திரைப்படத் துறையில் சாதித்ததற்காக ரஜினிகாந்துக்கு ‘ஐகான் ஆஃப் கோல்டன் ஜூபிலி’விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது. ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாத இறுதியில் கோவாவில் சர்வதேச திரைப்பட விழா நடைபெறும். தொடர்ந்து ஒரு வாரம் நடைபெறும் இவ்விழாவில் சர்வதேச திரைப்படங்கள், பிராந்திய திரைப்படங்கள் திரையிடப்படும். திரைப்பட மாணவர்கள், ஆர்வலர்கள், ஆய்வாளர்கள், கலைஞர்கள் என ஆயிரக்கணக்கானோர் இவ்விழாவில் கலந்து கொள்வர். இவ்வருடம் நவம்பர் 20 முதல் 28 வரை நடைபெறும் இவ்விழா கோவா திரைப்பட விழாவின் 50 ஆவது ஆண்டாகும்.
அதனை முன்னிட்டு, இவ்விழா மிக விமரிசையாக கொண்டாடப்படவுள்ளது. 200 வெளிநாட்டு படங்கள் திரையிடப்படவுள்ளன. அதில் 24 படங்கள் ஆஸ்கார் பரிந்துரைகளுக்கான போட்டியில் உள்ளன. ‘பதாய் ஹோ’, ‘கல்லி பாய்’, ‘உரி’ போன்ற பொலிவுட் திரைப்படங்கள் இத்திரைப்பட விழாவில் திரையிடப்பட உள்ளன. மேலும், 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள 12 வெவ்வேறு மொழி திரைப்படங்களும் திரையிடப்பட இருக்கிறது. அத்துடன் திரைப்பட துறையில் சாதித்தவர்களை கெளரவிக்கும் விதமாக பல்வேறு விருதுகளும் வழங்கப்படவுள்ளன.
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்துக்கு திரைப்படத் துறையில் சாதனை புரிந்ததற்காக ‘ஐகான் ஆஃப் கோல்டன் ஜூபிலி’(ICON OF GOLDEN JUBILEE) விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இன்று(நவம்பர் 2) காலை வெளியிட்ட அறிக்கையில், “கடந்த பல தசாப்தங்களாக, இந்திய சினிமாவுக்கு ரஜினிகாந்த் செய்த சிறந்த பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக, இந்தாண்டிற்கான ‘ஐகான் ஆஃப் கோல்டன் ஜூபிலி’க்கான விருதை சினிமா நட்சத்திரம் ரஜினிகாந்திற்கு வழங்கப்படுவதாக அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்” எனக் கூறியுள்ளார். #ரஜினிகாந் #சர்வதேசதிரைப்படவிழா #ஐகான் ஆஃப் கோல்டன் ஜூபிலி