யாழ்ப்பாணத்தில் பல வாள்வெட்டு வன்முறைகள், கொள்ளை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களில் கடந்த 2 வருடங்களாக தேடப்பட்டு வந்த “ஆவா” என காவற்துறையினரால் விழிக்கப்படும் இளைஞர் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் இன்று சரணடைந்தார். சந்தேகநபரை வரும் 18ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆவா குழுவின் முக்கியஸ்தர் எனவும் “ஆவா” எனவும் காவற்துறையினரால் குறிப்பிடப்படும் இணுவிலைச் சேர்ந்த குமரேசரத்தினம் வினோதன் என்ற இளைஞனே இவ்வாறு இன்று மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் தனது சட்டத்தரணி ஊடாக சரணடைந்தார்.
அச்சுவேலி காவற்துறையினரால் மல்லாகம் நீதிமன்றில் முன்வைக்கப்பட்ட வன்முறை சம்பவம் ஒன்றின் வழக்கில் சந்தேகநபராக அவர் இன்று சரணடைந்தார். சந்தேகநபரை வரும் 18ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க மல்லாகம் நீதிவான் உத்தரவிட்டார்.
யாழ்ப்பாணம், மானிப்பாய், சுன்னாகம் உள்பட யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள பல காவல் நிலையங்களால் வினோதன் கடந்த 2 வருடங்களாக தேடப்பட்டு வந்துள்ளார்.
வாள்வெட்டு வன்முறை, ஆள்களுக்கு காயம் விளைவித்தமை, கொள்ளை, கூரிய ஆயுதங்களை உடமையில் வைத்திருந்தமை, வீடுகள் மற்றும் வியாபார நிலையங்களுக்கு சேதம் விளைவித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் சந்தேகநபருக்கு எதிராக நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன என்று காவற்துறையினர் தெரிவித்தனர்.
இந்த நிலையில் அவர் இன்று மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் சரணடைந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்