தமிழ் தேசியக் கூட்டமைப்பை உருவாக்குவதற்கு ஆதரவு வழங்கியவர்கள் சிவராம் ஜெயானந்தமூர்த்தி போன்றவர்கள் என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். அக்கரைப்பற்று ஆலயடிவேம்பு கலாச்சார மண்டபத்தில் வெள்ளிக்கிழமை (20.12.19) மாலை இடம் பெற்ற மக்களுடனான கலந்துரையாடலில் ஈடுபட்ட அவர்,
“புலம் பெயர் தேசங்களில் இருந்து பல இளைஞர்கள் என்னை தொடர்பு கொண்டு தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியை கட்டி எழுப்புங்கள் நாங்கள் அவற்றுக்கான அனைத்து உதவிகளையும் செய்கின்றோம் என தெரிவிக்கின்றனர் அந்த அளவிற்கு ஒரு சக்தி அணிதிரண்டு வருகின்றது.கூட்டமைப்பு ஒரு நாள் உடையும் அதற்கு மாற்று கட்சியாக தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி வளரும். தமிழ் தேசியக் கூட்டமைப்பை உருவாக்குவதற்கு ஆதரவு வழங்கியவர்கள் சிவராம், ஜெயானந்தமூர்த்தி போன்றவர்கள்.
ஜெயானந்தமூர்த்தியும் நானும் சிறுவயது முதல் ஒன்றாக பழகியவர்கள் நான் யுத்தத்திற்காக ஆயுதம் தூக்கி சென்றவேளை ஜெயானந்த மூர்த்தி பேனையை தூக்கி எழுத்துக்களால் சமூகத்தை செதுக்கச் சென்றார். சிவராம் ஜெயானந்தமூர்த்தி போன்றவர்கள் துணிந்து தமிழ் சமூகத்திற்கு நடந்த அநீதிகளை எழுத்துக்கள் மூலம் வெளிப்டுத்தியவர்கள்.
தொப்பிகல காட்டிற்குள் என்னை சந்தித்த சிவராம் மற்றும் ஜெயானந்தமூர்த்தி ஆகியோர் எமது மக்களுக்கு நடக்கும் அநீதிகளை வெளியுலகுக்கு கொண்டு வரவேண்டும் அதற்கு எமது பாராளுமன்றைப் பெரிதும் பயன்படுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்கள். அந்த வகையில் ஒரு கட்சியை உருவாக்கி எமது பிரதிநிதித்துவத்தை அனுப்பி வைப்போம் அவர்கள் நமது பிரச்சனைகளை அங்கு எடுத்துரைப்பார்கள் என ஆலோசனை தந்தார்கள். குறிப்பாக ஐரிஸ் போராட்டமும் இவ்வாறே இடம்பெற்றது. அவர்களின் அரசியல் பிரதிநிதிகளும் பாராளுமன்றத்தில் இருந்ததனால் உலகிற்கு வெளிக் கொணரப்பட்டது. அதன் பின்னர் இது குறித்து விடுதலைப் புலிகளின் தலைவரிடம் நான் எடுத்துரைத்தேன்.அதன் மூலமே தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது என தெரிவித்தார்.
இச்சந்திப்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சேனாதிராஜா ஜெயானந்தமூர்த்தி அம்பாறை மாவட்ட தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி ஆதரவாளர்கள் உடனிருந்தனர்.
பாறுக் ஷிஹான்