நெதர்லாந்தில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் மியன்மாரின் நடைமுறைத் தலைவர் ஆங் சான் சூச்சீ முன்னிலையாகியுள்ள நிலையில் அவர் மியன்மாரில் ரோஹிஞ்சா முஸ்லிம்கள் மீதான இனப்படுகொலை குற்றச்சாட்டுகள் தொடர்பாக தனது நிலை குறித்து விளக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரக்கைன் மாகாணத்தில் ரோஹிஞ்சா மக்கள் மீது நடத்தப்பட்டதாக கூறப்படும் வன்முறை குறித்து சர்வதேச நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுவது இதுவே முதல்முறையாக உள்ள நிலையில் அங்கு ஆங் சான் சூச்சீ முன்னிலையாவது முக்கியமானதொரு விடயமாக கருதப்படுகின்றது
ரோஹிஞ்சா மக்களை குறிவைத்து நடந்ததாக கூறப்படும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக முஸ்லிம்கள் அதிகம் கொண்ட நாடான காம்பியா சர்வதேச நீதிமன்றத்தில் கடந்த மாதம் இந்த வழக்கினை தொடர்ந்திருந்தது
நம் கண் முன்னே ஓர் இனப்படுகொலை நடந்த போது நாம் அமைதி காத்தது நம் தலைமுறைக்கே தலை குனிவான விஷயம், என காம்பியாவின் நீதித்துறை அமைச்சரும் சட்டமா அதிபருமான அபுபக்கர் எம் டம்பாடோ ஒரு செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
நாட்டின் நலனுக்காக ஆங் சான் சூச்சீ தலைமையிலான வழக்கறிஞர் குழு சர்வதேச நீதிமன்றத்தில் முன்னிலையாகவுள்ளதாக ஆங் சான் சூச்சீயின் அலுவலகம் தெரிவித்திருந்த நிலையில் மியன்மார் அரசாங்கமும், ராணுவமும் இணைந்து இந்த வழக்கை சந்திக்க தயாராகி வருகின்றன.
2017ஆம் ஆண்டு ரோஹிஞ்சா விடுதலைப்படை அமைப்பினர் ரகைனில் காவல்நிலையத்தை தாக்கி பாதுகாப்பு அதிகாரி ஒருவரை கொன்றதற்கு பதிலடியாக மியான்மர் ராணுவம் எடுத்த நடவடிக்கை காரணமாக ரோஹிஞ்சா முஸ்லிம்கள் அண்டை நாடான பங்களாதேசுக்கு தப்பிச் சென்றனர். ஆனால் இது இன சுத்திகரிப்பு என ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
ரோஹிஞ்சா மக்கள் நடத்தப்பட்ட விதம் குறித்து மியன்மார் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும் என 2018ஆம் ஆண்டு சர்வதேச நீதிமன்றம் தெரிவித்த போதும் சர்வதேச நீதிமன்றத்தை உருவாக்குவதற்காக இயற்றப்பட்ட சட்டத்தில் மியன்மார் கையெழுத்திடவில்லை என்பதால் விசாரணைக்கு அந்நாடு ஒத்துழைக்கவில்லை.
இருப்பினும் 1948ஆம் ஆண்டு இனப்படுகொலைக்கு எதிரான ஒப்பந்தத்தில் காம்பியாவும், மியன்மாரும் அங்கமாக இருப்பதால் சர்வதேச நீதிமன்றத்தில் முதல்முறையாக ரோஹிஞ்சாக்கள் நடத்தப்பட்ட விதம் குறித்து மியன்மார் மீதான விசாரணை ஆரம்பமாகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. #சர்வதேசநீதிமன்றத்தில் #ஆங்சான்சூச்சீ #மியன்மார் #ரோஹிஞ்சா