வட்டுக்கோட்டை பிக்னல் மைதானத்தில் இளம் குடும்பத்தலைவர் ஒருவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள 6 எதிரிகளுக்கு எதிரான குற்றப்பத்திரிகை மீது விளக்கம் நடத்தாமலே தள்ளுபடி செய்யவேண்டும் என்ற எதிரிகள் தரப்பு விண்ணப்பத்தை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் நிராகரித்து கட்டளையிட்டது.
அத்துடன், எதிரிகள் தரப்புக்கு வழங்கவேண்டிய ஆவணங்களை விரைவாக வழங்கி விளக்கத்தை காலதாமதமின்றி முடிக்குமாறு வழக்குத் தொடுனரான அரச சட்டவாதிக்கு மேல் நீதிமன்றம் அறிவுறுத்தியது.
வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்கும், யாழ்ப்பாணம் சென்.பற்றிக்ஸ் கல்லூரிக்கும் இடையில் நடந்த ராஜன் கதிர்காமர் வெற்றிக்கிண்ணத்துக்கான 50 ஓவர்கள் துடுப்பாட்ட போட்டி 2014ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15ஆம் திகதி வட்டுக்கோட்டை பிக்னல் மைதானத்தில் இடம்பெற்றது.
இந்தப் போட்டில் இருதரப்பினருக்கு இடையே முறுகல் ஏற்பட்டு அது கைகலப்பாக மாறியது. கைகலப்பில் யாழ்ப்பாணம் பிரதான வீதியைச் சேர்ந்தவரும் சென்.பற்றிக்ஸ் கல்லூரியின் பழைய மாணவனுமான ஜெயரட்ணம் டினோசன் அமலன் (வயது 24) என்னும் ஒரு பிள்ளையின் தந்தை உயிரிழந்தார்.
சம்பவத்தையடுத்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் 9 பேர் வரை சரணடைந்தனர்.
மல்லாகம் நீதிமன்றில் சுருக்கமுறையற்ற விசாரணை இடம்பெற்றது. அதனையடுத்து 6 பேருக்கு எதிராக கொலைக் குற்றச்சாட்டின் கீழான குற்றப்பத்திரிகை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் சட்ட மா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் முன்னிலையில் நடைபெற்று வருகிறது.
பொலிஸாரின் பெரும் குற்றத் தகவல் புத்தகங்களில் இடைச்செருகல்கள் இடம்பெற்றுள்ளதாக அரச இரசாயன பகுப்பாய்வுத் திணைக்களத்தின் அறிக்கையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பொலிஸாரின் ஆரம்ப விசாரணைகள் – புலனாய்வு விசாரணைகளில் திரிபுபடுத்தல்கள் உள்ளன. அதனால் இந்த வழக்கை விளக்கத்துக்கு எடுத்து நடத்துவதனால் நீதிக்குப் பங்கம் ஏற்படும் என்பதுடன் எந்தப் பிரயோசனமும் ஏற்படாது.
எனவே வழக்கை விளக்கத்துக்கு எடுக்காமல் எதிரிகளை விடுவித்து விடுதலை செய்யவேண்டும்”என்று குறிப்பிட்டு நீண்ட சமர்ப்பணத்தை முதலாவது எதிரி சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் கடந்த தவணையின் போது முன்வைத்தார்.
எனினும் எதிரி தரப்புச் சட்டத்தரணியின் விண்ணப்பத்துக்கு ஆட்சேபனை தெரிவித்த அரச சட்டவாதி மாதினி விக்னேஸ்வரன், விளக்கத்தை நடத்த மன்று கட்டளையிடவேண்டும் என்று விண்ணப்பம் செய்திருந்தார்.
இரு தரப்பு விண்ணப்பங்களையும் ஆராய்ந்து விளக்கத்தை இன்று செவ்வாய்க்கிழமை கட்டளை வழங்குவமாக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் தவணையிட்டிருந்தது.
அதனடிப்படையில் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் இன்று கட்டளையை வழங்கினார்.
வழக்குத் தொடுனர் சார்பில் அரச சட்டவாதி மாதினி விக்னேஸ்வரன் மன்றில் முன்னிலையானார். முதலாவது எதிரிக்காக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் சார்பில் சட்டத்தரணி கேசவன் சயந்தன், இரண்டாவது எதிரி சார்பில் நளின் நான்காவது எதிரி சார்பில் மூத்த சட்டத்தரணி வி.திருக்குமரன் முன்னிலையானார்கள்.
எதிரிகள் ஆறு பேரும் மன்றில் முன்னிலையானார்கள்.
“இந்த வழக்கைப் பொறுத்தவரையில், எதிரிகள் தரப்பில் சொல்லப்பட்ட மாற்றங்கள், உட்புகுதல்கள் என்பன தொடர்பில் மன்றின் முன் எதுவித சாட்சியங்களும் முன்வைக்கப்படாத நிலையில் அவை தொடர்பில் எந்த ஒரு நிலைப்பாட்டையும் வெளிப்படுத்துவதைத் தவிர்க்கின்றது.
முதலாவது எதிரியின் சாப்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணியால் சொல்லப்பட்டதற்கு அமைய எதிரிகளுக்கு உரித்துடைய ஆவணங்கள் வழங்கப்படாதிருப்பின் அவற்றை அரச சட்டவாதி உடனடியாக வழங்கவேண்டும் என மன்று ஆணையிடுகின்றது.
அத்துடன், எதிரிகளின் தரப்பினரால் முன்வைக்கப்படும் நிலைப்பாடுகள் காரணமாக இந்த வழக்கில் தாமதம் ஏற்படுவது சுட்டிக்காட்டப்படுகின்றது. சுமார் 10 மாதங்கள் இடம்பெற்ற நடவடிக்கைகள் அனைத்தும் எதுவித அடிப்படைகளுமின்றி ஓடுகின்ற நீரில் கரைக்கப்பட்ட வாசனைப் பொருள்கள் போன்று அமைவது வருத்தத்துக்குரியது.
அதன்பின்னர் மேன்முறையீட்டு நீதிமன்ற நடவடிக்கைகள் காரணமாக சுமார் 2 ஆண்டுகள் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் எதிரிகள் மீதான குற்றச்சாட்டுக்களை உரிய வகையில் முகம் கொடுக்கவேண்டும் என்றும் தேவையற்ற தடங்கள்களை ஏற்படுத்தாது, அவர்களுக்கு எதிரான வழக்கினை விரைவாக நடவடிக்கைக்குட்படுத்த ஒத்துழைக்க வேண்டும் என்றும் மன்று கோருகின்றது.
6 எதிரிகள் சார்பிலும் அவர்களை இந்த வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும் அல்லது விடுதலை செய்ய வேண்டும் என்று செய்யப்பட்ட விண்ப்பமானது தற்போதைக்கு நிராகரிக்கப்படுகின்றது. எதிரிகளுற்று எதிரான விளக்கத்தை நடத்த மன்று தீர்மானிக்கின்றது” என்று மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் கட்டளையில் கோடிட்டுக்காட்டினார்.
இந்த நிலையில் வழக்கு வரும் 17ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.