கஜகஸ்தானில் இன்று (27) காலை விமானமொன்று கட்டிடத்தின் மீது விழுந்து விபத்துக்குள்ளாகியதில் 15 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெக் ஏர் நிறுவனத்துக்குச் சொந்தமான குறித்த விமானம் இன்று காலை அல்மாட்டி விமான நிலையத்திலிருந்து தலைநகர் நுர்-சுல்தானிற்கு புறப்பட்டுச் சென்ற போதே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதில் 93 பயணிகள், 5 விமான ஊழியர்கள் என மொத்தம் 98 பேர் பயணித்துள்ள நிலையில் விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே அப்பகுதியிலிருந்த இரண்டு மாடிக் கட்டிடத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் அந்த கட்டிடம் இடிந்து விழுந்ததுடன் விமானமும் நொறுங்கியுள்ளது. விமானம் புறப்படும்போது போதிய உயரத்துக்கு மேல் செல்லாததால் அங்கிருந்த கொன்கிரீட் வேலி ஒன்றின் மீது மோதி பின்னர் இரண்டு மாடிக் கட்டிடத்தில் விழுந்து நொறுங்கியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விமானம் விபத்துக்குள்ளானது தெரிய வந்ததும், பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் மீட்புப் படையினர் விமானத் துறை அதிகாரிகள் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்,
இதில் 60 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக விமானத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்ற அதேவேளை தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. #கஜகஸ்தான் #விமானம் #விபத்து