குவது தொடர்பில் நடவடிக்கைகளை எடுக்க உள்ளோம். பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்தி இளையோருக்கு வேலை வாய்ப்புக்களை ஏற்படுத்தி கொடுப்பதன் ஊடாக நாட்டினை கட்டியெழுப்ப முடியும்.
யுத்தத்தின் போது சரணடைந்த 13 ஆயிரம் விடுதலைப் புலிகளை புனர்வாழ்வுக்கு உட்படுத்தி அவர்களை சமூகத்துடன் இணைத்தோம். சிறைகளில் வாடிய 5000கும் மேற்பட்ட அரசியல் கைதிகளில் 274 பேரை தவிர ஏனையோரை கட்டம் கட்டமாக விடுவித்தோம். நான் ஜனாதிபதியானதும் தற்போது சிறையில் வாடும் 274 அரசியல் கைதிகளையும் விடுவிப்பேன்” என தெரிவித்தார்.