நாரஹேன்பிட்டி பார்க் வீதியிலிருந்து இன்று காலை மீட்கப்பட்ட இளைஞரின் சடலம் அருகிலிருந்த மாடி வீடொன்றில் தங்கியிருந்த புபுது பெரேரா என அடையாளம் காணப்பட்டுள்ளார். இன்று காலை 6 மணியளவில் சடலமொன்று வடிகானுக்குள் இருப்பதை அவதானித்த வியாபாரி ஒருவர் காவல்துறையினருக்கு தகவல் வழங்கியமையை அடுத்து குறித்த சடலம் மீட்கப்பட்டிருந்தது.
சடலம் மீட்கப்பட்ட இடத்திலிருந்து 50 மீற்றக்கும் குறைவான தூரத்திலேயே குறித்த இளைஞர் தங்கியிருந்த மாடி வீடு அமைந்துள்ளது. சடலத்திற்கு அருகில் பணப்பை ஒன்றும், கையடக்க தொலைபேசி ஒன்றும் மீட்கப்பட்டதுடன் சடலத்தின் தலைக்கருகில் இரண்டு 100 ரூபா நோட்டுக்களும் வீழ்ந்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் சடலத்தின் தலைப்பகுதியில் காயம் காணப்பட்டதாகவும் இடுப்பு பகுதியிலும், கீறல் தடங்கள் காணப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த இளைஞர் நேற்றிரவு கோட்டை பகுதியில் நடைபெற்ற விருந்துபசாரத்தில் கலந்துவிட்டு நண்பருடன் வீடு திரும்பியமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
வாடகை வாகனமொன்றில் தாம் வந்ததாகவும் தான் வீட்டிற்கு அருகில் இறங்கியதன் பின்னர் அதே வாகனத்தில் புபுது பெரேரா வீட்டிற்கு புறப்பட்டுச் சென்றதாகவும் நண்பர் காவல்துறையினரிடம் வாக்குமூலமளித்துள்ளார்.
சிறிய ரக கார் ஒன்று அதிகாலை 3 மணியளவில் குறித்த இடத்திற்கு வந்து சற்று நேரத்தில் திரும்பிச்செல்லும் காட்சி சடலம் மீட்கப்பட்ட இடத்திற்கு அருகிலுள்ள பல்பொருள் அங்காடியொன்றின் பாதுகாப்பு கமராக்களில் பதிவாகியுள்ளது.
சடலமாக மீட்கப்பட்ட புபுது பெரேரா வர்த்தக பிரசார நிறுவனம் ஒன்றின் முகாமையாளராக செயற்பட்டு வந்தார் என்பதும் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. #நாரஹேன்பிட்டி #இளைஞர் #சடலம்