Home இலங்கை சிங்கள பௌத்தமயமாக்கலும் யாழ் மாநகரசபையும்…

சிங்கள பௌத்தமயமாக்கலும் யாழ் மாநகரசபையும்…

by admin

யாழ்ப்பாணத்தின் மத்தியில் அனுமதி இன்றி நடைபெறுகின்ற சிங்கள பௌத்த மயமாக்கல் தொடர்பாக ஆராய்வதற்கும் எதிர்காலத்தில் இவ்வாறான நடவடிக்கைகள் தொடராமல் இருப்பதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஆராய்வதற்குமென மாநகர கட்டளைச் சட்டத்தின் பிரகோரகாம் விசேட பொதுக்கூட்டத்தை கூட்டுமாறு கேட்டுக் கொண்டிருந்தோம்.

அந்தவகையில்

யாழ்.மாநகர சபையின் ஆளுகைக்கு உட்பட்ட பிரதேசத்தில் உள்ள யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு முன்பாக சிறைச்சாலைகள் நிர்வாகம் பௌத்த சிங்கள மயமாக்கலைப் பிரதிபலிக்கின்ற சின்னங்கள் மற்றும் கட்டுமானங்களை சட்ட விதிமுறைகளுக்கு முரணான விதத்தில் தன்னிச்சையாக அமைத்து வருகின்றது.

இது தொடர்பில் வீதி அபிருத்தி அதிகார சபை பல தடவை அறிவித்தும் அதனை செயற்படுத்தாமல் சட்ட விதிமுறைகளை மதிக்காமல் தொடந்தும் செயற்படுவது கண்டிக்கத்தக்க விடயமாகும்.

அத்துடன் 1975 ஆண்டு பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி இயற்றப்பட்டு வர்த்தகமானியில் அறிவிக்கப்பட்ட

Naming of streets and the Control of the erection of Monuments law No 4 of 1975 சட்டத்தின் 7வது பிரிவின் பிரகாரம்

மாநகர கட்டளைச்சட்டத்தில் 35 ஏ இல் மாநகர எல்லைக்குள் நினைவுச்சின்னங்கள் அமைப்பது தொடர்பாக பின்வருமாறு கூறப்பட்டுள்ளது.

நினைவுச்சின்னம் அமைப்பது நிர்வகித்தல் தொடர்பாக ஏதேனும் நபர் ஒருவரினால் கோரப்படும் வேண்டுகோளின் பிரகாரம் அமைச்சரினால் வழங்கப்படும் முன்னங்கீகாரத்துடனொழிய எந்த ஒரு நபரினாலும் அரசுக்கு உரித்தான ஏதேனும் காணியில் அல்லது ஏதேனும் உள்ளுராட்சி மன்றத்திற்கு சொந்தமான ஏதேனும் காணியில் நினைவுச் சின்னம் அமைக்கப்படல் ஆகாது.

இப் பந்தியில் நினைவுச்சின்னம் எனின் வாழ்கின்ற அல்லது இறந்த ஏதேனும் நபரை நினைவு கூருவதற்காக அமைக்கப்படும் ஏதேனும் நினைவுச் சின்னம்இ தூண்இ கம்பம் அல்லது ஏதேனும் நிர்மாணிப்பு அடங்கியது. ஆனால் சுடலையில் அல்லது சவக்காலையில் அமைக்கப்படும் ஏதேனும் நிர்மாணிப்பு அல்லது கல்லறை சமாதி அல்லது சிலுவை இதற்குள் அடங்காது என்று உள்ளது.

இதன் பிரகாரம் சுடலை மற்றும் சவக்காலை தவிர்ந்த ஏனைய அரசுக்கு உரித்தான ஏதேனும் காணியில் அல்லது உள்ளுராட்சி மன்றத்திற்கு சொந்தமான ஏதேனும் காணியில் அமைச்சரின் அனுமதியின்றி நினைவுச் சின்னம் அமைக்கப்பட முடியாது.

