சுவிட்சலாந்து தூதரக அதிகாரி கடத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் இதுவரை முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அறிக்கையை நீதிமன்றத்தில் இன்று (12.12.19) சமர்பிக்கவுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடத்தப்பட்டதாக கூறப்படும் அதிகாரியிடம் இதுவரை 3 முறை வாக்குமூலம் பெற்றுக் கொண்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த வாக்குமூலம் தொடர்பிலும், குற்றப் புலனாய்வு திணைக்களத்தால் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் முன்னேற்றம் தொடர்பிலும் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று விடயங்கள் தெளிவுப்படுத்தப்படவுள்ளன.
சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்சியாக இடம்பெற்று வருவதாகவும் அந்த வகையில் மீண்டும் கடத்தப்பட்டதாக கூறும் அதிகாரியிடம் வாக்குமூலம் பெறப்படவுள்ளதாகவும் குற்றப் புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதுவரையில் பெறப்பட்ட வாக்குமூலங்களின் அடிப்படையில் குறித்த அதிகாரி பரஸ்பரம் வேறுப்பட்ட கருத்துக்களையே தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் சம்பவத்துடன் எந்தவொரு வெளிநபரும் தொடர்புபட்டுள்ளார்களா என்பது குறித்த விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் சட்டநடவடிக்கை எடுக்க எதிர்பார்ப்பதாகவும் நீதி அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.