தேர்தலுக்கு வாக்களிக்க செல்பவர்களை தடுப்பது குற்றமாகும் எனவும், அது தொடர்பில் உடனடியாக அறிய தருமாறும் யாழ்.மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில், வாக்களிப்பிற்கு மக்களை தூண்டும் விதமாகவும், அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக யாழ் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளுக்கும் ஒலிபெருக்கிகள் மூலம் அறிவுறுத்தல்களை வழங்கி வருகின்றோம். அந்த தேர்தலில் பெருமளவான மக்கள் வாக்களிக்க வேண்டும் எனும் எண்ணத்தில்
அனைத்து வாக்காளர்களும் தமது வாக்குறிமையினை பாதுகாப்பாகவும் சுயாதீனமாகவும் பயன்படுத்த வேண்டும். அதற்கான சகல செற்பாடுகளை செய்துள்ளோம் என தெரிவித்தார்.
அவ்வேளை ஊடகவியலாளர் ஒருவர் , ஒரு அரசியல் கட்சியினர் தேர்தலை புறக்கணிக்க கோரி வருகின்றனர் அது தொடர்பில் முறைப்பாடுகள் எதுவும் கிடைக்க பெற்றதா என கேட்ட போது ,
அது தொடர்பிலான முறைப்பாடுகள் கிடைக்க பெறவில்லை. வாக்களிப்பது வாக்களர்களின் உரிமை. அதனை தடுக்கும் உரிமை எவருக்கும் இல்லை. வாக்காளர்களை வாக்களிக்க விடாது எவரேனும் தடுத்தால் அது குற்றசெயல் ஆகும். அது தொடர்பில் உடனடியாக முறைப்பாடு செய்யுங்கள் அதற்கு நடவடிக்கை எடுப்போம் என தெரிவித்தார்.