தேர்தலில் வெற்றி பெறுவதற்கு வாக்குகளே முக்கியமானவை. அந்த வாக்குகளைப் பெற்றுக்கொள்வதற்காகவே தேர்தல் கால வாக்குறுதிகள் வழங்கப்படுகின்றன. இந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுமா இல்லையா என்பது ஒரு புறமிருக்க, நாட்டு மக்களைக் கவர்ந்திழுக்கும் வகையில் வாக்குறுதிகளை அள்ளி வீசுவதில் வேட்பாளர்கள் தீவிரமாக இருப்பார்கள்.
அந்த வகையிலேயே இந்த ஜனாதிபதி தேர்தலிலும் வேட்பாளர்கள் வாக்குறுதிகளை அள்ளி வீசுகின்றார்கள். ஆனால் அந்த வாக்குறுதிகளுக்கும் மக்கள் எதிர்பார்க்கின்ற விடயங்களுக்கும் இடையில் ஒற்றுமை இருப்பதாகத் தெரியவில்லை. இந்த விடயத்தில், குறிப்பாக சிறுபான்மை இன மக்களைப் பொறுத்தமட்டில் அவர்களின் எதிர்பார்ப்புக்கும் அளிக்கப்படுகின்ற வாக்குறுதிகளுக்கும் அதிக இடைவெளி இருப்பதையே காண முடிகின்றது.
அபிவிருத்தி சார்ந்த விடயங்கள் இந்தத் தேர்தலில் முக்கியத்துவம் பெற்றிருக்கின்றன. தேசிய பாதுகாப்பு விவகாரத்திற்கும் அதிக கவனம் செலுத்தப்பட்டிருக்கின்றது. ஆனால் இந்தத் தேர்தலின் ஆணிவேராகிய அரசியல் விடயமாகிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு பற்றிய கருத்துக்களும் நிலைப்பாடும் மிகவும் மங்கிய நிலையிலேயே காணப்படுகின்றன.
நல்லாட்சி அரசாங்கத்தில் அரசியல் தீர்வு காணும் விடயத்தை உள்ளடக்கி புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இந்த முயற்சிகள் தீவிரம் மிக்க உளப்பூர்வமானதொரு நடவடிக்கையாக அமைந்திருக்கவில்லை. என்றாலும், அந்த முயற்சியில் முக்கிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன என்பதை மறுக்க முடியாது.
புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்காக முழு நாடாளுமன்றமும் அரசியல் நிர்ணய சபையாக மாற்றப்பட்டிருந்தது. புதிய அரசியலமைப்பைத் தயாரிப்பதற்கான வழிகாட்டல் குழு ஒன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் உருவாக்கப்பட்டிருந்தது. அதன் கீழ் விடய ரீதியான பரிந்துரைகளைப் பெறுவதற்காக உபகுழுக்களும் நியமிக்கப்பட்டிருந்தன.
அரசியல் வழிகாட்டல் குழு ஒரு பக்கமாகவும், உபகுழுக்கள் மறுபுறமாகவும் பல தடவைகள் கூடி விடயங்களை ஆராய்ந்திருந்தன. விவாதங்களை முன்னெடுத்திருந்தன. உபகுழுக்களின் சந்திப்புக்களையடுத்து, அவற்றின் பரிந்துரைகள் அரசியல் வழிகாட்டல் குழுவுக்கு சமர்ப்பிக்கப்பட்டிருந்தன.
சரியோ பிழையோ அரசியல் வழிநடத்தல் குழு உத்தேச அரசியல் அமைப்புக்கான வரைபு ஒன்றை உருவாக்குகின்ற அளவுக்கு – ஆமையையும் மிஞ்சுகின்ற தாமதமாக இருந்த போதிலும், முன்னேற்றகரமாக நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தது. பொது வெளியில் அந்த வரைபு தொடர்பிலான விவாதங்களும் இடம்பெற்றிருந்தன.
