தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளை அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அச்சுறுத்துகின்ற செயற்பாட்டுக்கு கபே அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.
கபே அமைப்பின் பதில் நிறைவேற்றுப் பணிப்பாளர் அஹமட் மனாஸ் மக்கீன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது.
அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் நேற்றைய தினம் நடத்திய ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போது தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளுக்கு வெளிப்படையாகவே அச்சுறுத்தல் விடுக்ககும் வகையில் கருத்து வெளியிட்டுள்ளனர். இதனை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பிரதம செயலாளர் வைத்தியர் ஹரித அளுத்கே மற்றும் வைத்தியர் நவீன் டி சொய்சா ஆகிய இருவரும் இவ்வாறு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் கருத்து வெளியிட்டமையை வன்மையாக கண்டிக்கின்றோம் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் எந்தவகையிலும் பக்கச்சார்பாக செயற்படாத அமைப்புகளாகவே உள்ளன. தேர்தல் விதிமுறைகளை மீறுகின்றமை தொடர்பாக முறைப்பாடுகள் கிடைக்கின்ற போது அதற்கெதிராக நடவடிக்கை எடுப்பதற்கு தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் முன்வருகின்றன.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் அநுருத்த பாதெனிய , ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஸவின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்ட சந்தர்ப்பத்தில் அந்தக் கூட்டத்தில் பங்குபற்றியிருந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
அதுமட்டுமல்லாமல், நாட்டின் பல பிரதேசங்களில் இவ்வாறு அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உத்தியோகத்தர்கள், ஆளுநர்கள் உட்பட பல அரச உத்தியோகத்தர்கள் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் நேரடியாக தொடர்புபடுவதாக எங்களுக்கு பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருக்கின்றன.
அவ்வாறான முறைப்பாடுகளை நாங்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு மீள முறைப்பாடு செய்து வருகின்றோம்.
தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பான ஆலோசனைகளையும் விமர்சனங்களையும் முன்வைப்பதற்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்திற்கு உரிமை இருந்தாலும், தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடும் நிகழ்வுகளில் அவர்கள் கலந்துகொள்வதற்கு தேர்தல் சட்டத்தில் இடமில்லை. அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்திற்கு தேவையான வகையில் செயற்படுவதற்கு தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் ஒருபோதும் முன்வர மாட்டாதென்பதை உறுதியாக தெரிவித்துக்கொள்கின்றோம்.
அதேபோன்று சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலை நடத்துவதற்கான சூழலை ஏற்படுத்திக்கொடுப்பதே தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளின் பொறுப்பாக இருக்கின்றது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது #அரசவைத்தியஅதிகாரிகள்சங்கம் #கபே #கண்டனம்