ரோயல் பார்க் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு முன்னாள் ஜனாதிபதியால் பொது மன்னிப்பு வழங்கப்பட்ட ஜூட் சிரமந்த ஜயமான்னவிற்கு வௌிநாடு செல்ல தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
ரோயல் பார்க் கொலை வழக்கில் பிரதிவாதியான இவருக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொது மன்னிப்பு வழங்க எடுத்த தீர்மானத்தை இரத்து செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று (29.11.19) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த மனு மூவரடங்கிய நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மரணத் தண்டனை வழங்கப்பட்டு சிறையில் இருக்கும் ஆயிரக்கணக்கானவர்களில் குறித்த நபரை மட்டும் தேர்ந்தெடுத்து முன்னாள் ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கியுள்ளமையானது அரசியலமைப்புக்கு எதிரானது என மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ள பிரதிவாதி தற்போதைய நிலையில் வௌிநாடு சென்றுள்ளதாக மனுதாரர் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, மனு விசாரணையை எதிர்வரும் மாதம் 09 ஆம் திகதி வரை ஒத்திவைத்த நீதிபதிகள் குழாம் பிரதிவாதியான ஜுட் சிரமந்த ஜயமான்னவிற்கு வௌிநாடு செல்ல தடை விதித்து இடைக்காலத் தடையுத்தரவு ஒன்றை வௌியிட்டுள்ளனர்.