இந்த வகையில் அரசியல் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான முயற்சிகள் நல்லாட்சி அரசாங்கத்தில் முன்னெடுக்கப்பட்டிருந்தன. அரச தரப்பினருடன் எதிர்த்தரப்பினராகிய – இப்போது அரசியலில் எழுச்சி பெற்றுள்ள மகிந்த ராஜபக்ச தலைமையிலான பொதுஜன பெரமுனவில் முக்கியஸ்தர்களாக உள்ளவர்களும் இந்த அரசியல் முயற்சியில் முக்கிய பங்கேற்று செயற்பட்டிருந்தனர். இதனை எவரும் மறுத்துரைக்க முடியாது.
இத்தகைய பின்னணியில் புதிய அரசியலமைப்பு உருவாக்கத்திற்கான உத்தேசமோ, இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு உள்ளிட்ட அதன் முக்கிய அம்சங்களாகிய அரசியல் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்குரிய கவனமோ இந்தத் தேர்தல் பரப்புரைகளில் முக்கியத்துவம் பெறவில்லை.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறையை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும். தேர்தல் நடைமுறைகளில் மாற்றம் செய்ய வேண்டும். அத்துடன் இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீரவு காண வேண்டும் என்ற அரசியல் விவகார நோக்கங்கள் இங்கு கோட்டை விடப்பட்டிருக்கின்றன.
அரசியலமைப்பையே கேலிக் கூத்தாக்கிய நிறைவேற்று அதிகாரம்
நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்ற அரசியல் பிரசாரம் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க காலத்தில் இருந்தே தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளது. ஆயினும் அவரும்சரி, அவருக்குப் பின்னர் ஜனாதிபதியாக வந்தவர்களும்சரி ஜனாதிபதி ஆட்சி முறைக்கு முடிவுகட்டுவதற்கான முயற்சிகளில் எதிர்பார்க்கப்பட்ட வகையில் செயற்படவில்லை.
மூன்று தசாப்தங்களாகத் தொடர்ந்த யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நிறைவேற்று அதிகாரத்தைக் கடைப்பிடிப்பதில் வலிமை உடையவராகத் திகழ்ந்தார். அவரும்கூட ஜனாதிபதி ஆட்சி முறைக்கு முடிவு காண முற்படவில்லை. மாறாக அந்தப் பதவிக்கான நிறைவேற்று அதிகார எல்லைகளை விரிவுபடுத்துவதிலேயே தீவிர கவனம் செலுத்திய அவர், 18 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்து நிறைவேற்று அதிகாரத்தை சர்வாதிகாரப் போக்கிற்கு இட்டுச் சென்றிருந்தார்.
இந்த அரசியல் போக்கிற்கு முடிவுகட்டி ஜனாதிபதி ஆட்சிமுறையை மாற்றி அமைப்பதற்கான உறுதிமொழியோடு ஆட்சி அதிகாரத்தைப் பொறுப்பேற்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையிலான அரசாங்கத்தில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் முன் முயற்சியில் மகிந்த ராஜபக்சவின் 18 ஆவது திருத்தச் சட்டத்தை வலுவிழக்கச் செய்வதற்காக 19 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
ஜனாதிபதியாவதற்கு ஒருவர் எத்தனை தடவைகளும் தேர்தலில் போட்டியிடலாம் என்ற நிலைமையையும், ஜனநாயகத்திற்கு விரோதமான ஜனாதிபதியின் குறிப்பிட்ட வேறு சில அதிகாரங்களையும் நீக்கிய இந்த 19 ஆவது திருத்தச் சட்டம், ஜனாதிபதியின்; ஆட்சிக் கால அளவையும் குறைத்துள்ளது.
ஜனாதிபதி ஒருவர் எந்தவோர் அமைச்சுப் பொறுப்பையும் கொண்டிருக்க முடியாது. நாடாளுமன்றத்தை மீறிச் செயற்பட முடியாது என்ற அம்சங்களையும் புதிய அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் கொண்டிருக்கின்றது.
