213
யாழில் நன்னீர் குளம் ஒன்றினுள் மருத்துவ கழிவுகள் வீசப்பட்டு உள்ள நிலையில் அது தொடர்பில் உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரியுள்ளனர். யாழ்.பிறவுண் வீதியில் உள்ள நரிக்குண்டு குளத்தினுள்லையே மருத்துவ கழிவுகள் வீசப்பட்டு உள்ளன.
யாழில் தற்போது ஏற்பட்டுள்ள டெங்கு தாக்கம் காரணமாக டெங்கு நுளம்பு ஒழிப்பு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் குளத்தை அண்டியுள்ள பகுதியை சேர்ந்தவர்கள், தன்னார்வாளர்கள் , இளைஞர்கள் ஆகியோர் இணைந்து நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை குளத்தினை சுற்றி வீசப்பட்ட கழிவு பொருட்கள் , சுற்றியுள்ள பற்றைகள் என்பவற்றை அப்புறப்படுத்தினார்கள்.
அதன் போது மருத்துவ கழிவுகள் அடங்கிய பைகள் அவ்விடத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளன. அதனுள் பாவித்த ஊசிகள் (சிரிஞ்) மருந்து போத்தல்கள் என்பன காணப்பட்டுள்ளன. அவை அருகில் உள்ள தனியார் மருத்துவ மனை கழிவுகளாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
குறித்த நன்னீர் குளத்தை அண்டிய பகுதிகளில் மருத்துவ கழிவுகள் , பாவித்த கழிவு பொருட்கள் உள்ளிட்ட கழிவு பொருட்கள் என்பவற்றை வீசி வருவதனால் குளத்தின் நீர் மாசடைகின்றது. அதனால் நிலத்தடி நீர் மாசடைந்து அருகில் உள்ள குடியிருப்பாளர்களின் வீட்டு கிணற்று நீரும் மாசடையும் ஆபத்துள்ளது.
குறித்த பகுதியில் குப்பைகளை , கழிவு பொருட்களை வீச வேண்டாம் என அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வந்த நிலையிலும் அதனையும் மீறி கழிவு பொருட்கள் வீசப்படுவதால் தற்போது அப்பகுதியில் மறை காணி (CCTV) பொருத்தப்பட்டு உள்ளது.
அதனூடாக கழிவுகளை வீசுபவர்களை அடையாளம் கண்டுள்ள போதிலும் அதிகாரிகள் உரிய சட்ட நடவடிக்கைகள் எடுப்பதில் அசமந்தமாக செயற்படுவதாக குற்றம் சுமத்தப்படுகின்றது. அதிகாரிகள் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அயலவர்கள் கோரியுள்ளனர்.
அத்துடன் தற்போது மழை காலமாக உள்ளமையால் அப்பகுதியில் வீசப்படும் கழிவு பொருட்களில் இருந்து துர்நாற்றம் வீசுவதாகவும் தாம் கடுமையான சுகாதார பிரச்சனைகளுக்கு முகம் கொடுப்பதாகவும் அப்பகுதியினர் தெரிவித்தனர். #யாழில் #நன்னீர்குளம் #மருத்துவகழிவுகள் #டெங்கு
Spread the love