கோதுமை மாவு கோதுமை மாவு
நீயின்றி அமையாது எம்முலகு
பாணாய் வந்தாய் பணிசாக வந்தாய்
சைக்கிளில் பெட்டிகட்டி
கல்லொழுங்கை கடகடக்க
மணியடித்து விரையும் உன்வரவு
காலைத் துயிலெழுப்பும்
காலமாக
உந்துருளியில் விரைந்து வந்தாய்
சூடாறுமுன் சுவையாகத் தரவென்று
கோதுமை மாவு கோதுமை மாவு
நீயின்றி அமையாது எம்முலகு
விட்டோமோ பாரென்று
புட்டாகி வந்தாய்
இடியப்பம் தோசையாக
உள்ளுர் அரிசிமா உணவெல்லாம்
நீயாகி நின்றாய்
உழுந்துமா பயிற்றம்மா எல்லா
மாவுக்கும் மாற்றாகி வந்தாய்
கோதுமை மாவு கோதுமை மாவு
நீயின்றி அமையாது எம்முலகு
புதுப்பெருந் தெருவெல்லாம்
பளிச்சென்றும் கிளைவிட்டும்
இத்துணை வகைகளா?
இத்துணை சுவைகளா?
வியக்கும் வகை வந்துள்ளாய்
வாண்மை பெற்று உயர்ந்துள்ளாய்
அமெரிக்கன் மாவு என்றும் பெயர்கொண்டாய்
பட்டினியால் பலர் மடிந்தாலும்
கிடையாது போகுமே அன்றிக்
குறையாது உன்கேள்வி காண்பாய்.
கோதுமை மாவு கோதுமை மாவு
நீயின்றி அமையாது எம்முலகு
ஊர்தோறும் நடமாடும் வானிலும்
நாய்போகா நடைபாதை வழியெலாம்
நிதம் தேடியே நீ வருவாய்
முச்சக்கர வண்டியில்
இரைச்சல் பாட்டை உரக்கப் போட்டு
ஊரை எழுப்பி உன்னைத் திணிப்பாய்
கோதுமை மாவு கோதுமை மாவு
நீயின்றி அமையாது எம்முலகு
‘பாடை மாவு’வாய் வந்தாய் எமக்குள்
என்னென்று சொல்ல ஏதென்று சொல்ல
கோதுமை மாவு கோதுமை மாவு
நீயின்றி அமையாது எம்முலகு
பாடையொட்ட வந்த மாவு
நீ பெற்ற பவிசும் மவுசும்
மிகப் பெரிது காண்பாயப்பா
போகுமுயிர் பாதிக்கும் மேல்
போவதெல்லாம் போரினால் மட்டுமல்ல
உன்னாலென்பதை நீ அறிவாயோ?!
உன்னாலென்பதை நாம் அறிவோமோ?!
பாடை மாவு பாடை மாவு – நீ
‘ரொட்டி’ என்னும் ‘பறாட்டா’ ஆனாய்
உன்னைக் கொத்திப் புரட்ட
கொத்து ரொட்டி ஆகிவந்தாய்
எந்தெந்த நேரமும்
எங்கெங்கு போகினும்
அங்கிங்கெனாதபடி நீயே நிறைந்திருப்பாய்
நின்று கொல்வாய் நீதான் எம்மை
பாடை மாவு பாடை மாவு
கொட்டில் கடை தொட்டு
கோடி கொட்டும் கொட்டலெல்லாம்
உன்னையே நம்பித் திறப்பு
பாடை மாவு பாடை மாவு
நீயின்றி அமையாது எம்முலகு
பண்டாவும் சில்வாவும்
காட்டு விறகு போட்டு
கொளுத்திச் சுட்டுப் போட்ட
போறணைப் பாண் சுவை மறவார்
மின்சாரப் பாண் மென்றுண்போர்
வறுத்த பாண் கதையோ அதுவேறு
யார் மறப்பார் மொறமொறப்பை
தேனீரும் பாணும் தேங்காய்ச் சம்பலும்
போதும் போதும் அதுபோதும்
புல்லரிப்பார் பலர் உள்ளார் இன்னும்
கோதுமை மாவு கோதுமை மாவு
‘பாடை மாவு’ ஆகவந்தாய்
பாடையிலேற்றும் மாவாகிப் பரந்து படர்ந்தாய்
எங்கெங்கு காணினுமுன் இன்சுவை நஞ்சினில்
நாவிழந்து நலிந்தது நம்முலகு
போன கதை பழைய கதை
யாரிந்த பண்டாவும் சில்வாவும்?!
எப்போ போட்டாரவர் பாண்?!
எங்கே போட்டாரவர் பாண்?!
பன்சாலை அரசமரம் இன்னும் அரசியலில்
நெருப்பெரிக்கும் எண்ணெய் காண்பாய்
கோவிலும் தாலமும் கொடும்பயம் தருவதப்பா
கும்பிடும் தெய்வமும் நிழலாற்றும் விருட்சமும்
அச்சத்தின் அச்சமாய் ஆச்சுதப்பா
போர்நாளில் காவலுக்கிருந்தவர்
நாட்டிய சிறுகிளையும் கும்பிட்ட சிறுசிலையும்
நாற்பது வருசத்துள் தொல்லியலுள் போனதப்பா
கோதுமை மாவு கோதுமை மாவு
‘பாடை மாவு’ ஆக வந்து
பாணாக பணிசாக வேக
பண்டாவும் சில்வாவும்
சுட்ட கதை மறந்து போக
பன்சாலை பாண்சாலை அரசியலில்
போனாரப்பா துரத்தப் போனாரப்பா
போனாலும் போகாது நின்றது நீதான்
மாறிய காலத்தில் மாறாத கோலத்தில்
வெதுப்பியாகி வெந்து வந்தாய்
வெதுப்பக வளாகந்தன்னில்
கோதுமை மாவு கோதுமை மாவு
நீயின்றி அமையாது எவ்வுலகும்!
பாடை மாவு பாடை மாவு
வறுமையை விதைத்தவர் வாழக் கையில்
கூப்பனைத் தந்தனர்
வாரா வாரம்; வீட்டினுள் வந்தாய் – நாட்டு
விதைப்புகள் அற்று விளைச்சல்கள் அகல
வறுமையிலும் விட்டகலா விளைச்சல்கள் போக்க
மூண்டு கிடந்த முரண்பாடுகளில் மூட்டினர் தீ
போராகிப் பெருக்கெடுத்து நீறாகிப்போக எல்லாம்
நிவாரணம் வந்தது
நிலைத்த நிற்கதி எமக்கேயாக
கோதுமை மாவு கோதுமை மாவு – எம்முள்
பாடை மாவு ஆக வந்தாய்
கோதுமை மாவு கோதுமை மாவு
பாடை மாவு மறந்து போச்சு
பண்டா சில்வாவும் போயாகிப் போச்சு
வெதுப்பியும் வெதுப்பகமும் ‘வேக்கறி’யாய் ஆச்சு
அமெரிக்கன் மாவு உணவென்பதாச்சு
பாடை மாவு ஆக வந்த
கோதுமை மாவு கோதுமை மாவு
நீயின்றி அமையாதோ எம்முலகு?!
சி.ஜெயசங்கர்