(க.கிஷாந்தன்)
கடந்த காலத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் இடம்பெற்ற விவாத நிகழ்ச்சி நான் பேசப்பட்ட விடயங்களை திரிபுப்படுத்தி சமூக வலைத்தளங்களில் வெளியிட்டிருந்தனர்.
இப்போது பல அமைச்சுக்கள் மாற்றம் பெற்றுள்ளது. கடந்த அமைச்சில் தொழில் செய்த பலருக்கு தற்போது தொழில் இல்லை. ஆகையால் அவர்கள் ஆர அமர்ந்து இதை அழகாக திரிபு செய்து வெளியிட்டுள்ளனர். இதனால் மலையக சமூகத்தினரிடத்தில் அண்மைக்காலமாக பல சர்ச்சைகள் எழுந்துள்ளது என ஊவா மாகாண முன்னாள் கல்வி அமைச்சர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் இளைஞரணி பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமானின் ஏற்பாட்டில் கொட்டகலை ஹில்கூல் விடுதியில் இளைஞர்களூடான நேரடி கலந்துரையாடல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதில் கலந்து கொண்ட செந்தில் தொண்டமான் தனியார் தொலைகாட்சியில் வழங்கிய செவ்வி தொடர்பாக ஏற்பட்டுள்ள சர்ச்சைகளுக்கு இளைஞர் யுவதிகளுக்கு விளக்கமளித்தார்.
இதன் போது செந்தில் தொண்டமான் இளைஞர் யுவதிகள் கேட்ட கேள்விகளுக்கும் பதில் வழங்கினார். பின் ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்களிக்கப்பட்டது. இதன் போது ஊவா மாகாண முன்னாள் கல்வி அமைச்சர் செந்தில் தொண்டமான் தெரிவித்ததாவது,
முன்னாள் கல்வி அமைச்சராக இருந்த நான் கல்வியை பற்றி தான் பேசமுடியும். கல்வியை பொருத்தவரையில் ஏனைய சமூதாயத்தை விட கூடுதலாக என்னுடைய மலையக சமூதாயம் அதிகளவாக முன்னேற்றமடைய வேண்டும் என்பதில் ஆசைப்படுவதில் தப்பு கிடையாது.
இன்று பட்டத்தாரிகளாக சென்றவர்களோடு, பட்டதாரிகளாக வேண்டும் என்ற கனவுகளுடன் வாழ்வோர் மலையகத்தில் ஏகப்பட்டோர் இருக்கின்றனர். அதேநேரத்தில் க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர்தரத்தில் அதிகமானோர் பெறுபேறு பெற்றுள்ளனர்.
அவர்கள் எல்லோரையும் கொண்டு சென்று பட்டத்தாரிகளாக்குவது எங்களுடைய கடமையாகும். அதற்கான முக்கியத்துவத்தை கொடுத்து முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம்.
தனியார் ஊடகம் ஒன்றில் வழங்கிய செவ்வியை திரிபுபடுத்தி சமூக ஊடகங்களில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அதேநேரத்தில் மலையக மக்களை நாங்கள் முட்டாள்கள் என்று சொன்ன மாதிரியும், மலையக மக்கள் படிப்பறிவு இல்லாதவர்கள் என்று சொன்ன மாதிரியும் திரித்து வெளியிட்டுள்ளனர்.
அதன் உண்மையான வீடியோவில் எந்த இடத்திலும் நான் இவ்வாறு சொன்னமாதிரி இல்லை. அதை இண்டர்நெட்டில் போனால் அந்த வீடியோவை பார்க்கலாம் எனவும் தெரிவித்தார்.
அதனால் வருகின்ற காலங்களில் இவர்கள் என்ன மாதிரி வீடியோக்களை செய்திருந்தாலும் எங்களுக்கு கவலையில்லை. மலையகத்திலிருந்து ஆயிரம் இளைஞர்களை பல்கலைக்கழகம் அனுப்புவதுதான் எங்களுடைய நோக்கமாக இருக்கிறது. அந்த நோக்கத்துக்கு ஆதரவாகவே செயற்பட்டு வருகின்றோம் என்பதை இவ்விடத்தில் பதிவு செய்கிறேன் என்றார். #தனியார்தொலைக்காட்சி #செந்தில்தொண்டமான் #இலங்கைதொழிலாளர்காங்கிரஸின்