இச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு 30-06-2015 அன்று அன்றைய உள்ளூராட்சி அமைச்சின்னுடையதும் முதலமைச்சரின் அமைச்சின்னுடையதும் செயலாளர் உள்ளூராட்சி மன்ற அதிகார எல்லையினுள் நினைவுச் சிலை அமைத்தல் தொடர்பாக வட மாகாண உள்ளூராட்சி ஆணையாளருக்கு ஒரு அறிவுறுத்தலை விட்டிருந்தார் அதில்

உள்ளூராட்சி மன்ற அதிகார எல்லையினுள் நினைவுச்சிலை அமைத்தல் தொடர்பாக

1975 ஆண்டின் 4 ஆம் இலக்க சட்டத்தின் 7 ஆவது பிரிவிற்கமைவாக நினைவுச்சிலையினை அமைப்பதற்கான அனுமதியினை கௌரவ முதலமைச்சர்அவர்கள் வழங்குவதற்கு நினைவுச்சிலை தொடர்பாக கிடைக்குப்பெறும் விண்ணப்பத்தினை குறித்த பிரதேச சபையானது பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர், உள்ளூராட்சி ஆணையாளர் உள்ளூராட்சி அமைச்சு என்ற நிர்வாக கட்டமைப்பிற்கூடாக பின்வரும் ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும்

1.சிலை நிறுவும் விண்ணப்பதாரரின் விண்ணப்பம்இ குறித்த பிரதேச சபையின் கோரிக்கை கடிதம்

2.சபையின் உரிய தீர்மானப் பிரதி

3.குறித்த விடயம் தொடர்பாக பத்திரிக்கையில் பிரசுரித்த நறுக்குத்துண்டு

4.பத்திரிக்கையில் விளம்பரப்படுத்திய பின்னர் பொதுமக்களின் ஆட்சேபனை கிடைக்கப்பெறவில்லை என்று உறுதிப்படுத்தின செயலாளரின் கடிதம்

5.தெளிவான அமைப்பு வரைபடம்

6.பொது அமைப்புக்களின் அனுமதி(தேவையேற்படின்)

என்றுள்ளது.

இதன் பிரகாரம் இவ்வாறான எந்த செயற்பாடுகளுக்கும் உட்படாமல் தன்னிச்சையாக சட்டங்களை மீறி நினைவுச்சின்னங்களை யாழ்.சிறைசாலை நிர்வாகம் நிறுவ முற்பட்டமை தெளிவு

வீதி அபிவிருத்தி சபை மற்றும் யாழ்.மாநகர சபையின் சட்ட விதிகளை கருத்திற் கொள்ளாது சிறைச்சாலையின் முன்பக்கத்தில் காணப்படும் நடைபாதை மற்றும் பூந்தோட்டத்தனை அதன் மதில் கட்டுமானங்களை மேற்கொள்ளப்பட்ட நிலையில்

நினைவுச்சின்னங்கள் அமைப்பதற்கான அனுமதிக்கான எந்த ஒரு கோரிக்கையும் முன்வைக்காமலேயே இலங்கை அரசினால் இயற்றப்பட்ட சட்டங்களையே மீறி அதனை நிறுவ முயற்சித்தமையும் அதனை திறப்பதற்கு மேற்கொண்ட நடவடிக்கை களும் ஏற்புடையது அல்ல.

இலங்கைச் சட்டங்களை மதிக்காமல் சட்டவிதிகளை மீறி செயற்பட்டவர்கள் என்று நீதிமன்றத்தினால் இலங்கைச் சட்டங்களுக்கு அமைவாக தண்டனை விதிக்கப்பட்டு சிறைக் கைதிகளாக அவர்களை புனர்வாழ்வு அளிக்கின்ற சிறைச்சாலைகள் நிர்வாகமே அதே சட்டங்களை மதிக்காமல் மீறி நினைவுச் சின்னங்களை சட்டங்களை மீறிய குற்றச்சாட்டுக்காக தண்டனை அனுபவிக்கின்ற சிறைக்கைதிகளைக் கொண்டே நிறுவமுற்பட்டமை மிகவும் கண்டனத்தற்குரியது.

