கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கள் அனைத்து வயதுடைய பெண்களும் செல்வதற்கு அனுமதி அளித்ததை எதிர்த்து தொடரப்பட்ட சீராய்வு வழக்கு 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்படும் என இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள், குறிப்பிட்ட வயதுடைய பெண்கள் நுழைவதற்கு 1991-ல் கேரள உயர்நீதிமன்றம் தடை விதித்தது. இதனை 2018 செப்டம்பரில் ரத்து செய்த உச்சநீதிமன்றம் அனைத்து வயது பெண்களும், பாலின வேறுபாடுகளின்றி சபரிமலைக்கு செல்ல அனுமதிக்கப்பட வேண்டும் என தீர்ப்பளித்தது.
உடல் ரீதியான வித்தியாசங்களின் அடிப்படையில் பெண்கள் மீது விதிக்கப்படும் தடை, அரசியல் சட்டத்திற்கு முரணானது. இந்த தடை அரசியல் சட்டத்தில், சம உரிமைகளை அளிக்கும் சட்டப்பிரிவு 14 மற்றும் மதத்தை கடைபிடிக்கும் உரிமையை அளிக்கும் சட்டப்பிரிவு 25 ஆகியவற்றிற்கு முரண்பாடானது என தெரிவித்து இஅவ்வாறு தீர்ப்பளித்திருந்தது.
இந்த தீர்ப்புக்கெதிராக போராட்டங்கள் வெடித்த நிலையில் பல பெண் செயல்பாட்டாளர்கள் சபரிமலை கோவிலுக்குள் செல்ல முயன்றனர். அத்துடன் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு, இன்று காலை தீர்ப்பு வழங்கியது. 3:2 என்ற பெரும்பான்மையில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
பெண்கள் செல்ல கட்டுப்பாடு விதிக்கப்படுவது சபரிமலையில் மட்டுமல்ல வேறு கோவில்களிலும், மசூதிகளிலும் உள்ளது. அனைத்து மதத்தினரும் அவரவர் மத நம்பிக்கையை கடைப்பிடிக்க உரிமை உள்ளது. மத வழிபாடு, நம்பிக்கை என்ற பெயரில் பாகுபாடு கூடாது. மதம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஆய்வு செய்ய வேண்டி உள்ளது. எனவே, இந்த வழக்கை 7 நீதிபதிகள் கொண்ட வேறு அமர்வுக்கு பரிந்துரை செய்வதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது #சபரிமலை #சீராய்வுவழக்கு #ஐயப்பன்கோவில்