இலங்கையில் சுற்றுச் சூழலை அழகுபடுத்தும் வகையில் மேற்கொள்ளப்படுவதாகக் கூறப்படும் வீதியோரச் சுவர்களில் வரையப்படும் ஓவியங்களில் அதிகமானவை சிங்கள, பௌத்த பேரினவாதத்தை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக விமர்சனங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.
மேலும் தமிழர் மற்றும் முஸ்லிம் சிறுபான்மை மக்களை அச்சுறுத்தும் வகையில் இந்தச் சுவரோவியங்கள் காணப்படுவதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது.
ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ பதவிக்கு வந்ததை அடுத்து, சுற்றுச் சூழலை சுத்தப்படுத்தி, அழகுபடுத்தும் நடவடிக்கைகளில் அதிக ஈடுபாடு காட்டி வருகின்றார்.
அந்த வகையில் நாட்டின் பல பகுதிகளிலுமுள்ள வீதியோர பொதுச் சுவர்கள் மற்றும் பொது கட்டடங்களில் ஒட்டப்பட்டிருந்த விளம்பரங்கள் அகற்றப்பட்டு, அவ்வாறான சுவர்களில் ஓவியங்கள் வரையும் நடவடிக்கைகள் பரவலாக இடம்பெற்று வருகின்றன.
அநேகமான இடங்களில் இளைஞர், யுவதிகள் சுயமாக முன்வந்து இவ்வாறான சுவரோவியங்களை வரைகின்றனர்.
ஓவியம் வரைவதற்கான தீந்தை (பெயின்ற்) வகைகளை குறித்த பகுதிகளிலுள்ள உள்ளுராட்சி நிறுவனங்கள், தனவந்தர்கள் மற்றும் உதவும் நிறுவனங்கள் இலவசமாக இவர்களுக்கு வழங்குகின்றன.
இவ்வாறான சுவரோவியங்களை வரையும் நடவடிக்கைகளால் சுற்றுச் சூழல் அழகுபெறுகின்றதாக ஒரு சாரார் தமது பாராட்டுக்களைத் தெரிவித்து வரும் அதேவேளை, பௌத்த மற்றும் சிங்கள பேரினவாதத்தை மிகத் தீவிரமாக வெளிப்படுத்தும் வகையில் இந்த ஓவியங்கள் அமைந்துள்ளதாகவும், சிறுபான்மை சமூகத்தினரை ஓரம்கட்டும் வகையில் இவ்வாறான ஓவியங்களில் கணிசமானவை காணப்படுகின்றன என்றும் மற்றொரு சாரார் விமர்சனங்களை முன்வைக்கின்றனர்.
இவ்வாறு வரையப்படும் சுவரோவியங்களில் அதிகமானவை சிங்கள மற்றும் பௌத்த மக்களின் வரலாறுகளை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளன என்றும், பேரினவாதத்தை உயர்த்திப் பிடிக்கும் வகையில் வரையப்படும் இவ்வாறான சுவரோவியங்கள் – சிறுபான்மை இன சமூகங்களை அச்சுறுத்தும் வகையில் காணப்படுவதாகவும் கூறுகின்றார், ஊடகவியலாளரும் சமூக செயற்பாட்டாளருமான அஸீஸ் நிஸாருத்தீன்.
“மற்றொரு புறம் தமிழர்களும் முஸ்லிம்களும் சுவரோவியங்களை வரையும் இந்த நடவடிக்கையில் சிங்கள மக்களுடன் இணைந்து செயற்படவில்லை என்பதையும் கூறியே ஆக வேண்டும்” எனவும் அவர் கூறினார்.
“ஓவியம் வரைதல் இஸ்லாத்தில் ‘ஹராம்’ (தடுக்கப்பட்டது) என்கிற அடிப்படைவாதச் சிந்தனையுடன்தான் முஸ்லிம்களில் அதிகமானோர் உள்ளனர். அதனால், தற்போது முன்னெடுக்கப்படும் சுவர் ஓவியம் வரையும் நடவடிக்கையில் முஸ்லிம்களின் பங்களிப்பு பெரும்பாலும் இல்லை. தற்போது வரையப்படும் சுவரோவியங்களில் சிங்கள பேரினவாதம் அதிகமாக வெளிப்படுவதற்கு, இதுவும் முக்கியமானதொரு காரணமாகும்” என்றும் அஸீஸ் நிஸாருத்தீன் தெரிவித்தார்.