நினைவுச்சின்னங்களை அமைப்பதனை நாங்கள் எதிர்க்கவில்லை. அனைத்தும் உரிய அனுமதிகள் பெறப்பட்டு உரிய முறைப்படி அமைக்கப்படவேண்டும்.

அத்துடன் நினைவுச் சின்னங்கள் வெறுமன நினைவுச்சின்னங்களாகவே இருக்க வேண்டும். ஏங்களுடைய வரலாற்றுப் பாரம்பரியங்களை தீர்த்துப்போகச் செய்கின்ற அல்லது வேறு ஒரு மாறுபட்ட வரலாற்றினை திணக்கின்றவையாக அவை இருத்ததல் கூடாது.

இந்த நினைவுச் சின்னங்கள் தொடர்பில் நாம் பயம் கொள்ளவற்கு பல காரணங்கள் உள்ளன. கடந்த காலங்களில் இவ்வாறான சின்னங்கள் மற்றும் பௌத்த விகாரைகள் எமது தமிழர்பிரதேசங்களை சிங்கள மயமாக்கலுக்கு உட்படுத்தவே பிரயோகிக்கப்பட்டன. எமது வரலாற்று தொன்மையான இடங்கள்இ தமிழர்களின் பாரம்பரிய இடங்களில் இவ்வாறானவற்றை நிறுவி மெல்ல மெல்ல அதன் இனவிகிதாசாரத்தினை திட்டமிட்டு மாற்றியமைத்து தமிழர்களின் பூர்வீங்க நிலங்களை பௌத்த சிங்கள மயமாக்கலுக்கு உட்படுத்தியதன் மூலம் எமது பாரம்பரிய நிலங்கள் பறிபோன பல வரலாறுப் படிப்பினைகள் எமக்கு இருக்கின்றன. இந் நிலையில் கடந்த காலங்களில் எமது பிரதேசங்கள் பறிபோன வரலாற்றினையும் திரும்பிப் பார்க்க வேண்டிய தருணம் இது.

இன்று பொலனறுவை என்று அழைக்கப்படும் பிரதேசம் முன்பு தமன்கடுவ என அழைக்கப்பட்டது 1901ம் ஆண்டுக் குடிசன மதிப்பீட்டின்போது இப் பிரதேசத்தில் எகொட பற்று , மேட பற்று , சிங்கள பற்று என்று மூன்று நிர்வாகப்பிரிவுகள் காணப்பட்டன. அதில் தௌபற்றில் தமிழரும் மேட பற்றில் முஸ்லீங்களும் சிங்கள பற்றில் சிங்களவர்களும் பெரும்பான்மையாக வாழ்;ந்தனர்.

1901ம் ஆண்டு குடிசன மதிப்பீட்டின்போது எகொட பற்றும் மேட பற்றும் இணைந்த நிர்வாகப் பிரிவின் மொத்த சனத்தொகையில் தமிழர்களின் பங்கு 28 சதவீத மாகவும் முஸ்லீம்களின் பங்கு 55 சதவீதமாகவும் காணப்பட்டது. இப் பிரதேசத்தில் வாழ்ந்த சிங்களவர்களின் பங்கு 9 சதவீதமாக மட்டுமே இருந்தது.

ஆனால் 1971ம் ஆண்டு குடிசன மதிப்பீட்டின்போது எகொட பற்றும் மேட பற்றும் இணைந்த நிர்வாகப் பிரிவின் மொத்த சனத்தொகையில் தமிழர்களின் பங்கு 8 சத வீதமாகவும் முஸ்லீம்களின் பங்கு 16 சதவீதமாகவும் மட்டுமே காணப்பட்டது. அதேநேரத்தில் இப் பிரதேசத்தில் வாழ்ந்த சிங்களவர்களின் பங்கு 76 சதவீதமாக இருந்தது

இது அந்த பிரதேசங்களில் அடுத்து அடுத்த மேற்கொள்ளப்பட்ட சிங்கள குடியேற்றங்கள் மற்றும் பௌத்தமயமாக்கலால் இந் நிலை ஏற்பட்டது.

