இரணைதீவில் கடலட்டை கிராமம் ஒன்றை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு துறைசார் அதிகாரிகளுக்கு கடற்றொழில் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவுறுத்தியுள்ளார்.
இரணைதீவை அண்டிய கடல் பிரதேசத்தில சுமார் 60 ஹாக்ரேயர் விஸ்தீரமான கடலட்டை வளர்ப்பிற்கு பொருத்;தமான சூழல் இருப்பது ஆய்வுகளின் மூலம் கண்றியப்பட்டுள்ள நிலையில் அமைச்சர் மேற்குறித்த அறிவுறுத்தலை துறைசார் அதிகாரிகளுக்கு வழங்கியுள்ளார்.
கடந்த பல ஆண்டுகளாக யுத்தம் காரணமாக இடம்பெயர்;ந்திருந்த மக்கள் அண்மையில் இரணைதீவில் மீளக் குடியேறியிருந்தனர். எனினும், கடற்றொழில் நம்பி வாழுகின்ற இரணைதீவு மக்களின் புனர்வாழ்வுக்கு கடந்த அரசாங்கத்தினால் போதிய கவனம் செலுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் குறித்த மக்களின் பிரச்சினைகள் கடற்றொழில் நீரக வள மூலங்கள் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.
இதனையடுத்து, இரணைதீவு கடல் பிரதேசத்தின் சூழலியல் தன்மைகள் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு, நாரா எனப்படும் தேசிய நீரியல் வள ஆராய்ச்சி அபிவிருத்தி முகாமை நிறுவனத்தின் அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தியிருந்தார்.
அதன்படி, கடல் நீர்வாழ் உயிரின வளர்ப்பு, கடல் உயிரியல் கடற்படுக்கை மற்றும் சூழலியல் ஆய்வாளர்கள் கொண்ட குழுவினர் நேரடியாக இரணைதீவு பிரதேசத்திற்கு விஜயம் செய்து ஆய்வுகளை மேற்கொண்டதன் அடிப்படையில் கடல் வளர்ப்புக்கு உகந்த பிரதேசம் அடையாளம் காணப்பட்டுள்ளது.
குறித்த பிரதேசத்தில் கடலட்டை கிராமம் உருவாக்க்படும் பட்சத்தில் இணைதீவில் மீளக் குடியேறியிருக்கும் மக்களின் மக்களின் வாழ்வாதாரத்தில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தும் .
குறிப்பாக அடையாளப்படுத்தப்பட்ட குறித்த பிரதேசத்தில் அமைக்கப்படவுள்ள கடலட்டை கிராமத்தின் மூலம் 350க்கும் மேற்பட்ட இரணைதீவு மக்கள் வேலை வாய்ப்பை பெற்றுககொள்வதோடு வருடாந்தம் சுமார் 3 கோடி ரூபாய் வருமானத்தையும் ஈட்டிக் கொள்ள முடியும் என்று துறைசார் நிபுணர்களினால் மதிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. #இரணைதீவு #கடலட்டைகிராமம் #வேலைவாய்ப்பு #கடற்றொழில்