இந்த மாற்றங்களையடுத்து, அதிகாரத்தில் இருக்கின்றபோதே, ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்களை மட்டுப்படுத்தப்பட வேண்டும் என்ற அரசியல் திருத்தத்தை, உலகத்திற்கு முன்மாதிரியாகக் கொண்டு வந்த ஜனாதிபதி தான் ஒருவரே என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பெருமையாக தம்பட்டம் அடித்திருந்தார்.
ஆனால் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியை எந்த அளவுக்குக் கீழ் நிலையாக்க முடியுமோ அந்த அளவுக்குக் கீழ் நிலையாக்கும் வகையிலான சுய அரசியல் இலாபத்திற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து, அவரே அரசியலமைப்பை கேலிக் கூத்தான நிலைமைக்குக் கொண்டு வந்திருந்தார்.
இந்த பின்புலத்தில்தான் வெட்டிக் குறைக்கப்பட்ட அதிகாரங்களைக் கொண்;ட ஜனாதிபதியாவதற்காக 35 பேர் தேர்தல் களத்தில் போட்டியிடுவதற்காகக் குதித்தனர். இவர்களில் 30 பேர் வேட்பாளர் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர். இதனால், எப்போதும் இல்லாத வகையில் எண்ணிக்கையில் கூடிய வேட்பாளர்கள் போட்டியிடுகின்ற தேர்தலாக 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் சிறப்பு பெற்றிருக்கின்றது.
மிக நீண்ட வாக்குச்சீட்டைக் கொண்டதாகவும், அதில் வேட்பாளர்களின் சின்னங்களைத் தேடிக் கண்டுபிடித்து தாங்கள் விரும்பியவருக்கு மக்கள் வாக்களிப்பது தாமதமான வாக்களிப்புச் செயற்பாட்டைக் கொண்ட தேர்தலாகவும் இது பதிவாகி உள்ளது.
நீண்ட வேட்பாளர் பட்டியலைக் கொண்ட வாக்குச் சீட்டினால் எழுந்துள்ள இந்த நிலைமையை சமாளிப்பதற்காக வாக்களிப்பு நிலையங்களின் எண்ணிக்கையைக் கூட்டி, ஒரே நேரத்தில் வாக்களிப்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்வதற்கான நடவடிக்கைகளை தேர்தல் திணைக்களம் முன்னெடுத்துள்ளது. இதுவும் இந்தத் தேர்தலின் முக்கிய அம்சமாகும்.
நம்பிக்கையை வெல்லாத, அதிருப்தியை அதிகப்படுத்தும் பிரசாரங்கள்
இத்தகைய முக்கிய அம்சங்களைக் கொண்ட இந்தத் தேர்தல், பதவியில் இருக்கின்ற ஜனாதிபதியின் நடவடிக்கைகளையடுத்து, ஜனாதிபதி ஆட்சி முறைமைக்கு முடிவு கட்ட வேண்டும் என்ற அரசியல் நிலைமையை மேலோங்கச் செய்துள்ளது. ஆனால், அந்த நிலைப்பாட்டுக்கு அல்லது அந்த அரசியல் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு தேர்தல் களத்தில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருப்பதாகத் தெரியவில்லை.
இந்தத் தேர்தலில் 30 பேர் போட்டியிட்டிருந்தாலும், மூன்று வேட்பாளர்களே அரசியல் செல்வாக்கு பெற்றவர்களாகவும், முக்கிய மூன்று அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களாகவும் இருக்கின்றனர். இதனால் மும்முனைப் போட்டியே தீவிரம் பெற்றிருக்கின்றது.