இக் குடியேற்றத் திட்டங்களின் விளைவாக இப்பிரதேசத்திலிருந்து தமிழர்கள் முற்றாக அகற்றப்பட்டனர்.

இறுதியாக எடுக்கப்பட்ட 2011ம் ஆண்டுக் குடிசன மதிப்பீட்டின்படி பொலநறுவை மாவட்டத்தில் வாழும் மொத்த தமிழர்களின் தொகையே 8546 பேர் மட்டுமே. இது மாவட்டத்தின் மொத்த சனத்தொகையில் 2 சதவீதம்.

1901ம் ஆண்டு பொலநறுவை மாவட்டத்தின் ஒரு நிர்வாகப் பிரிவு தமிழர்களுக்கே உரியதாக இருந்தது. இன்று அம் மாவட்டத்தில் தமிழர்கள் காணமலே போய்விட்டனர்.

1940 களில் பொலநறுவை மாவட்டத்தில் பரீட்சித்துப் பார்க்கப்பட்ட இத்திட்டம் பூரண வெற்றியடைந்ததைத் தொடர்ந்து 1950களில் கிழக்கு மாகாணத்தில் கல்லோயாஇ அல்லைஇ கந்தளாய் குடியேற்றத் திட்டங்களை நடை முறைப்படுத்தி அங்கிருந்தும் தமிழர்களை அகற்றியது.

1901 – 2012 காலப்பகுதியில் கிழக்கு மாகாணத்தில் தமிழ்மக்களின் தொகை 96,926 பேரிலிருந்து 617,295 பேராக அதிகரிக்கஇ சிங்களமக்களின் தொகை 8778 பேரிலிருந்து 359,136 பேராக அதிகரித்திருந்தது. இதன்படி 1901 – 2012 காலப்பகுதியில் கிழக்கு மாகாணத்தில் தமிழ்மக்களின் தொகை 537 சதவீதத்தினால் மட்டுமே அதிகரித்திருக்கஇ சிங்களமக்களின் தொகை 3991 சதவீதத்தினால் அதிகரித்திருந்தது. இதன்விளைவாக 1901 ம் ஆண்டு கிழக்குமாகாணத்தின் மொத்த சனத்தொகையில் 55.8 சதவீதமாக இருந்த தமிழ்மக்களின் பங்கு 2012ம் ஆண்டு 39.7 சதவீதமாக வீழ்ச்சியடைந்தது. அதேநேரத்தில் சிங்களமக்களின் பங்கு 5.1 சதவீதத்திலிருந்து 23.2 சதவீதமாக அதிகரித்தது.

திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள்இ மற்றும் பௌத்த மயமாக்கல் மூலம் இந் நிலை உருவாக்கப்பட்டது. இதற்காக பல சாணக்கியம் நிறைந்த திட்டங்கள் முன்னகர்த்தப்பட்டன அதில் வெற்றியும் கண்டனர் அதற்கு நல்ல உதாரணம் ஒன்றும் இருக்கின்றது

1972 ஆம் ஆண்டு திருகோணமலை மாவட்டத்தில் உள்ள சில பிரதேசங்கள் அனுராதபுர மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது அவ்வாறு இணைக்கப்படும் போது அப் பிரதேசத்தின் மொத்த சனத்தொகை 4651 அதில் சிங்களவர்களின் எண்ணிக்கை 672 பேர் பத்தாண்டுகளின் பின்னர் 1982 ஆம் ஆண்டு இப் பிரதேசங்கள் மீண்டும் திருகோணமலை மாவட்டத்துடன் இணைக்கப்படும் போது இப் பிரதேங்களின் மொத்த சனத்தொகை 18,084 அதில் சிங்களவர்களின் எண்ணிக்கை 12,050. இக் காலப்பகுதியில் இப் பிரதேசங்களில் தமிழர்களின் எண்ணிக்கை 62 சதவீதத்தினாலும் முஸ்லீங்களின் தொகை 48 சதவீதத்தாலும் அதிகரிக்க சிங்களவர்களின் தொகையோ 1693 சதவீத்தினால் அதிகரித்தது.

