யாழ்.பல்கலைகழகத்தில் எந்தவிதமான நிகழ்வுகளையும் நடாத்த கூடாது என மாணவர்களுக்கு பல்கலை நிர்வாகம் கண்டிப்பான உத்தரவை வழங்கியுள்ளது.
யாழ்.பல்கலை வளாகத்தினுள் இன்றைய தினம் 26ஆம் திகதி மற்றும் நாளைய தினம் 27ஆம் திகதி ஆகிய தினங்களில் எந்த நிகழ்வுகளையும் நடாத்த கூடாது என இன்றைய தினம் மாணவ ஒன்றிய தலைவர்களுக்கு நிர்வாகம் கண்டிப்பான உத்தரவை வழங்கியுள்ளது.
பல்கலை வளாகத்தினுள் இன்றைய தினம் விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் 65ஆவது பிறந்த நாள் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. நாளைய தினம் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அஞ்சலி நிகழ்வுகள் மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இந்த நிலையிலையே குறித்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
2015ஆம் ஆண்டுக்கு முன்னரான ஆட்சிக்கால பகுதியில் யாழ்.பல்கலை வளாகத்தில் மாவீரர் நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்ததுடன் , நிகழ்வுகளை ஒழுங்கமைத்த மாணவ தலைவர்களுக்கும் இராணுவத்தரப்பால் அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்ட வந்த சம்பவங்களும் , அவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவங்கள் , தாக்குதல்கள், மேற்கொள்ளப்பட்ட சம்பவங்கள் இடம்பெற்றிருந்தன.
அதற்கு பின்னரான ஆட்சி மாற்றத்தையடுத்து பல்கலை வளாகத்தினுள் அச்சுறுத்தல்கள் இன்றி மாவீரர் நாள் நிகழ்வுகள் நடைபெற்றன. இந் நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தின் காரணமாக இவ்வாறான ஒரு அறிவுறுத்தல் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.