வெற்றிவாய்ப்புக்கான தேர்தகளப் போட்டியில் உள்ள மூவருமே பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள். இந்தத் தேர்தலில் சிறுபான்மை இன வேட்பாளர்கள் முன்னணியில் இல்லை. சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த எவரும் ஜனாதிபதியாக வருவதற்கான சந்தர்ப்பமம் நாட்டின் அரசியல் மரபுவழியில் காணப்படவில்லை. அதற்கு சட்டரீதியான வழிமுறைகளும் அரசியலமைப்பில் உருவாக்கப்படவுமில்லை.
எனவே, முன்னணியில் உள்ள மூன்று வேட்பாளர்களும் பெரும்பான்மை இன மக்களின் வாக்குகளைத் தங்களுக்குள் பிரித்துக் கொள்வார்கள். அதாவது பெரும்பான்மை இன வாக்காளர்கள் கட்சி ரீதியாகவும், கொள்கை அடிப்படையிலும் மூன்றாகப் பிரிந்து மூன்று வேட்பாளர்களுக்கும் வாக்களிப்பார்கள்.
தேர்தலில் வெற்றி பெறுவதற்கு அளிக்கப்படுகின்ற வாக்குகளில் 50 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளை ஒருவர் பெற்றிருக்க வேண்டும். எனவே சிங்கள வாக்குகள் பிரிந்து செல்லுகின்ற நிலையில் வேட்பாளர் ஒருவர் அவ்வாறு அதிகப்படியான வாக்குகளைப் பெறுவார்களா என்பது சந்தேகமே. இருப்பினும் வெற்றி வாய்ப்புக்காக சிறுபான்மை இன மக்களின் வாக்குகளில் வேட்பாளர்கள் தங்கியிருக்க வேண்டிய நிலைமையே காணப்படுவதாக அரசியல் அவதானிகள் கூறுகின்றனர்.
தேர்தலில் எண்பது வீதத்துக்கும் அதிகமான சிங்கள மக்கள் வாக்களித்தால் அந்த வாக்குகளை மாத்திரம் பெற்று ஒருவர் வெற்றி பெறக் கூடிய சந்தர்ப்பம் காணப்படுகின்றது என்றும் அவர்கள் கணிக்கின்றனர்.
அத்தகைய அதிகூடிய வாக்களிப்பு இடம்பெறுமா என்பதையும் உறுதியாகக் கூற முடியாத ஒரு சூழலே நிலவுகின்றது. எனவே வெற்றிவாய்ப்பு தங்கியுள்ள சிறுபான்மை இன மக்களின் ஆதரவைப் பெற்று அந்த வாக்குகளை வசப்படுத்துவதற்கான தேவை வேட்பாளர்களுக்கு ஏற்பட்டிருக்கின்றது.
ஆனாலும், சிறுபான்மை இன மக்களின் அரசியல் அபிலாசைகளை அல்லது எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்கான உறுதிமொழிகளை வழங்குவதற்கு வேட்பாளர்கள் தயாரில்லாத நிலையே காணப்படுகின்றது. அத்துடன் அத்தகைய அரசியல் மனப்பாங்கையும் அவர்கள் கொண்டிருக்கவில்லை.
சிறுபான்மை இன மக்களின் நம்பிக்கையை வென்றெடுப்பதற்குப் பதிலாக அவர்களின் சந்தேகத்தை அதிகரித்து, அதிருப்தியை சம்பாதிக்கின்ற வகையிலேயே பிரதான வேட்பாளர்களின் பிரசார நடவடிக்கைகளும், செயற்பாடுகளும் அமைந்திருக்கின்றன.
மதவாதமும் இனவாதமும் தமிழர்களின் தாயகப் பிரதேசமாகிய வடக்கு கிழக்குப் பகுதிகளில் ஆக்கிரமித்து, இனப்பரம்பலைத் தலைகீழாக மாற்றி, தமிழ் மக்களின் இருப்பையே கேள்விக்கு உள்ளாக்கியுள்ள ஓர் அரசியல் பின்னணியில் சிறுபான்மை இன மக்களின் ஆதரவைத் திரட்டுவதற்கு வித்தியாசமான அரசியல் தந்திரத்தைக் கையாள்வதிலேயே வேட்பாளர்கள் ஈடுபட்டிருக்கின்றனர்.