1972 ஆம் ஆண்டு இப் பிரதேசங்கள் அனுராதபுட மாவட்டத்துடன் இணைக்கும் போது ஒவ்வொரு 100 தமிழருக்கும் 83 சிங்களவர்கள் காணப்பட்டனர். ஆனால் 1982 ஆம் ஆண்டு இப் பிரதேசங்கள் மீண்டும் திருகோணமலை மாவட்டத்துடன் இணைக்கும் போது ஒவ்வொரு 100 தமிழருக்கும் 918 சிங்களவர்கள் காணப்பட்டனர். இதனைத் தொடர்ந்தே திருகோணமலை மாவட்டத்தின் வட மேற்குப் பகுதியில் 217 சதுர கிலோமீற்றர் பரப்புடைய பதவிசிறிபுர என்ற ஒரு சிங்கள உதவி அரசாங்க அதிபர் பிரிவு உருவாக்கப்பட்டது.

இவ்வாறான செயற்றிட்டங்கள் மூலம் திருகோணமலை மாவட்டத்தில் 1901 ஆம் ஆண்டு குடிசனமதிப்பீட்டில் மொத்த சனத்தொகையின் 60 வீதமாக பெரும்பான்மையாக வாழ்ந்த தமிழர்கள் 2012 ஆம் ஆண்டு குடிசனமதிப்பீட்டில் மொத்த சனத்தொகையின 32.3 வீதமாக்கப்பட்டு 3ஆம் தரப்பிரஜைகள் ஆக்கப்பட்டனர்.

எமது பூர்வீக நிலங்களை சிங்கள பௌத்த மயமாக்குவதற்கு மாறிமாறி வந்த சிங்கள தேசத்து அரசுகள் பல் வேறு செயற்றிட்டங்களை முன்னகர்த்தினர். முதலில் பௌத்த வரலாற்றினைப் பிரதிபலிக்கின்ற சின்னங்களை நிறுவுதல் நிலங்களை கையகப்படுத்தல் பின்னர் பௌத்த விகாரைகளை நிறுவுதல் அதனை நிர்வகிக்க மதகுருமார்கள குடியமர்ததுதல் பின்னர் அவர்களுக்கு உதவி செய்வதற்கு என உதவியாளர்களை குடியமர்த்துதல் பின்னர் அவர்களின் குடும்பங்களை குடியமாத்துதல் என்று அதைச்சுற்றி திட்டமிட்ட குடியேற்றங்களை நிறுவி என்று இனவிகிதாசாரத்தை மாற்றியமையத்ததன் மூலம் நாம் எமது பாரம்பரிய நிலங்களை இழந்த இவ்வாறான வரலாறுகள் பல கூறலாம்.

வரலாற்றில் இருந்து நாங்கள் பாடங்கள் படிக்கவில்லை என்றால் வரலாறு எம்மை மன்னிக்காது என்பர்.

அண்மையில் கூட நீராவியடி பிள்ளாயர் ஆலயத்திலும் பௌத்த மயமாக்கலுக்கான சின்னங்களை நிறுவியதாலும் மேலும் நிறுவ முயற்சிப்பதனாலும் அது பாரிய பிரச்சனைகளை உருவாக்கியுள்ளது ஒரு பௌத்த துறவியின் உடலத்தை அங்கு தகனம் செய்யும் அளவுக்கு நிலமை மோசமானது.

வடக்கு கிழக்குப்பிரதேசங்களில் நிறுவப்படுகின்ற பல விகாரைகள், பௌத்த வரலாற்றினை பிரதிபலிக்கின்ற சின்னங்கள் நிலங்களை ஆக்கிரமிக்கும் நோக்குடன் தமிழர்தேசத்தை சிதைத்து பௌத்த மயமாக்கலுக்கு உட்படுத்தும் நோக்குடனேயே நிறுவப்படுகின்றன. புத்த பெருமானின் போதனைகளை அவரின் உபதேசங்களை மதிக்கின்றோம். ஆனால் அவரின் போதனைகளுக்கு மாறாக அனைத்தையும் துறந்து சென்ற புத்த பெருமானைக் கொண்டு எமது பூர்வீக நிலங்களை பௌத்த மயமாக்கலுக்கு உட்படுத்தி திட்டமிட்டு இனவிகிதாசாரத்தால் மாற்றியமைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

