ஐந்து தமிழ்கட்சிகள் கூடிக் கூடிப் பேசி ஒருவாறாக ஒரு தீர்மானத்தை எட்டிவிட்டன. வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்முயற்சியில் ஒன்று கூடிய ஆறு கட்சிகளில் ஒரு கட்சி ஜனாதிபதி தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும் என்ற முடிவைத் தனித்து எடுத்து ஏற்கனவே அறிவித்துவிட்டது.
ஆறு கட்சிகளும் கூடி நிலைமைகளை ஆராய்ந்து என்ன செய்வது என்ற தீர்மானத்தை எட்டுவதற்கு முன்பே பொன்னம்பலம் கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும் என்ற தன்னிச்சையான முடிவை மேற்கொண்டு அதனை அறிவித்திருந்தது.
அந்த அறிவித்தலை ஊடகங்கள் வாயிலாக வெளியிட்ட பின்னரும் தேர்தல் தொடர்பாக ஒன்றிணைந்த ஒரு தீர்மானத்தை எடுப்பதற்கான கட்சிகளின் கூட்டத்தில் அது கலந்து கொண்டு கூட்டத்தில் பேசப்பட்ட விடயங்களில் விவாதத்தில் ஈடுபட்டிருந்தது. ஆயினும் அந்தக் கட்சியைத் தவிர ஏனைய ஐந்து கட்சிகள் கூட்டத்தில் இனம் காணப்பட்ட 13 அம்சங்களை ஏற்றுக்கொண்டு கையெழுத்து இட்டிருந்தன. ஆனால் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தனது கோரிக்கை ஏற்கப்படவில்லை என்ற காரணத்தைக் குறிப்பிட்டு அந்த ஆறுகட்சி கூட்டில் இருந்து வெளியேறியது.
மிஞ்சிய ஐந்து கட்சிகளும் முன்வைத்த 13 அம்ச கோரிக்கைகளை ஏற்பதற்கு முன்னணியில் உள்ள மூன்று வேட்பாளர்களும் முன்வரவில்லை. இரண்டு வேட்பாளர்கள் அந்தக் கோரிக்கைகளை முற்றாகவே நிராகரித்த போக்கைக் கடைப்பிடித்தனர். ஜேவிபியின் வேட்பாளராகிய அனுர குமார திசாநாயக்க அரைகுறையாக அந்த 13 அம்சங்கள் குறித்து கருத்து வெளியிட்டிருந்தார்.
ஆனாலும் அந்த 13 அம்சங்களின் அடிப்படையில் தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து தமிழ்க்கட்சிகளுடன் பேச்சு நடத்துவதற்கு எவருமே முன்வரவில்லை. இதனால் ஏற்றுக்கொள்ளப்படாத 13 அம்சங்களின் அடிப்படையிலான கோரிக்கைகளை வைத்துக் கொண்டு அடுத்து என்ன செய்வது என்பதைத் தீர்மானிக்க வேண்டிய அவசியம் தமிழ்க்கட்சிகளுக்கு எற்பட்டிருந்தது.
சுட்டிக்காட்டி கூற முடியாத நிலை
தேர்தலில் களமிறங்கியுள்ள மூன்று பிரதான வேட்பாளர்களும், அவர்களுடைய கட்சிகளும் தமிழ் அரசியல் கட்சிகளை வேறாகவும், வாக்காளர்களாகிய தமிழ் மக்களை வேறாகவும் நோக்குகின்ற போக்கைக் கடைப்பிடித்ததனால், தேர்தல் தொடர்பில் தீர்க்கமான ஒரு முடிவை மேற்கொள்வதில் ஐந்து தமிழ்க்கட்சிகளுக்கும் சிக்கலான நிலைமை ஏற்பட்டுவிட்டது.
அரசியல் ரீதியாக வெறுத்து ஒதுக்கப்படுகின்ற தரப்பாகத் தமிழ்த்தரப்பினர் இருக்கின்ற ஒரு சூழலில் எந்த வேட்பாளரை ஆதரித்து வாக்களிப்பது என்பதைத் தீர்மானிப்பது மிக மிக கடினமான விடயமாக மாறிவிட்டது. பேரின அரசியல் நிலைமைகளை அவ்வாறு மாற்றிவிட்டது என்றே கூற வேண்டும்.
