171
முன்னாள் அமைச்சர் அதாவுல்லா அவர்கள் மலையக மக்களை கொச்சைப்படுத்தி பேசியிருப்து கண்டிக்கதக்கது என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெருவித்ததாவது
தனியார் தொலைக்காட்சி ஒன்றில் சமகால அரசியல் தொடர்பாக நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த முன்னாள் அமைச்சர் அதாவுல்லா அவர்கள் மலையக மக்களை இழிவு படுத்தும் வகையான சொல்லாடலை பயன்படுத்தியிருப்பது என்பது வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும்.
இலங்கை நாட்டினுடைய தேசிய வருமானத்தின் முதுகெலும்பாக திகழும் மலையக மக்களை இவ்வாறு இழிவுபடுத்துவதென்பது மலையக மக்களை மட்டுமன்றி ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் வேதனையையும் கவலையையும் அடையவைத்துள்ளது.
மலையக மக்கள் இந்த நாட்டின் பிரஜைகள் அவர்கள் இந்த நாட்டின் வளர்ச்சிக்காக பல ஆண்டுகளாக உழைத்தவர்கள் அவ்வாறனவர்களை கொச்சைப்படுத்துவதை தமிழ் சமூகம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது.
மேலும் மலையக தமிழ் மக்களை கொச்சைப்படுத்தி பேசியதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு இவ்வாறு கண்டனங்களை தெரிவிப்பதற்கு எந்தவித அருகதையும் கிடையாது ஏனெனில் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் கிளிநொச்சியில் வாழும் மலையக மக்களை மிக இழிவான வார்த்தை பிரயோகத்தின் மூலம் விழித்திருந்தார்.
இவ்விடயம் சமூகவலைத்தளங்களில் பரவலாக வந்திருந்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருக்கும் பங்காளி கட்சிகளும் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களும் கூட்டமைப்பின் குறிப்பிட்ட பாராளுமன்ற உறுப்பினருக்கு எதிராக எந்தவித கண்டனத்தையும் தெரிவிக்கவில்லை.
அன்று கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் மலையக மக்கள் தொடர்பில் கீழ்தரமான சொற்பிரயோகத்தை மேற்கொண்டமைக்கு கண்டனத்தை வெளியிட்டிருந்தால் இன்று அதாவுல்லா இவ்வாறு பேசியிருக்க சந்தர்பம் ஏற்பட்டிருக்காது.
தமிழ் மக்கள் மத்தியில் பிரிவினையை விதைக்கும் வகையிலான அரசியல் செயற்பாடுகளுக்கு கண்டனம் தெரிவிப்பதோடு முன்னாள் அமைச்சர் அதாவுல்லா அவர்கள் தமிழ் மக்களிடம் பகிரங்க மன்னிப்புக்கோரவேண்டும் என்று தெரிவித்தார் #அதாவுல்லா #சிவசக்திஆனந்தன் #மலையகமக்கள்
Spread the love