அந்த வகையில் வரலாற்றில் இருந்து நாம் கற்றுக்கொண்ட பாடத்தின் அடிப்படையில் சிறைச்சாலை வாயிலில் நிறுவ முற்பட்டவற்றை வெறுமென சின்னங்களாக பார்க்க முடியவில்லை. அது யாழ்.மாநகரத்தினுள்ளான சிங்கள பௌத்த மயமாக்கலுக்கான ஆரம்ப புள்ளியாகவே பார்க்கப்படவேண்டியுள்ளது.

ஏன்எனில் மாதகல் கடற்கரையில் சங்கமித்தை வந்து இறங்கியதாக கூறப்படும் நிலையில் அங்கு அதைப் பிரதிபலிக்கின்ற சின்னங்களை நிறுவி இன்று அதனை ஒரு முழுமையான பௌத்த மயமாக்கலுக்கு உட்படுத்திய நிலையில் அதே சங்கமித்தை தொடர்பான பௌத்த வரலாற்றினை பிரதிபலிக்கின்ற சின்னங்களை பண்ணைக்கடற்கரையில் சிறைச்சாலைக்கு முன்பாக ஏன் நிறுவவேண்டும். தேவையில்லாத இடங்களில் தேவையில்லாத வரலாற்றினை ஏன் புகுத்த முற்பட வேண்டும்?

அந்தவகையில் அன்று பொலனறுவையில் ஆரம்பித்த சிங்கள பௌத்த மயமாக்கல்கள் அதனைத் தொடர்ந்த அதன் மூலமான பிரதேச இழப்புக்கள் யாழ்.நகர்வரை வந்து விட்டது என்ற செய்தியையே இவ் சின்னங்கள் நிறுவும் செயல் சுட்டிக் காட்டுக்கின்றது.

இனவிகிதாசாரங்களை மாற்றியமைக்கின்ற, எமது பூர்வீக நிலங்களில் பௌத்த மயமாக்கலுக்கான சின்னங்களை நிறுவுதல், அவர்களின் வரலாற்றினை திணித்தல்இ போன்ற தமிழத்தேசத்தின் அதன் தனித்துவத்தினை கடந்த காலங்களில் அழித்தது போல் அழிக்க நினைக்கின்ற அத்தனை செயற்பாடுகளுக்கும் எதிராக குரல் கொடுக்க வேண்டியதும் எதிர்க்கவேண்டியதும் எங்கள் ஒவ்வொருவரினதும் கடமையாகும்.

அந்த வகையில் இவ் கௌரவ சபையிடம் நாங்கள் கேட்டுக்கொள்வது.

1. எந்த ஒரு அனுமதியும் இல்லாமல் யாழ்.மாநகர சபை எல்லைக்குள் சிறைச்சாலைக்கு முன்பாக நிறுவப்படுகின்ற பௌத்த சின்னங்களை நிறுவாமல் இருக்க நடவடிக்கை எடுத்தல் வேண்டும்

2. இது போன்ற சின்னங்கள் யாழ்.மாநகர எல்லைக்குள் எங்கேயும் அனுமதி இன்றி நிறுவுவதை தடை செய்தல்

3. இச் சின்னங்களை நிறுவதற்கு அனுமதிக்கு விண்ணப்பித்தால் தமிழர்களின் வீர வரலாற்றுகளை தமிழின் தொன்மையை அதன் பெருமையை பிரதிபலிக்கின்ற சின்னங்களுக்கு முன்னுரிமை கொடுத்து அதனை நிறுவி அதன் பிற்பாடு இதனை நிறுவுவதாக இருந்தால் அவ் அனுமதியினை பரிசீலிக்கலாம்.