இத்தகைய ஒரு நிலைமையில்தான் ஐந்து கட்களும் ஒன்றிணைந்து விரும்பிய வேட்பாளருக்கு மக்கள் வாக்களிக்கலாம் என்று திருவாய் மலர்ந்திருக்கின்றன. இந்தத் தீர்மானத்தை ஒன்றிணைந்து வெளியிடுவதற்கு முன்னர் முதல் நாளே தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் முன்னாள் வடமாகாண முதலமைச்சருமாகிய விக்னேஸ்வரன் ஊடகங்களுக்கு அறிக்கை மூலமாக வெளிப்படுத்திவிட்டார். .
தேர்தல் களத்தில் குதித்துள்ள எந்த வேட்பாளருக்குத் தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டி கூற முடியாது. மக்கள் தாங்களாகவே கடந்த கால நிலைமைகளையும் தற்போதைய அகப் புறச் சூழ்நிலைகளையும் கருத்திற் கொண்டு தமது வாக்குரிமையைப் பயன்படுத்த வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
இந்தத் தேர்தலில் வழமையைவிட இனவாத அரசியல் பிரசாரம் தீவிரமாக முனைப்புப் பெற்றிருக்கின்றது. இந்தச் சூழலில் குறிப்பிட்ட ஒரு வேட்பாளரை தமிழ் மக்கள் ஆதரிக்க வேண்டும் என்று வெளிபபடையான முடிவெடுத்தால், களத்தில் எதிர்த்தரப்பில் உள்ள வேட்பாளர்கள் அதனைத் தமது இனவாத பிரசாரத்துக்கு சாதகமாகப் பயன்படுத்தி சிங்கள மக்களைத் திசைதிருப்பி விடுவார்கள்.
அவ்வாறு சிங்கள மக்களைத் திசை திருப்பினால் தமிழ் மக்கள் ஆதரித்த வேட்பாளர் தோல்வியைத் தழுவ நேரிடலாம். அதனால் தமிழ் மக்கள் தோல்வியடைந்த ஒரு வேட்பாளருக்கு தமது பெறுமதி மிக்க வாக்குகளை அளித்து, அவற்றை வீணாக்கிவிட்டார்கள் என்ற நிலைமைக்கு ஆளாக நேரிடும்.
தவறிய செயற்பாடுகள்
எனவே தேரதல் தொடர்பில் தீர்மானம் மேற்கொள்வதற்காக ஒன்று கூடிய ஐந்து தம்ழ்க்கட்சிகளும் தமிழ் மக்களை அந்த நிலைமைக்கு ஆளாக்கிவிட்டன. தீர்க்கதரிசனமற்ற முறையில் செயற்பட்டு மக்களைத் தவறாக வழிநடத்திவிட்டன என்ற பழிச்சொல்லுக்கு ஆளாகவும் நேரிடலாம். இதனைத் தவிர்ப்பதற்காகவே மக்கள் தங்களுடைய தீர்மானத்திற்கமைய விரும்பியவாறு வாக்களிக்கலாம் என்று ஐந்து கட்சிகளும் தீர்மானித்திருக்கின்றன.
விடுதலைப்புலிகளுக்குப் பின்னரான அரசியல் சூழலில் தமிழ்த்தரப்பில் ஆளுமையும் செயல் வல்லமையும் கொண்டதோர் அரசியல் தலைமை உருவாகவில்லை. விடுதலைப்புலிகளினால் நாடாளுமன்ற அரசியல் தேவைக்காக தமிழ்த்தேசிய கூட்டமைப்பை உருவாக்கி இருந்தனர். அவர்களுடைய செயற்பாடுகள் மௌனிக்கப்பட்டதன் பின்னர் தமிழ் அரசியலின் தலைமைப் பொறுப்பு தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலையில் வந்திறங்கியது.
ஆனாலும் சிறுபான்மை இன மக்களை இரண்டாந்தரக் குடிமக்களாகவே வைத்திருக்க வேண்டும் என்ற ஆழமான பேரினவாத அரசியல் சிந்தனையையும் அதன் வழிமுறையிலான செயற்பாடுகளையும் சரியாக இனங்கண்டு, அதற்கேற்ற முறையில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பினால் செயற்பட முடியவில்லை.
