(க.கிஷாந்தன்)
மலையக மக்களின் வாழ்வியல் அம்சங்களுடன் 14 வது சர்வதேச தேயிலை தினம் பல்வேறு நபர்களின் பங்களிப்புடன் 15.12.2019 அன்று ஹட்டனில் அனுஸ்ட்டிக்கப்பட்டது. இதன் போது மலையக மக்களின் வாழ்வினை பிரதிபலிக்கும் கலை கலாசார விழுமியங்கள் உள்ளடங்கிய ஊர்வலம் ஒன்று ´மலையக மக்கள் மாண்பினை உறுதிப்படுத்துவோம்´ எனும் தொனிப்பொருளில் இடம்பெற்றது.
இவ் ஊர்வலம் ஹட்டன் மல்லினைப்பூ சந்தியில் ஆரம்பித்து ஹட்டன் டி.கே.டப்ளியு கலாசார மண்டபம் வரை சென்றன. இவ் ஊர்வலத்தில் பாரம்பரிய கலைகளான தப்பாட்டம், கும்மியாட்டம், காவடி, உள்ளிட்ட பல கலை நிகழ்வுகள் இடம்பெற்றன.
ஊர்வலத்தில் சென்றவர்கள் வீட்டு வேலைக்கு பிள்ளைகளா? வீட்டுடன் விவசாய காணி கொடு போன்ற வாசகங்கள் எழுதிய பதாதைகளையும் காட்சிப்படுத்தியவாறு ஊர்வலத்தில் சென்றனர்.
அதனை தொடர்ந்து அட்டன் டி.கே.டப்ளியு மண்டபத்தில் மலையக மக்களின் வரலாற்றிலே அவர்களின் வாழ்க்கையிலே பெருமை சேர்க்கின்ற ஒரு நாளாகவும் வெற்றி நாளாகவும், ஒரு எழுச்சி நாளாகவும் கொண்டாடப்பட்டன.
இதன் போது மலையக மக்களை கௌரவிக்கும் நிகழ்வுகளும், கலை, கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் தோட்டத்தொழிலாளர்களின் சம்பள போராட்டத்தில் உயிர் நீத்த முல்லோயா கோவிந்தன், சிவனு லட்சுமணன் ஆகியோர் நினைவு கூறப்பட்டனர்.
மலையக மக்களின் மாண்பை உறுதிப்படுத்துவோம் அமைப்பு மற்றும் இலங்கை தேசிய கிறிஸ்தவ சங்கமும் ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்வுக்கு மலையகத்தை சேர்ந்த பல்வேறு பிரிவினரும் கலந்து கொண்டிருந்தனர். #சர்வதேசதேயிலைதின #நிகழ்வு #ஊர்வலம் #மலையக மக்கள்