“இந்த சுவர் ஓவியம் வரையும் நடவடிக்கையில் சிங்களவர்களுடன் முஸ்லிம் யுவதியொருவர் இணைந்து செயற்பட்ட படமொன்று பேஸ்புக்கில் வெளியானது. அதனைக் கண்ட முஸ்லிம்களில் கணிசமானோர் அந்தப் யுவதியை திட்டியும் ஏசியும் கருத்துக்களை பதிவிட்டிருந்தமையினையும் காண முடிந்தது” என்றும் அஸீஸ் நிஸாருத்தீன் கூறினார்.
இலங்கையின் தேசியக் கொடியில் தமிழர் மற்றும் முஸ்லிம் சமூகங்களை அடையாளப்படுத்தும் பொருட்டு காணப்படும் மஞ்சள் மற்றும் பச்சை நிறங்கள் தவிர்க்கப்பட்டு, சிங்கள சமூகத்தை மட்டும் பிரதிபலிக்கும் வகையிலான சிங்கத்தை மட்டும் கொண்ட ‘தேசியக் கொடி’கள், சில இடங்களில் சுவரோவியங்களாக வரையப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது.
இந்த சுவரோவியங்கள் குறித்து முன்வைக்கப்படும் விமர்சனங்கள் தொடர்பில் கருத்துக்களை அறிந்து கொள்ளும் பொருட்டு, அரசியல் செயற்பாட்டாளர் முஜீப் இப்றாகிமுடன் பிபிசி தமிழ் பேசியது.
“கடந்த ஜனாதிபதி தேர்தலை வெல்வதற்காக தாம் பயன்படுத்திய கருவி ‘தேசியவாதம்’ என்று கோட்டாபாய ராஜபக்ஷ தரப்பினர் கூறுகின்றனர். தேசியவாதத்தையும் கடந்த உச்ச நிலையாக ‘பெருந்தேசியவாதம்’ என்கிற ஒன்றும் உள்ளது. ஆனால், ‘தேசியவாதம்’ என்கிற பெயரில் அவர்கள் வெளிப்படுத்தியதெல்லாம் இனவாதம்தான்”.
“இந்த இனவாதத்தை முன்கொண்டு செல்லவதற்கு கடந்த ஈஸ்டர் தாக்குதல் நல்லதொரு சந்தர்ப்பமாக அவர்களுக்கு அமைந்து விட்டது. அந்த அலையைப் பயன்படுத்தி அவர்கள் 14 லட்சம் வாக்குகளால் வெற்றி பெற்று விட்டனர்”.
“இனி, அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையால் வெற்றி பெறவேண்டும் என்கிற ஆசை அவர்களுக்கு உள்ளது. எனவே, ஜனாதிபதி தேர்தலில் அவர்கள் முன்னெடுத்த இனவாத அலையை அப்படியே வைத்திருக்க வேண்டும் என நினைக்கின்றனர். அதற்கான பல செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. அவற்றில் ஒன்றாகவே, இனவாதத்தை வெளிப்படுத்தும் இந்த சுவரோவியங்களைப் பார்க்க முடிகிறது” என்கிறார் முஜீப் இப்றாகிம்.
மேலும், நிறைய பௌத்த பிக்குகள் இந்த சுவரோவியம் வரையும் நடவடிக்கையில் பங்களிப்பு செய்து வருகின்றனர் என்றும் முஜீப் இப்றாகிம் கூறினார்.
ஊடகவியலாளர் அ. நிக்ஸன் இது தொடர்பில் பிபிசி தமிழுக்கு கருத்து வெளியிடுகையில்; “இலங்கை ஒரு பௌத்த நாடு என்பதை நிறுவும் வகையிலேயே, இந்த சுவரோவியங்கள் அமைந்துள்ளன” என்றார்.
“பௌத்த சிங்கள மக்களின் வாக்குகளாலேயே தான் ஜனாதிபதியாக வென்று வந்ததாக கோட்டாபய ராஜபக்ஷ கூறுகின்றார். இனி அதனை நிறுவ வேண்டும். இலங்கை ஒரு பௌத்த நாடு என்பதை நிறுவும் வகையில்தான், இந்த சுவரோவிய செயற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன”.