தீர்க்கதரிசனமும், இராஜதந்திர ரீதியிலான செயல் வல்லமையும், பேரினவாதப் போக்கினால் எழுந்துள்ள சவால்களை தந்திரோபாய ரீதியில் எதிர்கொண்டு முன்னேறுவதற்கான நடவடிக்கைகளிலும் கூட்டமைப்பு ஈடுபடத் தவறிவிட்டது என்றே கூற வேண்டும்.
விடுதலைப்புலிகள் என்ற கட்டமைப்பின் பின்னால் அணிதிரண்டிருந்த தமிழ் மக்கள் அவர்களுக்குப் பிறகு தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமையின் கீழ் ஓரணியில் திரண்டிருந்தார்கள். மக்கள் ஒற்றுமையாகி இருந்தார்கள். ஆனால் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகள் தமக்கிடையிலான கட்சி நிலை வேறுபாடுகளைக் களைந்து தமிழ் மக்களுக்கான ஓர் இறுக்கமான கட்டமைப்பைக் கொண்ட அரசியல் தலைமையை உருவாக்கத் தறிவிட்டன.
தமிழர் தரப்புக்கு அவசியமான உறுதியான கட்டமைப்பைக் கொண்ட ஒர் அரசியல் தலைமையை உருவாக்க தமிழ்த்தேசிய கூட்டமைப்பினால் முடியாமல் போய்விட்டது. தமிழ்த்தேசிய கூட்டமைப்பு என்ற கூட்டுக்குள் இணைந்த தமிழ்க்கட்சிகளினால் ஒன்றிணைந்த அதிகாரபூர்வமான அந்தஸ்தைக் கொண்ட ஒரு கூட்டமைப்பைக் கட்டியெழுப்ப முடியாமல் போய்விட்டது.
நிலைமைகள் மோசமடைவதற்கான அறிகுறிகள்
யுத்தத்திற்குப் பின்னரான பத்துவருட காலப்பகுதியில் தேர்தலுக்காகக் கட்டுண்;ட ஒரு நிலையிலேயே பங்காளிக் கட்சிகள் தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் கூட்டிணைந்திருந்தன. தேசிய முக்கியத்துவம் மிக்க சந்தர்ப்பங்களிலும், இக்கட்டான சூழல்களிலும் தமிழ்மக்களின் நலன்களை முதன்மைப்படுத்திய அரசியல் செயற்பாடுகளை முன்னெடுப்பதிலும் கூட்டமைப்பு தவறிவிட்டது. கூட்டமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட அரசியல் நடவடிக்கைகள் அரச தரப்பின் நலன்களை மேம்படுத்துவதற்கும், சிக்கல்களில் இருந்து அதனை மீட்பதற்குமே உதவியிருந்தன.
தீர்க்கப்பட்டிருக்கக் கூடிய தமிழ் மக்களின் அன்றாடப் பிரச்சினைகளைக்கூட கூட்டமைப்பினால் தீர்க்க முடியாமல் போய்விட்டது. அவற்றுக்குத் தீர்வு காண முடியாமல் போய்விட்டது. இத்தகைய ஒரு பின்புலத்தில்தான் 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் எந்தத் தரப்பையும் வெளிப்படையாக ஆதரிக்க முடியாத கையறு நிலைமைக்குத் தமிழ் மக்கள் ஆளாகியிருக்கின்றார்கள்.
அரசியல் ரீதியாக அவர்களை வழிநடத்த வேண்டிய தலைமைகள் மக்களை நோக்கி இந்தத் தேர்தலில் நீங்களே ஆரோக்கியமான ஒரு தீர்மானத்தை மேற்கொண்டு உங்களுடைய வாக்களிக்கும் உரிமையைப் பயன்படுத்துங்கள் என்று கூறுகின்ற நிலைமைக்கு ஆளாகி இருக்கின்றன.
இது வாக்களிப்பதற்கு முந்திய நிலைமை. தேர்தல் முடிந்த பின்னரான நிலைமைகள் இன்னும் மோசமடைவதற்கான அறிகுறிகளே தென்படுகின்றன. இந்தத் தேர்தலில் முன்னணியில் இருக்கின்ற மூன்று வேட்பாளர்களுமே, யுத்தகாலத்தில் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்களைக் குற்றச் செயல்களாக ஏற்றுக்கொள்கின்ற அரசியல் நிலைப்பாட்டைக் கொண்டிருக்கவில்லை.
