தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சரும் தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவருமான அதாவுல்லா மலையக மக்களை குறிப்பிட்டு அநாகரிகமான வார்த்தை பிரயோகித்தமையை வண்மையாக கண்டிப்பதாக தமிழீழ விடுதலை இயக்கம் தெரிவித்துள்ளது.
இவ்விடையம் தொடர்பாக தமிழீழ விடுதலை இயக்கம் டெலோ கட்சியின் தலைவரும்,வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் இன்று (26.11.19) ஊடக அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
-குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,,,,
தொடர்ச்சியான ஒடுக்கு முறைக்கு உள்ளாகி வரும் மலையக மக்களை இவ் வகையான வசைச் சொற்கள் மேலும் மேலும் துன்பத்துக்கு உள்ளாக்கியுள்ளது. குறித்த் நிகழ்ச்சியில் அதாவுல்லா அவர்கள் மிக இயல்பாக அம் மக்களை நோக்கி குறித்த வார்த்தைப் பிரயோகத்தினை மேற்கொண்டமையானது எங்களை ஆழ்ந்த கவலைக்கு உள்ளாக்குகின்றது.
சிறுபான்மை இன மக்களை பிரதி நிதித்துவப்படுத்தும் சமூகப் பொறுப்பு மிக்க ஓர் முன்னாள் அமைச்சரின் இச் செய்கையானது யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாத தொன்றாகும்.
பெரும் துயரங்களின் மத்தியில் உழைத்து எமது நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருப்பது எம் மலையக மக்களே. சிறுபான்மை மக்கள் தமது உரிமைகளுக்காக இணைந்து நிற்கின்ற இக்காலத்திலே இவர்களைப் போன்று பிரிவினை வாதம் பேசுபவர்கள் தொடர்பில் மக்கள் மிகக் கவனத்துடன் இருக்க வேண்டும்.
மலையக மக்களை இழிவு படுத்தும் வகையில் பேசியமைக்காக அதாவுல்லாவுக்கு கடுமையான கண்டங்களை தெரிவிப்பதுடன் அவர் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்.என குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.