சுன்னாகம் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வைத்து தேர்தல் விதிமுறைகளை மீறி ஜனாதிபதி வேட்பாளர்கள் இருவருக்கான பரப்புரை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் அதனை விசாரணை செய்யச் சென்ற தேர்தல் அதிகாரியின் கடமைக்கு இடையூறு விளைவிக்கப்பட்டதுடன், அவருக்கு அச்சுறுத்தலும் விடுக்கப்பட்டது.
இந்தத் தேர்தல் விதி மீறலுக்கு காவல்துறையினர் ஒத்துழைப்பு வழங்கியதுடன், செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த செய்தியாளரின் அலைபேசியைப் பறித்தெடுத்து அதிலிருந்த சம்பவம் தொடர்பான ஒளிப்படங்களையும் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் அழித்துள்ளார்.
இதுதொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பதற்காக யாழ்ப்பாணம் தேர்தல்கள் செயலகத்துக்குட்பட்ட தேர்தல் முறைப்பாடுகள் முகாமைத்துவ நிலைய அதிகாரி சம்பவ இடத்துக்கு விரைந்தார். அங்கு செய்தியாளர் ஒருவரும் சென்றிருந்தார்.அங்கு 30 பேருக்கு மேற்பட்ட இளையோர்கள் அங்கு நின்றனர். தேர்தல் சட்டத்தின் பிரகாரம் பரப்புரைகள் நிறைவடைந்து வாக்களிப்புக்கான பணிகள் இடம்பெறும் காலத்தில் ஆகக் கூடியது 7 பேருக்கு மேல் ஓர் இடத்தில் கூட முடியாது.