இராணுவ நலன்கள் சார்ந்த அரசியல் கொள்கையே அவர்களிடம் மேலோங்கிக் காணப்படுகின்றது. அதேநேரம் நாட்டில் யுத்தம் ஒன்று மூள்வதற்குக் காரணமாகிய இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்ற தேசிய ரீதியிலான அரசியல் மனப்பாங்கும் அவர்களிடம் இல்லை.
இணை அனுசரணை உறுதிமொழியை மேவிய நிலை
போர்க்குற்றங்கள் எதுவுமே இடம்பெறவில்லை என்ற பொதுவான நிலைப்பாட்டையே அவர்கள் கொண்டிருக்கின்றார்கள். அந்த நிலைப்பாட்டின் அடிப்படையில் இராணுவத்தின் நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும். அவைகள் மேம்படுத்தப்பட வேண்டும். தேசிய பாதுகாப்பு என்ற போர்வையில் தமிழ் மக்களின் நியாயமான அரசியல் கோரிக்கைகளையும், வரலாற்று ரீதியான நில உரித்தையும், மதம்சார்ந்த பாரம்பரிய கலைகலாசார உரித்துகளையும் படிப்படியாக இல்லாமல் செய்ய வேண்டும் என்ற சிங்கள பௌத்த தேசியக் கொள்கையையே இந்த வேட்பாளர்களிடம் மறைமுகமாகவும் வெளிப்படையாகவும் காணப்படுகின்றன.
போர்க்குற்றங்கள் எதுவும் நாட்டில் இடம்பெறவில்லை என்று பிரதான வேட்பாளர்களில் ஒருவராகிய கோத்தாபாய ராஜபக்ச தனது தேர்தல் பரப்புரைகளின்போது அடித்துக் கூறியிருக்கின்றார். இந்தத் தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்பும் அந்த நிலைப்பாட்டையே அவர் கொண்டிருந்தார். அவருடைய சகோதரரரும் பொதுஜன பெரமுனவின் தலைவருhகிய, யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்த மகிந்த ராஜபக்ச இந்த நிலைப்பாட்டில் மிகவும் உறுதியாக இருந்து வருகின்றார்.
போர்க்குற்றச் செயல்கள் இடம்பெற்றிருக்கின்றன என சுட்டிக்காட்டி, அவற்றுக்குப் பொறுப்பு கூற வேண்டும். யுத்தம் மூள்வதற்குக் காரணமாகிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும். விடுதலைப்புலிகளைக் கட்டுப்படுத்துவதற்காகக் கொண்டுவரப்பட்டு, நீக்கப்படாமல் உள்ள பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கி, அதற்குப் பதிலாக சர்வதேச நியமங்களுக்கு அமைவான ஒரு சட்டத்தை உருவாக்க வேண்டும் என்ற ஐநாவும் சர்வதேச நாடுகளும் கோரியிருக்கின்றன.
இவற்றை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி ஐநா மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான இருகட்சி அரசு இணை அனுசரணை வழங்கியிருந்தது. அந்த உறுதிமொழியையும் மேவி, அந்தத் தீர்மானங்களை ஏற்க முடியாது. சர்வதேசத்தின் வலியுறுத்தல்களுக்கு இடமளிக்க முடியாது என்று சூளுரைத்து தேர்தலில் வெற்றி பெற்றதும் அமைக்கவுள்ள புதிய அரசாங்கத்தில் அவற்றுக்கு இடமளிக்கப் போவதில்லை என்று உறுதியாக கோத்தபாய ராஜபக்ச கூறியுள்ளார்.
அவருக்குப் பின்னால் இருந்து அவரை இயக்குவதாகக் கருதப்படுகின்ற தென்னிலங்கையின் வலிமை மிக்க அரசியல்வாதியாகக் குறிப்பிடப்படுகின்ற மகிந்த ராஜபக்சவும் இந்த நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளார். ஜனாதிபதியாகப் பதவி வகித்த போதே இங்கு போர்க்குற்றங்கள் எதுவும் இடம்பெறவில்லை என அடித்துக்கூறி ஐநா மனித உரிமைப் பேரவையையும் சர்வதேசத்தையும் அவர் புறந்தள்ளியிருந்தார் என்பது நினைவூட்டத்தக்கது.