4. யாழ்.மாநகர எல்லைக்குள் இவ்வாறான பௌத்தமயமாக்கலுக்கான சின்னங்கள் கௌரவ சபையின் அனுமதியின்றி அமைக்கப்படு மாயின் அதனை தடுத்து நிறுத்துவதுடன் அதனை உடன் அகற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

என்பவற்றை தீர்மானங்களாக எடுக்குமாறு இவ் கௌரவ சபையை கேட்டுக் கொள்ளுகின்றோம்

யாழ்.மாநகர சபைக்கு இது தொடர்பில் அதிகாரம் இல்லை என்ன எண்ணக்கரு ஏற்புடையதாக தெரியவில்லை. யாழ்.மாநகர சபைக்கு நினைவுச் சின்னங்களை அமைப்பதற்கு அனுமதி வழங்கமுடியாது அதற்கு அதிகாரம் இல்லை என்பது சரி ஆனாhல் உள்ளுராட்சி அமைச்சரின் 30.06.2015 ஆம் திகதி கடிதத்தின் பிரகாரம் அமைச்சர் அவ் அனுமதியினை வழங்குவதற்கு சபையின் உரிய தீர்மானப் பிரதி தேவை அந்தவகையில் சபையின் அங்கீகாரம் இல்லாமல் அமைச்சர் அதனை வழங்க முடியாது. அதைக் கருத்திற் கொண்டு இவ் உயரிய சபை செயற்படவேண்டும்.

அதையும் மீறி மாநகர சபைக்கு அதிகாரம் இல்லை என்று எமது கௌரவ சபையின் அதிகாரங்களை கேள்விக்குட்படுத்தி தன்னிச்சையான முறையில் பௌத்த மயமாக்கலுக்கான சின்னங்களை நிறுவுவோம் என்று யாரும் செயற்படுவார்களேயானால்

நாம் என்ன வகையான ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்று எம்முடைய எதிரியே தீர்மானிக்கின்றான் என்கின்ற மாவோ இன் கருத்துப்படி. சிங்கள பௌத்த பேரினவாதம் எங்களுடைய தமிழ்த்தேசத்து நிலங்களினை இவ் வகையான சின்னங்களை நிறுவி மெல்ல மெல்ல பௌத்தமயமாக்கலுக்கு உட்படுத்தி அதனப் பறித்தெடுகின் செயற்பாடுகள் தொடருமாயின் நாம் எமது மிகவும் தொன்மையான தமிழ் வரலாற்றினை அதன் பெருமைகளை எடுத்துகூறுகின்ற நினைவுச் சின்னங்களை எமது தாயக மண்ணை பறிபோதலை தடுக்கும் நோக்குடன் எமது பிரதேசங்கள் எங்கும் நிறுவும் நிலை ஏற்படலாம் என்பதனையும் தெரிவித்துக் கொள்ளுகின்றோம். ஏன்எனில் சிங்கள பௌத்த பேரினவாதத்திற்கு எவ்வாறு எங்கள் நிலங்களை பறித்தெடுகின்ற இனவிகிதாசாரத்தை மாற்றியமைக்கின்ற பௌத்த மயமாக்கலை உட்படுத்த அக்கறை இருக்கின்றதோ அதே அக்கறை எமது தாயகப்பிரதேசங்கள் பறிபோகமல் தடுப்பதில் எமக்கு இருக்கின்றது.

யாழ்.மாநகர எல்லையும் தாண்டி எமது இனவிகிதாசாரத்தை மாற்றியமைக்கும் எச் செயலுக்கும் எமது பூர்வீக நிலங்களை அதன் வரலாறுகளை மாற்றியமைக்கின்ற எச் செயற்பாட்டையும் கட்சி பேதங்களைக் கடந்து ஒன்று பட்டு ஒர்அணியாக எதிர்க்க முன்வரவேண்டும் எனவும்

இது போன்ற தீர்மானங்களை அனைத்து உள்ளுராட்சி சபைகளும் தங்களுடைய பிரதேசங்களின் எதிர்காலம் கருதி அவர்களது கௌரவ சபையில் தீர்மானங்களாக எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளுகின்றோம்.

வரதராஜன் பார்த்திபன்

மாநகர சபை உறுப்பினர்

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More