மிகவும் தான்தோன்றித்தனமான முறையில் கட்சியின் யாப்பையும் விதிமுறைகளையும் மீறி பொதுஜன பெரமுனவுடன் சுதந்திரக் கட்சி கூட்டணி அமைத்துக்கொண்டுள்ளதுடன் அதன் வேட்பாளருக்கு ஆதரவும் வழங்கியுள்ளது என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
சுதந்திரக் கட்சியை காப்பாற்றவே நான் இவ்வாறான நடவடிக்கையை எடுத்துள்ளேன் என்றும் சந்திரிகா குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் நான் எடுத்துள்ள நிலைப்பாடு மற்றும் தீர்மானம் தொடர்பில் உங்களை தெளிவுபடுத்தவேண்டும்.
சுதந்திரக் கட்சி பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவளிப்பதுடன் அக்கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளதாக ஊடகங்கள் வாயிலாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எமது கட்சியின் யாப்புக்கு அமைய இந்த தீர்மானம் தொடர்பில் மத்திய குழுவின் அனுமதி பெறப்படவில்லை என்பதனை நான் அறிவேன். 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதத்திலிருந்து எனக்கு மத்திய குழுக் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கவில்லை.
2019 ஆம் ஆண்டு மே மாதம் அளவில் நான் வெளிநாட்டில் இருக்கும்போது ஒரு கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. நான் வெளிநாட்டில் இருப்பது தெரிந்தும் இவ்வாறு செய்தமை தொடர்பில் நான் எதிர்ப்பை வெளியிட்டிருந்தேன். அதன்பின்னர் இதுவரை எந்தவொரு கூட்டத்துக்கும் எனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.
மேலும் மிகவும் தான்தோன்றித்தனமான முறையில் கட்சியின் யாப்பையும் மீறி பொதுஜன பெரமுனவுடன் கூட்டணி அமைத்துக்கொண்டுள்ளதுடன் அதன் வேட்பாளருக்கு ஆதரவும் வழங்கப்பட்டுள்ளது.
இன்றுவரை நான் உள்ளிட்ட கட்சியின் நிறைவேற்று செயற்குழுவுக்கும் அகில இலங்கை செயற்குழுவுக்கும் முறையாக அறிவிக்கப்படவில்லை. நிலைமை இவ்வாறு இருந்தும் நான் மௌனமாக இருந்தேன். அப்போது ஜனநாயக தேசிய முன்னணியின் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வுக்கு எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டு நான் அதில் பங்கேற்றேன்.
பல்வேறு கட்சிகளின் கூட்டங்களில் ஏனைய கட்சியினர் பங்கேற்பதைப்போன்று நானும் பங்கேற்றேன். இதற்கு முன்னர் 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் சம்மேளனத்தில் என்னுடன் நீங்களும் பங்கேற்றிருந்தீர்கள். தற்போது சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்கள் முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட பலர் என்னை பல தடவைகள் சந்தித்து சுதந்திரக் கட்சிக்கு பொது பெரமுனவுடன் இணைந்தமைக்கும் கோத்தாபயவுக்கு ஆதரவு வழங்கியமைக்கும் எதிர்ப்பு தெரிவித்ததுடன் தமக்கு வேறு வழியை காட்டுமாறு கேட்டனர்.
ஜனநாயக தேசியக் கூட்டணி தொடர்பில் நீங்களும் எந்த எதிர்ப்பையும் வெளியிடவில்லை. 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தலில் தோல்வியடையவிருந்த எமது கட்சியை உங்கள் தலைமையில் நாங்கள் மீட்டு கொண்டுவந்தோம்.
தற்போது எமது கட்சியை அழிப்பதற்கு சிலர் முயற்சிக்கின்ற சந்தர்ப்பத்தில் கட்சியை பாதுகாத்து எமது அரசாங்கத்தை அமைத்து ஆதரவாளர்களுக்கு அதன் பயனை பெற்றுக்கொடுக்க இதனை தவிர வேறு வழியில்லை என்று கருதுகின்றேன்.
பொதுஜன பெரமுன கட்சியுடன் செய்துகொண்டுள்ள உடன்படிக்கை மூலம் சுதந்திரக் கட்சி இறுதி பயணத்தை ஆரம்பித்துள்ளது. உடன்படிக்கையின் 12 ஆவது பிரிவு இதனை வெளிப்படுத்துகின்றது. 1980 களில் சிறிமாவோ பண்டாரநாயக்கவை கட்சியிலிருந்து விரட்ட மஹிந்தவும் மைத்திரிபால சேனாநாயக்கவும் சதி செய்தனர். ஜே.ஆர். ஜயவர்த்தனவும் கொப்பேகடுவவும் போட்டியிட்டபோது மஹிந்த பசில் ராஜபக்ஷவை ஐக்கிய தேசிய கட்சிக்கு அனுப்பி கொப்பேகடுவ தோற்பதற்கு வழிசமைத்தார்.
அதன் பயனாக 17 வருடங்கள் எமது ஆதரவாளர்கள் தாக்குதலுக்கு உட்பட்டு எதிர்க்கட்சியில் இருந்தனர். 1994 ஆம் ஆண்டு நான் மேற்கொண்ட முயற்சியில் மீண்டும் எமது ஆட்சி வந்தது. அதற்கு மஹிந்த எந்த ஆதரவையும் வழங்கவில்லை. எனினும் நான் அவருக்கு அமைச்சரவை பதவி ஒன்றையும் வழங்கினேன்.
ஆனால் 2001 ஆம் ஆண்டு எமது கட்சியிலிருந்த 9 பேரை ஐக்கிய தேசிய கட்சிக்கு அனுப்பி அவர்களின் அராசங்கம் உருவாக வழி சமைத்து அவர்கள் ஊடாக எனக்கு எதிராக குற்றப்பிரேரணையை கொண்டுவரவும் சதி செய்தனர்.
மஹிந்த ராஜபக்ஷ சுதந்திரக் கட்சியின் தலைவரான பின்னர் திட்டமிட்டு கட்சியை அழித்து தற்போது புதிய கட்சியை ஆரம்பித்துள்ளனர். ஆனால் அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவில்லை. அதற்கு எதிராக அறிவிப்பு ஒன்றைக்கூட விடுக்கவில்லை. எனவே எனது செயற்பாட்டின் ஊடாக கட்சிக்கு எவ்விதமான சேதமும் ஏற்படாது என்று நம்புகின்றேன்.