“தமிழர், முஸ்லிம், கிறிஸ்தவர்கள் போன்ற ஏனைய சமூகத்தவர்கள் இலங்கையில் வாழலாம். ஆனால் பெரும்பான்மை சிங்கள மக்களின் விருப்பங்களுக்கு மாறாக இங்கு வாழ முடியாது என்பதைக் கூறுவதற்காகவே, இந்த சுவரோவியங்கள் தீட்டப்படுகின்றன” என்றும் ஊடகவியலாளர் நிக்ஸன் தெரிவித்தார்.
சிரேஷ்ட சட்டத்தரணியும் மகநெகும நிறுவனத்தின் முன்னாள் தலைவருமான கிங்ஸ்லி ரணவக்க, இந்த சுவரோவியங்கள் வரையும் செயற்பாடுகள் குறித்து கருத்து தெரிவிக்கையில்; “இது மிக நல்ல விடயம்” என்றார்.
மேலும்; “இந்த ஓவியங்கள் இனவாதத்தை வெளிப்படுத்துவதாக இருக்கின்றன என்பது பொய்யானது. எல்லோரும் இலங்கையர்கள் என்று சிந்தித்தால் இந்த மாதிரியான சிந்தனைகள் மேலெழாது. இனரீதியாக சிந்திக்கும் போதுதான் இந்தப் பிரச்சினைகள் தோன்றுகின்றன. இலங்கையர்கள் என சிந்தித்தால் இந்த பிரச்சினை ஏற்படாது. அதனைத்தான் இந்த நாடு எதிர்பார்க்கின்றது” என்றார்.
“இந்தியாவை எடுத்துக்கொண்டால் முஸ்லிம்கள் தமது பெருநாள் தினங்களில் இந்திய தேசியக் கொடியையே வீதியில் எடுத்துச் செல்வார்கள். அதே போல்தான் அங்குள்ள தமிழர்களும்”.
“முதலில் தேசியம் என்கிற உணர்வுக்குள் சிங்களவர்கள், முஸ்லிம்கள் மற்றும் தமிழர்கள் சிந்திக்கவேண்டும். எங்களது நாடு, எங்களது தேசியம் என்று சிந்தித்தால் பிரச்சினைகள் எழாது” என்றும் அவர் கூறினார்.
“கொழும்பு மற்றும் சில பகுதிகளில் வரையப்படும் ஓவியங்கள் இனவாதத்தை வெளிப்படுத்தும் வகையிலும், பௌத்த மதத்தை மட்டும் உயர்த்திப் பிடிக்கும் வகையிலும் காணப்படுகின்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து சட்டத்தரணி கிங்ஸ்லி ரணவக்கவிடம் கேட்டபோது;
“அவ்வாறு இருக்குமானால், அதை வரைந்தவர்களின் மனோநிலையின் வெளிப்பாடாகவே அதைப் பார்க்க வேண்டும். யாரும் திட்டமிட்டு இதனைத்தான் வரைய வேண்டும் என்று சொன்னதாக அறியமுடியவில்லை. அநேகர் சுயாதீனமாக முன்வந்தே இந்தப்பணிகளை மேற்கொள்கின்றனர். எனவே, இனவாதத்தை வெளிப்படுத்தும் வகையில் யாராவது ஓவியங்களை வரைந்திருந்தால், அவர்களின் மனநிலையில் மாற்றங்களைக் கொண்டுவருதல் அவசியமாகும்” என்று அவர் பதிலளித்தார்.
இதேவேளை, இந்த சுவரோவியங்கள் குறித்து தனது மகிழ்ச்சியினையும், அவற்றினை வரையும் நடவடிக்கையில் ஈடுபடடுள்ள இளைஞர்கள் தொடர்பில் – தான் பெருமைப்படுவதாகவும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
‘இளைஞர்களின் முயற்சி, தலைமைத்துவம், மற்றும் குழுப்பணி மூலம், நமது எதிர்காலத்தை மாற்றுவதற்கான வலுவானதொரு அடித்தளம் இடப்பட்டுள்ளது. படைப்பாற்றலை நம் சமுதாயத்தில் ஒரு நேர்மறையான சக்தியாகக் முன்கொண்டு வருகின்றமையானது, உற்பத்தி கலாச்சாரத்தின் ஓர் அடையாளமாகும். இந்த இளைஞர்கள் குறித்து, நான் பெருமைப்படுகிறேன்’ என்று, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அந்த ட்விட்டர் பதிவில் மேலும் தெரிவித்துள்ளார்.