மக்களையும் தலைவர்களையும் துண்டாடும் தந்திரோபாயம்
பேரினவாதிகளின் இனவாத மற்றும் மதவாத அணுகுமுறைகளினாலும், ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளினாலும் தங்களது இருப்பு குறித்து அச்சமடைந்துள்ள நிலையில் அவர்களுடைய பிரச்சினைகள் தொடர்பில் பேசுவதற்குத் தாங்கள் தயாராக இல்லை என்று வேட்பாளர்கள் வெளிப்படையாகவே கூறியுள்ளனர்.
அந்த மக்களுடைய பிரச்சினைகள் குறித்து முன்வைக்கப்பட்டுள்ள கோரக்கைகளை நிபந்தனைகளாக வர்ணித்து, எவ்வகையான நிபந்தனைகளுக்கும் தாங்கள் அடிபணியப் போவதில்லை என்ற சூளுரைப்பும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
பிரதான வேட்பாளர்களின் இந்த நிலைப்பாடானது, தமிழ் மக்கள் சார்பில் ஐந்து தமிழ் அரசியல் கட்சிகள் முன்வைத்துள்ள 13 அம்ச கோரிக்கைகளை செவிமடுக்க வேண்டிய தேவை தங்களுக்கு இல்லை என்று பொதுஜன பெரமுனவின் தலைவர் மகிந்த ராஜபக்ச வெட்டொன்று துண்டிரண்டாக தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக அல்லாமல் தமிழ் அரசியல் கட்சிகள் தமது நலன்களுக்காகவே அந்த நிபந்தனைகளை முன்வைத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே நிபந்தனைகளை முன்வைத்து தங்களைக் கட்டுப்படுத்த முயன்றிருக்கும் தமிழ் அரசியல் கட்சிகளுடன் பேசப் போவதில்லை என தெரிவித்துள்ள மகிந்த ராஜபக்ச சகோதரர்கள், தமிழ் மக்களுடன் நேரடியாகப் பேச்சுவார்த்தைகள் நடத்தி அவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படும் என்ற தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தி உள்ளனர்.
பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவதென்பது எந்த வகையில் சாத்தியம் என்பது தெரியவில்லை. மக்களுடைய பிரச்சினைகளுக்கு அவர்களைப் பிரதிநித்துவம் செய்கின்ற அரசியல் தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தி ஓர் உடன்பாட்டிற்கும் இணக்கப்பாட்டிற்கும் வருவதே ஜனநாயக வழிமுறை.
இதற்கு மாறாக அரசியல் தலைவர்களுடன் பேசமாட்டோம். மக்களுடன்தான் நேரடியாகப் பேச்சுக்கள் நடத்துவோம் என்பது அரசியல் ஏமாற்றுத்தனமே அல்லாமல் வேறில்லை. ராஜபக்சக்களின் நிலைப்பாடு இவ்வாறிருக்க, அவர்களின் ஆதரவு சக்தியாகவும், அவர்களின் அரசியல் நடவடிக்கைகளுக்கு உற்ற துணையாகவும் உள்ள சிங்கள பௌத்த தேசியவாத அமைப்புக்களும், அந்தத் தேசியவாதிகளாகிய தீவிரப் போக்குடையவர்களும் தமிழ் மக்களுடைய பிரச்சினைகள் தொடர்பில் இனவாதப் பிரசாரத்தை முன்னெடுத்துள்ளனர்.
ஐந்து தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து தமிழ் மக்களுடைய பிரச்சினைகள் தொடர்பில் முன்வைத்துள்ள 13 கோரிக்கைகளும் விடுதலைப்புலிகளின் தனிநாட்டுக் கோரிக்கையைவிட மோசமானவை. இனவாதத்தைத் தூண்டுபவை என நாட்டின் தென்பகுதியில் சிங்கள மக்கள் மத்தியில் அந்த சக்திகள் பிரசாரம் செய்து வருகின்றன.
