யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் துணைவேந்தரைப் பரிந்துரை செய்வதற்கான தேர்தலை நடாத்துவதற்கான முன்னாயத்தப் பணிகளை மேற்கொள்வதற்காக மூவரடங்கிய மதிப்பீட்டு குழு ஒன்று நியமிக்கப்பட்டிருக்கிறது.
யாழ். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளவர்களின் தகுதி, தராதரங்களை மதிப்பிடுவதற்கும், தேர்தல் தினத்தை தீர்மானிப்பதற்குமான குழுவைத் தெரிவு செய்வதற்காக யாழ். பல்கலைக்கழக பேரவை இன்று கூடியது.
யாழ். பல்கலைக்கழக தகுதி வாய்ந்த அதிகாரி பேராசிரியர் க. கந்தசாமி தலைமையில் இடம்பெற்ற இன்றை விசேட பேரவைக் கூட்டத்தில் துணைவேந்தர் பதவிக்கான விண்ணப்பங்களை மதிப்பீடு செய்து தேர்தலை நடாத்துவதற்கு வசதியான திகதியை பேரவைக்கு அறிவிப்பதற்காக யாழ்ப்பாண பல்கலைக்கழக பௌதிகவியல் துறைப் பேராசிரியர். பு. ரவிராஜன், பேராதனைப் பல்கலைக்கழகத்தின் வாழ் நாள் பேராசிரியர் கலாநிதி சி. சிவலோகநாதன், மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் முன்னாள் பதிவாளர் ஜஃபர் சாதிக் ஆகிய மூன்று பேரவை உறுப்பினர்கள் அடங்கிய குழு நியமிக்கப்பட்டிருக்கிறது.
இன்றைய பேரவைக் கூட்டத்தில் நியமிக்கப்பட்ட குழுவின் மதிப்பீட்டு அறிக்கை கிடைத்ததும், குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் தேர்தல் திகதி பேரவையினால் தீர்மானிக்கப்படும். தேர்தல் தினத்தன்று தேர்தலைக் கண்காணிப்பதற்காக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் நியமிக்கப்படும் ஒருவர் பார்வையாளராகக் கலந்து கொள்வார்.
அடுத்து வரும் மூன்று மாத காலப்பகுதிக்குள் – இயலுமான அளவு விரைவாக துணைவேந்தர் பதவிக்கான தேர்தலை நடாத்துவதென இன்றைய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் யாழ்ப்பாண பல்கலைக்கழக பேரவைக்கு புதிதாக நியமனம் செய்யப்பட்டு, தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிவுறுத்தலுக்கமைய இதுவரை காலமும் பேரவைக் கூட்டங்களில் கலந்து கொள்ளாத புதிய உறுப்பினர் கு. சிவராம் இன்றைய கூட்டத்திற்கு வருகை தந்திருந்தார்.