பிரான்சில் அரசின் ஓய்வூதிய திட்ட சீர்திருத்தத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஒரே நாளில் 8 லட்சம் ஊழியர்கள் வீதிகளில் இறங்கி போராடியதாக அந்நாட்டு உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. பிரான்சில் அரசின் ஓய்வூதிய சீர்திருத்த சட்டத்திற்குள்; பல்வேறு புதிய விதிமுறைகளை கொண்டுவரப்பட்டதனால் அதற்கு எதிராக போராட்டங்கள் வலுத்து வருகின்றன. ஓய்வூதிய வயதெல்லை 62 இல் இருந்து 64 ஆக உயர்த்தப்பட்டுள்ளதனால் ஊழியர்களிடையே பெரும் நம்பிக்கையின்மை எழுந்துள்ளது.
அத்துடன் சேவைக்காலத்தை பொறுத்து ஓய்வூதியத்தின் தொகை மாறுபடும் என்பதுடன் ஓய்வூதியத்தை 64 வயதுக்கு முன்னதாக கோரினால் ஓவ்வூதிய தொகை வேறுபடும் என பல புதிய கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளன.
இதை எதிர்த்து முதலில் சில தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள், காவல்துறையினர் ;, விமானநிலைய ஊழியர்கள் என அனைவரும் வீதிகளில் இறங்கி போராட தொடங்கினர்.
இதனால் பிரான்ஸ் நாடு ஸ்தம்பித்தது. நாட்டின் முக்கிய நகரங்களில் போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டது. தலைநகர் பாரிசில் உள்ள முக்கிய சுற்றுலாத்தலமான ‘ஈபில் டவர்’ உள்பட அனைத்து சுற்றுலாத்தலங்களும் மூடப்பட்டன. இதையடுத்து போராட்டக்காரர்கள் வன்முறைச் சம்வங்களில் ஈடுபட்டதால் அவர்கள் மீது காவல்துறையினர் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசி கலைக்க முயற்சி செய்துள்ளனர்.
முக்கிய நகரங்களில் இருந்து போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த காவல்துறையினர் முயற்சித்து வருவதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவுவதுடன் அப்பகுதிகளில் போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது #பிரான்ஸ் #ஓய்வூதிய #எதிர்ப்பு #போராட்டம்