460
யாழ்.ஸ்ரான்லி வீதியில் ஒற்றை நாள் . இரட்டை நாளில் வாகனங்கள் நிறுத்துவது தொடர்பிலான நடைமுறையை இறுக்கமாக காவல்துறையினரிடம் வலியுறுத்தியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.
யாழ்.ஸ்ரான்லி வீதியில் கஸ்தூரியார் வீதி சந்தி முதல் வெலிங்கடன் சந்தி வரையிலான வீதியின் இரு பக்கங்களும் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படுவதினால் வாகன நெரிசல்கள் ஏற்பட்டு போக்குவரத்து ஸ்தம்பிதம் அடைந்து காணப்பட்டு வருகின்றன. இது தொடர்பில் யாழ்.மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும் நாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதனின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
அது தொடர்பில் அவரிடம் கேட்ட போது
ஸ்ரான்லி வீதியில் வாகனம் நிறுத்தி வைக்கப்படுவது தொடர்பில் எனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. அது தொடர்பில் காவல்துறை அதிகாரிகளுக்கு இந்த விடயத்தை தெரியப்படுத்தினேன்.
வீதியில் ஒற்றை நாள், இரட்டை நாட்களில் வீதியின் ஒரு பகுதியில் வாகனம் நிறுத்துவதற்கான அறிவுறுத்தல் பலகைகள் நாடப்பட்டு உள்ளன. அவற்றை பலரும் கவனத்தில் எடுக்காது வீதியின் இரு பகுதிகளும் வாகனத்தை நிறுத்தி வைக்கின்றார்கள். இதனால் வாகன நெரிசல்கள் ஏற்படுகின்றன.
இனிவரும் காலங்களில் அந்த அறிவுறுத்தல்களை சாரதிகள் கடைபிடிப்பதன் ஊடாக வாகன நெரிசல்களை குறைக்க முடியும். இதனை சாரதிகள் கவனத்தில் எடுக்க வேண்டும்.
இது தொடர்பில் காவல்துறையினருக்கும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளமையால் அவர்களும் அதனை நடைமுறைப்படுத்து வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பார்கள் என தெரிவித்தார்.
அதேவேளை ஸ்ரான்லி வீதியின் கஸ்தூரியார் வீதி சந்தி முதல் வெலிங்கடன் சந்தி வரையிலான வீதியினை ஒரு வழி பாதை வீதியாக மாற்றுவது தொடர்பில் யாழ்.மாநகர சபையில் பிரேரணை ஒன்று நிறைவேற்றப்பட்டு அது கிடப்பில் உள்ளமை குறிப்பிடத்தகது. #ஸ்ரான்லிவீதி #வாகனநிறுத்தல் #நடைமுறை
Spread the love