தமிழ் மக்களின் கோரிக்கைகளை செவிமடுப்பதற்கு முன்வராமல் திரிபுபடுத்தி அவற்றுக்கு இனவாத முலாம் பூசுவது ஆரோக்கியமான தேர்தல்கால பரப்புரை நடவடிக்கையாகாது. அதேநேரத்தில் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாகிய தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் பேச்சு நடத்தாமல் மக்களுடன் நேரடியாகப் பேச்சுக்கள் நடத்தி தீர்வு காணப் போகிறோம் என கூறுவது தமிழ் மக்களையும் அவர்களது அரசியல் தலைவர்களையும் பிரித்துத் துண்டாடுகின்ற ஓர் இரண்டாந்தர அரசியல் நடவடிக்கையே ஆகும்.
கடந்த காலத்தைப் பற்றிப் பேசுவதில் பயனில்லை. எதிர்காலத்தைப் பற்றியே கவனம் செலுத்த வேண்டும் என்று கூறும் பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தாபாய ராஜபக்ச அபிவிருத்தி தொடர்பான விடயங்களையே தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டுள்ளார். தமிழ் மக்கள் எதிர் நோக்கியுள்ள பிரச்சினைகளுக்கும் இனப்பிரச்சினைக்கும் தீர்வு காண்பதற்கு அவரும் அவருடைய சகோதரர் மகிந்த ராஜபக்சவும் தயாராக இல்லை என்பதை இதன் மூலம் அவர்கள் வெளிப்படுத்தி உள்ளனர்.
வவுனியாவிலும் யாழ்ப்பாணத்திலும் அவர்கள் கலந்து கொண்டிருந்த தேர்தல் பிரசார கூட்டங்களில் தீர்வு காணப்படாமல் தேங்கிக் கிடக்கின்ற தமிழ் மக்களுடைய பிரச்சினைகள் குறித்தும் முக்கியமாக அரசியல் தீர்வு குறித்தும் அவர்கள் வாய் திறக்கவே இல்லை. ஆனால் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை வழங்கத் தயாராக இல்லை என்று தொனி செய்திருப்பதன் மூலம் அரசியல் தீர்வு விடயத்தையோ அல்லது தமிழ் மக்கள் எதிர்நோக்கியுள்ள ஏனைய எரியும் பிரச்சினைகளையோ தாங்கள் கவனத்தில் கொள்ளப் போவதில்லை என்பதை மறைமுகமாக உணர்த்தியிருப்பதாகவே தெரிகின்றது.
பொதுஜன பெரமுன மட்டுமல்ல. ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளராகிய சஜித் பிரேமதாசாவும் தமிழ் மக்களுடைய பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்தவில்லை. அரசியல் தீர்வைப் புறந்தள்ளிய ஒரு போக்கையே அவரும் கடைப்பிடித்து வருகின்றார்.
மொத்தத்தில் தேர்தலில் வெற்றிவாய்ப்பைக் கொண்டுள்ள இரண்டு பிரதான வேட்பாளர்களும் தமிழ் மக்களுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் விடயத்தில் அக்கறையற்ற போக்கையே கடைப்பிடித்துள்ளனர்.
இந்த நிலையில் தேர்தலில் வெற்றியை நிர்ணயிக்க வல்லதாகக் கருதப்படுகின்ற வாக்குப் பலத்தைக் கொண்டுள்ள சிறுபான்மை இன மக்கள் எவ்வாறு வாக்களிக்கப் போகின்றார்கள், தங்களது தீர்மானிக்கும் சக்தியை எவ்வாறு பயன்படுத்தப் போகின்றார்கள் என்பது தெரியவில்லை.