ஏற்கனவே குறிப்பிட்டதுபோன்று இந்த ஜனாதிபதி தேர்தலில் இனவாதப் போக்கு தீவிரமாகத் தலைநிமிர்;த்தி உள்ளதனால், ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசாவும் தேர்தலில் வெற்றிபெற நேர்ந்தால் போர்க்குற்றச் செயற்பாடுகளுக்கு பொறுப்பு கூறுகின்ற கடப்பாட்டைக் கருத்தில் கொண்டிருக்கமாட்டார் என்றே உறுதியாகத் தெரிகின்றது.
தேர்தல் விஞ்ஞாபன கொள்கைகளுக்கே அங்கீகாரம்
அது மட்டுமன்றி தேர்தலில் எவர் வெற்றிபெற்றாலும், அவரும், அவருடைய கட்சி உட்பட அவரைச் சார்ந்தவர்களும் இந்த நிலைப்பாட்டையே கொண்டிருப்பார்கள் என்பதற்கான அறிகுறிகளே காணப்படுகின்றன.
தேர்தலில் வெற்றி பெற்றதன் பின்னர், தேர்தல் விஞ்ஞாபனத்தில் முன்வைக்கப்பட்ட கொள்கைகளுக்காகவே மக்கள் வாக்களித்தார்கள். அந்தக் கொள்கைகளை தமிழ் மக்களும் ஏற்றுக்கொண்டுள்ளார்கள் என்று நிச்சயமாக வெற்றிபெற்ற ஜனாதிபதி கூறுவார். அதனை சர்வதேசத்திற்கும் அவர் சுட்டிக்காட்டத் தவறமாட்டார்.
குறிப்பாக இத்தகைய வெற்றியின் மூலம் நாட்டில் இனப்பிரச்சினை என்றொரு பிரச்சினை இல்லை. விடுதலைப்புலிகள்; பயங்கரவாதிகள். அவர்கள் பயங்கரவாதச் செயற்பாடுகளிலேயே ஈடுபட்டிருந்தனர். அவர்களுடைய பிடியில் கேடயமாக இருந்த தமிழ் மக்களை இராணுவமே தனது மனிதாபிமான இராணுவ நடவடிக்கையின் மூலம் மீட்டெடுத்தது. அந்த மக்களுக்கு பொருளாதாரப் பிரச்சினையே உள்ளது.
போரினால் சீரழிந்துள்ள வடக்கையும் கிழக்கையும் மட்டுமல்லாமல் அழிவுக்கு உள்ளாகிய நாட்டின் ஏனைய பகுதிகளையும் அபிவிருத்தியின் மூலம் பொருளாதார ரீதியில் கட்டியெழுப்புவதற்கே மக்கள் வாக்களித்து புதிய ஜனாதிபதியைத் தேர்ந்தெடுத்துள்ளார்கள் என்று வெற்றி பெறுகின்ற ஜனாதிபதி அரச தலைவர் என்ற ரீதியில் நிலைமைகளை எடுத்துக் கூறி, தமிழ் மக்களின் அரசியல் தீர்வு மற்றும் அன்றாடப் பிரச்சினைகளை அதிகாரபூர்வமாகப் புறந்தள்ளக்கூடிய நிலைமையும் இப்போதே காணப்படுகின்றது.
போர்க்குற்றச்சாட்டுக்களுக்குப் பொறுப்பு கூறுகின்ற பொறுப்பைத் தட்டிக்கழித்து, இழுத்தடித்து காலம் தாழ்த்தியதனால் ஏற்கனவே தமிழ் மக்களின் அரசியல் தீர்வு உள்ளிட்ட ஏனைய பிரச்சினைகள் நீர்த்துப் போகத் தொடங்கியிருக்கின்றன.
