குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட திமுக இளைஞரணியினர் கைது செய்யப்பட்டுள்ளனர். மக்கள் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா இஸ்லாமியர்களுக்கு எதிராக இருப்பதாகவும், இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வழிசெய்யவில்லை எனவும் தெரிவித்து தமிழகத்தின் அரசியல் கட்சிகள் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றன.
இந்த நிலையில் திமுக இளைஞரணி சார்பில் குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்து இன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற நிலையில் சென்னை சைதாப்பேட்டையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திரண்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்தும், பிரதமர் மோடி, உள் துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிராகவும் கண்டன முழக்கங்கள் எழுப்பியதுடன் மசோதாவின் நகலையும் கிழித்து எறிந்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். அதனைத் தொடர்ந்து பேரணியாகச் சென்ற அவர்கள் வீதியின் நடுவில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டதனால் போராட்டக்காரர்களுக்கும் காவல் துறையினருக்கும் இடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதனையடுத்து உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட 500 பேரை கைது செய்த காவல் துறையினர், னைவரையும் பேருந்தில் ஏற்றி நந்தனம் ஒய்எம்சிஏ மைதானம் கொண்டு சென்றுள்ளனர். அதேபோன்று தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்திய திமுக இளைஞரணி மற்றும் மாணவரணியினரை காவல் துறையினர் கைது செய்து தனியார் மண்டபங்களில் தங்கவைத்துள்ளனர். #உதயநிதிஸ்டாலின் #கைது #குடியுரிமைசட்ட #இலங்கைத்தமிழர்களுக்கு