ரஸ்யா அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு எந்த பெரிய விளையாட்டுத் தொடரிலும் பங்கேற்பதற்கு உலக ஊக்கமருந்து தடுப்பு அமைப்பு தடை விதித்துள்ளது . இந்த தடையால் டோக்யோவில் நடைபெற உள்ள 2020 ஒலிம்பிக் போட்டிகள், அமெரிக்காவில் நடைபெற இருக்கும் 2021 உலக சம்பியன்சிப் போட்டிகள் மற்றும் 2022இல் நடைபெற உள்ள கால்பந்து உலகக்கிண்ணத் தொடர் ஆகியவற்றில் ரஸ்யா பங்கேற்க முடியாது.
மொஸ்கோ ஆராய்ச்சி மையத்தின் பல பதிவுகளை ரஸ்ய அதிகாரிகள் சிதைத்து விட்டதாகவும், அவற்றினை மாற்றி அமைத்ததே உலக ஊக்கமருந்து தடுப்பு அமைப்பு இந்த முடிவை எடுக்க காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2015ஆம் ஆண்டு உலக ஊக்கமருந்து தடுப்பு அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், ரஸ்ய தடகள வீரர்கள் மிகப் பெரிய அளவில் ஊக்கமருந்து பயன்படுத்தி இருப்பது பற்றி தெரிவித்திருந்தது. அதைத் தொடர்ந்து ரஸ்ய தடகள வீரர்கள் தொடர்பான ஊக்கமருந்து சர்ச்சைகள் அதிகரித்திருந்த நிலையில் கடந்த இரண்டு ஒலிம்பிக் தொடர்களிலும் பல வீரர்கள் ஊக்கமருந்து பயன்படுத்தி இருப்பது தெரிய வந்தது.
2014 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் ரஸ்ய அரசே முன்னின்று வீரர்களுக்கு ஊக்கமருந்து வழங்கியமை குறித்த தகவலை அடுத்து, கடந்த ஆண்டு நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் ரஸ்யா பங்கேற்க தடை விதிக்கப்பட்டது.
இந்தநிலையில் தற்போது பெரிய விளையாட்டு தொடர்கள் எதிலும் அடுத்த நான்கு ஆண்டுகள் பங்கேற்க இவ்வாறு ரஸ்யாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும், ரஸ்ய வீரர்கள் ஊக்கமருந்து பயன்படுத்தவில்லை என்பதை நிரூபிக்கும் பட்சத்தில், பொதுவான கொடியின் கீழ் அந்த போட்டிகளில் பங்கேற்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது #ஒலிம்பிக் #சர்வதேசபோட்டி #ரஸ்யா #தடை