பிரிட்டனில் நேற்று (12.12.19) நடைபெற்ற பொதுத் தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதில் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள 646 இடங்களில், 362 இடங்களில் கன்சர்வேடிவ் கட்சியும், 203 இடங்களில் தொழிலாளர் கட்சியும், ஸ்கொட்டிஷ் தேசிய கட்சி 48 இடங்களிலும், தாராளவாத ஜனநாயகவாதிகள் அமைப்பு 11 இடங்களிலும்,டெமாக்ரடிக் யூனியனிஸ்ட் கட்சி 8இடங்களிலும் பிற கட்சிகள் 14 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1987ஆம் ஆண்டிற்கு பிறகு கன்சர்வேடிவ் கட்சி பெறும் மிகப்பெரிய வெற்றியாக இது பார்க்கப்படுகிறது. அதேபோல் 1935ஆம் ஆண்டிற்கு பிறகு தொழிலாளர் கட்சி பெறும் மோசமான தோல்வியாக இது அமையும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் அடுத்த பொதுத் தேர்தலில் தனது கட்சியை வழிநடத்தப்போவதில்லை என தொழிலாளர் கட்சியின் தலைவர் ஜெர்மி கோபைன் தெரிவித்துள்ளார். இருப்பினும் அவர் தனது கட்சி தலைமை பொறுப்பிலிருந்து விலகுவது குறித்து எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. தங்கள் கட்சியின் அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ள முக்கிய விஷயங்கள் பிரெக்ஸிட் பிரச்சனையால் மழுங்கடிக்கப்பட்டுவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
தொழிலாளர் கட்சியின் உறுப்பினர்களில் பெரும்பாலானோர் ஜெர்மி கோபைனின் தலைமை மீது குற்றம் சுமத்தியுள்ளனர்.
வெளிவந்துகொண்டிருக்கும் தேர்தல் முடிவுகளின்படி, தொழிலாளர் கட்சியின் வலுவான பகுதிகளாக கருதப்படும் வடக்கு இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆகியவற்றில் தொழிலாளர் கட்சி தோல்வியை சந்தித்துள்ளது. இந்த பகுதிகள் 2016ஆம் ஆண்டு பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தைவிட்டு வெளியேற வேண்டும் என்று வாக்களித்த பகுதிகள். இது போரிஸ் ஜான்சனுக்கு ஒரு மிகப்பெரிய வெற்றியாக தெரிகிறது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்த தேர்தல் ஒரு வரலாற்று தேர்தல் என்று குறிப்பிட்டுள்ள போரிஸ் ஜான்சன், “பிரெக்ஸிட்டை நிறைவேற்றுவதற்கு ஒரு புதிய ஆதரவை இந்த தேர்தல் கொடுத்துள்ளது,” என்று தெரிவித்தார். தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளின்படி பார்த்தால் தொழிலாளர் கட்சியின் வாக்கு சதவீதம் 9 சதவீதம் வரை குறைந்துள்ளது. முன்னதாக ஆளும் கன்சர்வேடிவ் கட்சி பெரும்பான்மை இடங்களை பிடிக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் தெரிவித்தன.
பிபிசி, ஐடிவி மற்றும் ஸ்கை நியூஸ் சேனலால் நடத்தப்பட்ட தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில், கன்சர்வேடிவ் கட்சி பெருன்பான்மையை காட்டிலும் 86 இடங்கள் கூடுதலாக வெற்றி பெறும் என்று தெரியவந்தது.
பிரிட்டனின் வாக்குச் சாவடிகளில் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்புகளில், 2017ஆம் ஆண்டு தேர்தலை காட்டிலும் அதிகமாக வெற்றி பெற்று கன்சர்வேடிவ் கட்சி 368 எம்பிக்களை பெறும் என்று கூறப்பட்டுள்ளது.
தொழிலாளர் கட்சி 191 இடங்களையும், தாராளவாத ஜனநாயகவாதிகள் கட்சி 13 இடங்களையும், ஸ்காடிஷ் நேஷனல் கட்சி 55 இடங்களையும், பிரெக்ஸிட் கட்சி எந்த இடத்தையும் கைப்பற்றாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கன்சர்வேடிவ் கட்சி வெற்றி பெற்றால், போரிஸ் ஜான்சன் மீண்டும் பிரதமராவார்.
வரலாற்றுத் தேர்தல்
“போரிஸ் ஜான்சன் மீண்டும் பிரதமராகும் பட்சத்தில், நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றி கிறிஸ்துமஸ் தினத்திற்குள் பிரெக்ஸிட்டை நிகழ்த்த முனைவார்,” என உள்துறைச் செயலர் பிரிதி பட்டேல் தெரிவித்துள்ளார்.
“போரிஸ் ஜான்சன் வெற்றி பெற்று பெரும்பான்மையை பெரும்பட்சத்தில் அவர் ஐரோப்பிய ஒன்றியத்தைவிட்டு பிரிட்டன் விலகுவதை நிகழ்த்தி காட்டுவார்.” “இதன்மூலம் இந்த தேர்தல் பிரிட்டன் வரலாற்றில் ஒரு முக்கியத் தேர்தலாக அமைகிறது,” என்கிறார் பிபிசியின் அரசியல் பிரிவு ஆசிரியர் லாரா குசன் பெர்க்.
“அதேபோன்று தொடர்ந்து நான்காவது முறையாக தொழிலாளர் கட்சி தோல்வியை சந்தித்தால், அந்த கட்சிக்கும் இது ஒரு வரலாற்று தோல்வியாக அமையும்,” என்கிறார் லாரா. 650 தொகுதிகளுக்காக நடைபெறும் தேர்தலில் பெரும்பான்மைக்கு மொத்தம் 326 இடங்கள் தேவை.
இந்த தேர்தலில் பிரெக்ஸிட்டே முக்கிய அம்சமாக பார்க்கப்பட்டது.
முன்னதாக போரிஸ் ஜான்சன் பிரதமராக பதவியேற்றபோது அக்டோபர் 31ஆம் தேதிக்குள் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறும் என தெரிவித்திருந்தார்.
2017ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில், 318 இடங்களில் கன்சர்வேடிவ் கட்சி வெற்றி பெற்றது. 262 இடங்களில் தொழிலாளர் கட்சி வெற்றி பெற்றது, ஸ்காடிஷ் நேஷனல் கட்சி 35 இடங்களைப் பெற்றது. மொத்தம் 68.7 சதவீத வாக்குகள் பதிவாகின.
`முக்கிய கட்சிகள்`
கன்சர்வேடிவ் கட்சி, தொழிலாளர் கட்சி, தாராளவாத ஜனநாயகவாதிகள், ஸ்காடிஷ் நேஷனல் கட்சி, கிரீன் கட்சி, பிரெக்ஸிட் கட்சி, பிளைட் சிம்ரு ஆகிய கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் இந்த தேர்தலில் போட்டியிட்டனர்.
கன்சர்வேடிவ் கட்சி வெற்றி பெற்று பெரும்பான்மையை பெற்றுள்ள நிலையில் போரிஸ் ஜான்சன், ராணி எலிசபெத்தை சந்தித்து இன்று (வெள்ளிக்கிழமை) ஆட்சியமைக்க உரிமை கோருவார்.