கிளிநொச்சி மாவட்டத்தில் மணல் அகழ்வதற்கான அனைத்து அனுமதி பத்திரங்களும் மறு அறிவித்தல் வரை இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த அறிவித்தலை கிளிநொச்சி முல்லைத்தீவு பிராந்திய பிரதி காவல்துறை மா அதிபர் மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தின் அனைத்து காவல் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளுக்கும் அனுப்பி வைக்குமாறு மாவட்டச் செயலகத்திடம் தெரிவித்துள்ளதாகவும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் மு. சந்திகுமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதுதாவது சுற்றுச் சூழல் பாதிப்புக்களை கருதி கனியவளத் திணை்க்களத்தினால் இத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆனாலும் இத்தீர்மானம் இதுவரை நடைமுறைக்கு வந்ததாக தெரியவில்லை. எனவே தற்போதும் மாவட்டத்தின் பல இடங்களில் சட்டவிரோத மணல் அகழ்வு மிக மோசமாக இடம்பெற்று வருகிறது.
எனவே இதனை கட்டுப்படுத்தும் வகையில் கனியவளத் திணைக்களத்தின் தீர்மானத்தை உடனடியாக சம்மந்தப்பட்ட அனைத்து தரப்பினர்களுக்கும் அனுப்பி வைக்குமாறு தான் மாவட்டச் செயலகத்தை கோரியுள்ளதோடு, இது தொடர்பில் கிளிநொச்சி முல்லைத்தீவு பிராந்திய பிரதி காவல்துறை அதிபருடன் கலந்துரையாடவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து கிளிநொச்சி மாவட்டச் செயலகம் மணல் அகழ்வதற்கான அனுமதி பத்திரங்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ள விடயத்தை கடிதம் மூலம் பிரதி காவல் மா அதிபருக்கு அறிவித்துள்ளதோடு, கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளுக்கும் பிரதியிட்டுள்ளனர்.
இந்த விடயம் தொடர்பில் கனியவளத் திணைக்களத்திடம் தொடர்பு கொண்டு வினவிய போது மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள சுழல் பாதிப்புக்களை தொடர்ந்து முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் மற்றும் தீர்மானங்களுக்கு அமைய மறு அறிவித்தல் வரை மணல் அகழ்வதற்கான அனுமதி பத்திரங்கள் அனைத்தும் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.
எனவே மாவட்டத்தின் எந்த இடத்திலும் தற்போது மணல் அகழ்வு மேற்கொள்ள முடியாது. இருந்தும் எவரேனும் மணல் மணல் அகழ்வில் ஈடுப்பட்டால் அது சட்டவிரோதமாகும் எனத் தெரிவித்துள்ளனர்