இதேவேளை இந்த நடவடிக்கை அரசியல் நோக்கம் கொண்டது என தமிழ் தேசிய
முன்னைய மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் காலத்தில் இடம்பெற்ற முக்கிய சம்பவங்கள் குறித்து விசாரணைளை மேற்கொண்டுவந்த சிஐடியின் இயக்குநர் ஸானி அபயசேகர புதிய அரசாங்கத்தின் கீழ் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளமை அரசியல் உள்நோக்கம் கொண்ட நடவடிக்கை என அரசியல் தலைவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
ஐக்கியதேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித்பெரேரா ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச உடனடியாக தலையிட்டு இந்த இடமாற்றத்தை தடுத்து நிறுத்தவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புதிய ஜனாதிபதி பதவியேற்றவுடன் இந்த நடவடிக்கை இடம்பெற்றுள்ளமை ஜனாதிபதியின் கௌரவத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும்எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மிகச்சிறப்பாக செயற்பட்டபோதிலும் சிஐடியின் இயக்குநர் ஏன் இடமாற்றம்செய்யப்பட்டார் என்பதை அதிகாரிகள் தெளிவுபடுத்தவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதேவேளை இந்த நடவடிக்கை அரசியல் நோக்கம் கொண்டது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இது அரசியல் நோக்கம் கொண்ட இடமாற்றம், அவர் மிக முக்கியமான மனித உரிமை மீறல்கள் குறித்த விசாரணைகளிற்கு தலைமைவகித்த வேளை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
பதில் காவல்துறை-மா-அதிபர் ஏன் இவ்வாறான அழுத்தங்களிற்கு அடிபணிகின்றார் என கேள்வி எழுப்பியுள்ள சுமந்திரன் சுயாதீன காவல்துறை ஆணைக்குழுவிற்கு என்ன நடந்தது? முக்கிய எதிர்கட்சியான ஐக்கியதேசிய கட்சி என்ன செய்கின்றது எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னைய மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் காலத்தில் ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட காணாமல்போகச்செய்யப்பட்டமை, லசந்த விக்கிரமதுங்க படுகொலை 11 மாணவர்கள் காணாமல்போகச்செய்யப்பட்டமை உட்பட முக்கிய சம்பவங்கள் குறித்து விசாரணைகளை மேற்கொண்டிருந்த அதிகாரியே இடமாற்றம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. மிக முக்கிய சம்பவங்கள் தொடர்பில் புலனாய்வு பிரிவை சேர்ந்தவர்களை கைதுசெய்தமைக்காக இவர் விமர்சனத்தை எதிர்கொண்டிருந்தார். குருநாகல் மருத்துவர் சாபி சிகாப்தீன் குற்றமிழைக்கவில்லை என்ற உறுதி செய்ததும் இந்த அதிகாரியே என்பது குறிப்பிடத்தக்ககது.