காரைநகரில் ஐஸ் தொழிற்சாலை ஒன்றை உருவாக்குவதற்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் அறிவுறுத்தப்பட்டது. காரைநகரில் அமைந்துள்ள சீனோர் நிறுவனத்தின் படகு கட்டும் தொழிற்சாலையின் செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பது தொடர்பான கலந்துரையாடல் இன்று (21.12.2019) நடைபெற்றது .
குறித்த கலந்துரையாடலில் கலந்துகொண்ட மீனவர் சமாசங்களின் பிரதிநிதிகள் ஐஸ் தொழிற்சாலையின் அவசியத்தை கௌரவ அமைச்சருக்கு வலியுறுத்தியதை அடுத்து அமைச்சரினால் குறித்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
உடனடியாக சுமார் ஆயிரம் கிலோ கிராம் ஐஸ் உற்பத்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெரிவித்துள்ள அமைச்சர், காலப்போக்கில் உற்பத்தி அதிகரிக்கும் வகையில் அடிப்படை திட்டம் அமைய வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.
அத்துடன், காரைநகர் படகு கட்டும் தொழிற்சாலையின் செயற்பாட்டை மீள ஆரம்பிக்கும் முயற்சியில் நோர்வே தனியார் முதலீட்டாளர்களையும் இணைத்துக் கொள்ள தீர்மானித்துள்ள அமைச்சர், நோர்வே முதலீட்டாளர்களுடனும் கடற்படை உள்ளிட்ட சம்மந்தப்பட்ட தரப்புக்களுடனும் கலந்துரையாடியுள்ளார்.
முதலீட்டாளர்களின் பாரிய திட்டத்தை நடைமுறைப்படுத்த கடற்படை தளபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெறப்பட வேண்டிய நிலையில் அவை தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அமைச்சர் தெரிவித்தார்.
அதேவேளை தற்போதைய வளங்களைப் பயன்படுத்தி படகு திருத்துதல் மற்றும் சிறியளவிலான படகுகளை கட்டுதல் போன்ற செயற்பாடுகளை உடனடியாக ஆரம்பிப்பது தொடர்பிலும் துறைசார்ந்தோரினால் ஆலோசிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. #காரைநகர் #படகுகட்டும்தொழிற்சாலை #ஐஸ்தொழிற்சாலை