இந்தியன், புதுப்பேட்டை, என்.ஜி.கே எனப் பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்த பாலா சிங், தனது 67 வது வயதில் சென்னையில் இன்று அதிகாலை காலமானார். மூச்சுத்திணறல் காரணமாக சென்னையிலுள்ள தனியார் மருத்துவமைனியில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனளிக்காத நிலையில் அஇன்று அதிகாலை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
1952ஆம் ஆண்டு, கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள களியக்காவிளையில் பிறந்தவர் பாலா சிங். தேசிய நாடகப் பள்ளியில் நடிப்புக்கலை பயின்ற இவர், மேடை நாடகங்களின் மூலம் தன் பயணத்தைத் துவங்கினார். 1983ஆம் ஆண்டு வெளியான மலைமுகிலிலே தெய்வம் என்ற மலையாளப்படத்தில் அறிமுகமான இவர், நாசரின் அவதாரம் படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் நுழைந்தார்.
அதனைத் தொடர்ந்து இந்தியன், சிம்மராசி, ராசி, மறுமலர்ச்சி, இரணியன், கன்னத்தில் முத்தமிட்டால், புதுப்பேட்டை, விருமாண்டி எனப் பல வெற்றித் திரைப்படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே பெருமளவில் பிரபலமானார். மேலும் அவர் கடந்த ஆண்டில் வெளிவந்த தானா சேர்ந்த கூட்டம், சாமி 2, என்ஜிகே, மகாமுனி போன்ற பல படங்களில் துணை கதாபாத்திரத்திலும், வில்லனாகவும் நடித்துள்ளார்.
மிகைப்படுத்தாத நடிப்பு, சரியான உச்சரிப்பு, கதாபாத்திரத்திற்கேற்ற உடல்மொழி எனத் தனித்துவமான தன் நடிப்பால் 45 ஆண்டு காலத்திற்கும் மேல் சினிமாவில் இயங்கி வந்த இவர் மேடை நாடகம், சினிமா மட்டுமின்றி சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது #இந்தியன் #புதுப்பேட்டை, #பாலாசிங் #அவதாரம்