இந்தத் தேர்தலின் பின்னரான அரசியல் சூழலில் ஜனாதிபதி தேர்தலுக்காக முன்வைக்கப்பட்ட பொருளாதார அபிவிருத்தி தொடர்பிலான வாக்குறுதிகளை நிறைவேற்றுகின்ற பொறுப்பே அரசுக்கு உள்ளடு என்ற ரீதியில் தமிழ் மக்களின் பிரச்சினைகளைப் புறந்தள்ளி பேரினவாதத்துக்கு இசைவான அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்கக் கூடிய வாய்ப்புக்களும் இப்போதே தென்படுகின்றன.
புதுப்புனல் பாயுமா?
இத்தகைய நிலைமைகளுக்கு ஜனாதிபதி தேர்தலைத் தொடர்ந்து நடத்தப்படவுள்ள பொதுத் தேர்தலும் வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கலாம். தமிழ் மக்களின் வாக்குகளே ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறுபவரைத் தீர்மானிக்கின்ற ஜனநாயக சக்தியாகத் திகழ்கின்றது. ஆனால் பேரின அரசியல் கட்சிகளின் தேர்தல்கால அணுகுமுறையின் மூலம் தமிழ் மக்களுடைய அந்த ஜனநாயக சக்தி வலுவிழந்து போயுள்ளது.
இந்தத் தேர்தலைப் பின்பற்றி பொதுத்தேர்தலிலும் இதேபோன்ற உத்தியை அல்லது இதற்கும் மேலாக வலிமையுள்ள அரசியல் உத்தியைப் பயன்படுத்தி தமிழ்த்தரப்பின் அரசியல் வலிமையைப் பலவீனப்படுத்துவதற்கு சிங்கள பௌத்த தேசியம் முயற்சிக்கலாம். இல்லையென்று சொல்வதற்கில்லை.
இத்தகைய பின்புலத்தில் தமிழ்த்தரப்பில் ஏற்பட்டுள்ள ஆளுமையும் செயல்வல்லமையும் உடைய அரசியல் தலைமக்கான வெற்றிடம் நிரப்பப்பட வேண்டும். அந்தத் தலைமையானது தென்னிலங்கையில் உருவாகியுள்ள புதிய அரசியல் போக்கைப் போன்ற புதுப்புனல் பாய்ந்ததாக அமைந்திருத்தலும் அவசியம்.
தமிழ்த்தரப்பு அரசியலின் பலவீனமான தலைமைக்குப் பதிலாக மாற்றுத் தலைமையொன்றை உருவாக்க வேண்டும் என்ற தேவையைப் பூர்த்தி செய்வதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் ஏற்கனவே முன்னணியில் உள்ள அரசியல் தலைமைகளைப் பயன்படுத்தி புதிய தலைமையை உருவாக்குவதாக அமைந்திருந்தது.
புதிதாக உருவாக்கப்பட்ட வடமாகாண சபையின் அரசியல் தலைமைக்குப் புதிய வரவாகக் கொண்டுவரப்பட்டிருந்த முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரனும் அரசியல் நிலைமைகளில் தமிழ் மக்களுக்கு ஏற்பட்டுள்ள சாவல்களுக்கு உறுதியாக முகம் கொடுத்து வெற்றிகரமாக முன்னேறிச் செல்கின்ற ஒருவராகத் தன்னை அவர் நிரூபிக்கவில்லை. மாற்றுத்தலைமைக்கான தலைமை நிலையில் அவரை வைத்துச் செயற்படுவதற்காக மேற்கொள்ளப்பட்ட அரசியல் சக்திகளை ஓரணியில் திரட்டி, உறுதியானதோர் கட்டமைப்பை உருவாக்க அவரால் முடியாமல் போய்விட்டது.
அவரும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் போக்கில் பயணிக்கின்ற ஒரு தலைவராகவே தன்னை இதுவரையில் இனம் காட்டியுள்ளார்.
இத்தகைய பின்னணியில் தமிழ்த்தரப்பில் ஆளுமையும் செயல்வல்லமையும் தீர்க்கதரிசனச் செயற்பாட்டையும் கொண்ட புதிய தலைமையொன்று எழுச்சி பெற வேண்டும். அது காலத்தின் கட்டாயத் தேவையாகி உள்ளது.
அத்தகைய தலைமை உருவாகுமா? எவ்வாறு உருவாகும் என்பது தெரியவில்லை.